

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 12 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கு முன் 2017 தேர்தலில், பாஜக 44 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வென்றிருந்தன. ஐந்தாண்டுகளாக பாஜக ஆட்சி செய்துவரும் இந்த மாநிலத்தின் 12 மாவட்டங்களில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. 1971இல் உருவான இந்த மாநிலத்தில் 1977 தேர்தல் தொடங்கி காங்கிரஸும் பாஜகவும் மாறிமாறி ஆட்சிசெய்துவருகின்றன. இந்த நிலையில், ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜக இருக்கிறது; எதிர்க்கட்சியான காங்கிரஸுடன் ஆம் ஆத்மியும் இந்த முறை களம் கண்டிருக்கிறது.
மற்ற வட மாநிலங்களைப் போல் இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அதிகம் கலந்துகொள்ளாத நிலையில், நவம்பர் 5 ஆம் தேதிதான் தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். ஆனால், உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பிரதமருக்கு முன்பாகவே இரண்டு கூட்டங்களை முடித்துவிட்டார்.
பாஜகவின் வெற்றிவாய்ப்பு: முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மீண்டும் முதல்வர் வேட்பாளராக பாஜகவால் முன்னிறுத்தப்பட்டுள்ளார். அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இம்மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் பாஜகவுக்குப் பலம்தருவதாக உள்ளது. ராணுவத்தில் சேர அதிக மக்கள் ஆர்வம் காட்டும் மாநிலங்களில் இமாச்சலமும் ஒன்று. இதனால், ‘ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்’, அரசுப் பணியாளர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலாக்குவது போன்ற முக்கியக் கோரிக்கைகள் இங்கு வலுவாக உள்ளன. சமீபத்தில் அறிமுகமான ‘அக்னிவீர்’ திட்டத்துக்கும் இங்கு எதிர்ப்பு நிலவுகிறது. இவற்றை மேடைகளில் பேசிச் சமாளிக்கும் பாஜக தலைவர்கள், தங்கள் ஆட்சியில் அமைந்த எய்ம்ஸ் மருத்துவமனையும் மருந்து உற்பத்தித் தொழில் பூங்காவையும் சாதனைகளாக முன்னிறுத்துகின்றனர். ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகள், எட்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு போன்றவை பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சமீப நாட்களாகத் தேர்தல் இலவசங்களுக்கு எதிரான கருத்துகளைப் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வெளிப்படுத்திவருகின்றனர். இருப்பினும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு சைக்கிளும், கல்லூரி மாணவிகளுக்கு இருசக்கர வாகனமும் இலவசமாக அளிப்பதாகத் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது பாஜகவின் மீதான விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது. அதே நேரம், இந்த ‘இலவச’ வாக்குறுதிகள் தமக்கு வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடும் என்று பாஜகவினர் நம்புகின்றனர்.
சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைவு எனினும் இமாச்சலத்திலும் இந்துத்துவ அரசியலுக்கு வலிமை உண்டு. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக பாஜக அறிவித்துள்ளது. 130 ஆண்டுகள் பழமையான ராதா சவுமி எனும் சமய மடத்தின் ஆதிக்கம் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணாவைப் போல் இமாச்சலத்திலும் அதிகம். இமாச்சலத்தின் 12 மாவட்டங்களில் இதன் 24 மடங்கள் உள்ளன. இங்கு பிரச்சாரத்துக்கு வரும் முன் பிரதமர் மோடி, ராதா சவுமி சமய இயக்கத்தின் தலைவர் பாபா குரீந்தர் சிங் தில்லானை பஞ்சாப்பின் அமிர்தசரஸில் சந்தித்தார்.
காங்கிரஸின் கதை: கடந்த தேர்தலில் காங்கிரஸ் சுமார் 20 தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், இவற்றில் அதிக தீவிரம் காட்டி வெல்ல முயல்கிறது. கட்சியின் செல்வாக்குமிக்க ஆளுமையான ராகுல் காந்தி ‘தேச ஒற்றுமை யாத்திரை’யில் இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தில் பங்குபெறவில்லை. இதன் காரணமாக பாஜகவால் ராகுல் விமர்சிக்கப்பட்டுவருகிறார். தேர்தல் பொறுப்பு முதன்முறையாக பிரியங்கா வதேராவிடம் அளிக்கப்பட்டுள்ளது. சிம்லாவின் சாப்ராவில் தன் வீடு அமைந்திருப்பதால் அடிக்கடி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் பிரியங்கா, இதற்கு முன் இங்கு அரசியல் கூட்டங்களில் பங்கேற்றதில்லை. புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும் முக்கியப் பிரசாரகராகிவிட்டார். ஆனால், சோனியா காந்தி பிரச்சாரத்துக்கு வரவில்லை.
மாநில எதிர்க்கட்சித் தலைவரான முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில முன்னாள் தலைவரான சுக்வேந்தர் சிங் சுக்கு உள்ளிட்ட சிலர் கட்சியின் பிரபலமான முகங்களாக உள்ளனர். இப்படிப் பலர் இருப்பதால், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது காங்கிரஸின் பெரும் குறையாகப் பார்க்கப்படுகிறது. கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலாக்கம், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு, குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை ஆகிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது, தேர்தலில் சாதகமான முடிவுகளைப் பெற்றுத் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சி மாறுமா?: இமாச்சல் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால், ஆளும் ஆட்சிக்கு எதிரான கோபம், தேர்தல் வேளைகளில் அதிகரித்துவிடுகிறது. இதன் காரணமாக, மாற்றுக் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பளிக்கும் வழக்கம் நிலவுகிறது. இதற்கு அஞ்சும் பாஜகவுக்குத் தோள்கொடுத்தார் பிரதமர் மோடி. இவரது பிரச்சாரத்தில், ‘ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளின் ஆட்சியை மாற்றும் தவறை இனி செய்ய வேண்டாம்’ என அறிவுறுத்தினார். பிரதமர் இப்படிக் குறிப்பிட்டதற்கான காரணம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிந்தது.
கடந்த தேர்தலில் இமாச்சலத்தின் மொத்த வாக்குகளில் பாஜக 18,46,432, காங்கிரஸ் 15,77,450 பெற்றன. இந்த வாக்குகளின் வித்தியாசம் 2,68,982. சுயேச்சைகள் 2,39,989 மற்றும் நோட்டாவில் 34,232 வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் 1.85 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். எனவே, இங்கு வளர்ந்து வரும் ஆம் ஆத்மி, அதிக எண்ணிக்கையிலான சுயேச்சை வேட்பாளர்களால் இரண்டு பெரிய கட்சிகளுக்கு இந்த முறையும் இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இமாச்சலத்துடன் குஜராத்தின் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 8இல் வெளியாக உள்ளன. இம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவின் தாக்கமும் 2024 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ப்புகள் உள்ளன. - ஆர்.ஷபிமுன்னா, தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in