Published : 22 Nov 2016 10:21 AM
Last Updated : 22 Nov 2016 10:21 AM

வெள்ளை என்பது புதிய கறுப்பு!

பணத்தை அல்ல; அமைப்பேயை மாற்ற வேண்டும்

கையிலிருக்கும் செல்லாத செலாவணியைக் கொடுத்துவிட்டு, புதிய செலாவணிக்கு மாறக் காத்திருக்கும் வேதனையான காலகட்டம் இது. ரூ. 500, 1,000 நோட்டுகள் செல்லாதவை ஆகிவிட்டன. ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இதைச் சரிசெய்ய 50 நாட்கள் ஆகும் என்றார் பிரதமர் மோடி. அதன் பிறகு, நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை அவர் சொல்லவில்லை. ஒருவேளை, நல்ல அரசை உருவாக்கும் பாதையில் நாம் போய்க்கொண்டிருக்கலாம் அல்லது இடைக்கால வேதனையில் தொடர்ந்து தவித்துக்கொண்டிருக்கலாம்.

புழக்கத்திலிருந்த காகிதப் பணத்தில் 85% உயர் முகமதிப்பு கொண்ட ரொக்கத்தை அப்புறப்படுத்திவிட்டோம். அதன் விளைவுகள் பணப் பரிவர்த்தனைகளில் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வது கடினமான செயல் அல்ல. எதிர்பார்த்தபடியே பொருளாதாரம் சுணங்கிவருகிறது.

இழந்தது திரும்பாது

அரசாங்கத்தின் அறிவிப்பு வருவதற்கு முன்னதாக இரவில் நடைபெற்ற படுவேகமான தங்கம் மற்றும் உயர் மதிப்புள்ள நுகர் பொருள்களின் விற்பனைக்குப் பிறகு, வியாபார மந்தம் ஏற்பட்டுவிட்டது. சாதாரணச் சந்தைகளில் மட்டுமல்ல, மேல்தட்டு மக்களுக்கான உயர் வணிக வளாகங்களிலும்தான். அன்றாடத் தேவைகளுக்கு எடுக்கும் பணப் பரிமாற்றங்களை இழந்தது இழந்ததுதான், மறுபடி திரும்பாது.

காகிதப் பணத்துக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. தேசிய அரசியல் தலைமை யும் ரிசர்வ் வங்கியின் நிதி நிபுணர்களும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டனர். நாட்டைத் தூய்மைப்படுத்துவதற்காக மக்கள் இத்துயரங்களைத் தாங்கிக்கொள்வார்கள் என்கிறார் மோடி.

இழந்த வேலை நாட்களை மீண்டும் உருவாக்க முடியாது. பாதிக்கப் பட்டவர்களுக்கும் அது தெரியும். இது விஷயத்தில் ரிசர்வ் வங்கி, “ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடச் சொன்ன” பிரான்ஸ் தேசத்து அரசி போல நடந்துகொண்டது. “ரொக்கம் இல்லாவிட்டால் என்ன, பண அட்டைகள் அல்லது இணையவழி வங்கி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றது. இது பொறுப்பான பதில் அல்ல.

கோட்டைவிட்ட ரிசர்வ் வங்கி

ஒருவருக்கு என்ன மாதிரியான வருமானம் வருகிறது என்பதைப் பொறுத்து, தற்போது நடைபெறுகிற பண மாற்ற நடவடிக்கை பற்றிய அவரது பார்வை இருக்கும். உதாரணமாக, வட இந்தியாவில் பெரும்பாலான சிறுநகர, கிராமப்புறக் குடும்பங்கள் உள்ளூர் பொருளாதாரத்தின் அன்றாடக் கூலியில் வாழ்பவை. அவர்களிடம் கேட்டால், என்ன சொல்வார்கள்? எங்களை இந்த நடவடிக்கை ரத்தம் சிந்தவைக்கிறது என்பார்கள்.

இந்தத் துயரங்களை முன்கூட்டி ஊகித்திருக்க முடியுமா? நிச்சயமாக. இந்தக் கொள்கையைப் புத்திசாலித்தனமாக உருவாக்க முடிந்திருந்தால். உயர் முக மதிப்பு கொண்ட நோட்டுக்களுக்கு, குறைந்த முக மதிப்பு கொண்ட நோட்டுகளைத் தயாரித்து மாற்றம் செய்யும் வேலையை முன்னதாகவே ரிசர்வ் வங்கி தொடங்கியிருக்க முடியும். இதைச் செய்வதில் ரிசர்வ் வங்கி கோட்டை விட்டுவிட்டது. நாட்டின் மொத்தக் காகிதப் பணத்தின் மதிப்பு மிகப் பெருமளவு உயர் முக மதிப்பு கொண்ட நோட்டுகளில் உள்ளது என்பதை அறிந்த யாரும் இதைத்தான் செய்திருப்பார்கள். குறைந்த முக மதிப்பு கொண்ட நோட்டுகளில் நடக்கும் பரிமாற்றங்கள்தான் நமது பொருளாதாரத்தில் பெரும்பான்மைப் பங்கு வகிக்கிறது என்பதை ஒட்டுமொத்தமாக அலட்சியப்படுத்திவிட்டதைத்தான் இது பிரதிபலிக்கிறது.

சில்லறைத் தட்டுப்பாடு

இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள், ஒரு நாளைக்கு ரூ.500-க்கும் குறைவாகவே சம்பாதிப்பவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பெரிய ஆய்வுகள் ஏதும் தேவை இல்லை. இந்தச் சூழ்நிலையில், ரூ.1,000 நோட்டுகளைத் தடைசெய்துவிட்டு, ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்துவது என்பது அரசின் அப்பட்டமான புரிதலின்மையையே வெளிக்காட்டுகிறது. சராசரி இந்தியனின் தினக்கூலி, சராசரியான பணப் பரிமாற்றங்களைக் கணக்கில் கொண்ட பணப் புழக்கம், நோட்டுகளின் மதிப்பு ஆகியவை ஒரு சமநிலைக்கு வர வேண்டியது தற்போது மிக மிக அவசியம். குறைந்த முக மதிப்பு கொண்ட நோட்டுகள் தேவையான அளவுக்கு இல்லை என்ற பிரச்சினை சில வருடங்களுக்கு முன்பே ரிசர்வ் வங்கியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

ஊழலை மையப் பிரச்சினையாக் கியிருக்கிறார் மோடி. இதற்கு ஒரு கோணத்தில் மட்டுமல்ல, பல கோணங்களில் விளக்கமளிக்கலாம். ஒரு சில தொழிலதிபர்கள் அரசு விதித்த விதிகளையெல்லாம் மீறி, மற்ற தொழிலதிபர்களையெல்லாம் வளர்ச்சியில் மிஞ்சினார்கள். இதை யாராலும் மறுக்க முடியாது. இதைப் பேசுவதால், சில அரசியல் ஆதாயமும் கிடைக்கலாம். தனக்கு உதவும் அரசியல் வர்க்கத்துக்கும், எல்லா செயல்களுக்கும் பாதுகாப்பு அரணாகச் செயல்படும் அதிகார வர்க்கத்துக்கும் தங்களுடைய நன்றிக் கடனைச் செலுத்துவதற்காக கறுப்புப் பணத்தை உருவாக்கும் நிலைக்குத் தொழிலதிபர்கள் வந்தார்கள்.

ஊழலற்ற நிவாகம்

இது புதுமையான வாதம் அல்லதான்; அதனால்தான் இந்தியப் பொருளாதாரத்தை ‘லைசென்ஸ்-கோட்டா-பர்மிட் ராஜ்’என்று ராஜாஜி வர்ணித்தார். அந்த நிலை மாற வேண்டும், சுதந்திரப் பொருளாதாரம் அவசியம் என்றார். இதற்குக் காரணம், நேருவின் சோஷலிசப் பொருளாதாரக் கொள்கைதான் என்று தவறாக அவர் நினைத்துவிட்டார். இது நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் நமக்கு விட்டுச் சென்ற காலனியாதிக்க ஆட்சியின் நிர்வாக மரபு. இதனால் பலன் அடைந்த அதிகார வர்க்கமும் அரசியல் தலைவர்களும் இதை அப்படியே பராமரித்து வளர்த்துவந்துள்ளனர்.

ஊழலை ஒழிப்பதற்காக, தேவை என்றால் 1947-ம் ஆண்டு கோப்புகளைக்கூட தேடிச் செல்வேன் என்றார் மோடி. அப்படி அவர் ஆராய்ந்தால், அரசு இயந்திரமும் வழிமுறைகளும்தான் கறுப்புப் பணம் உருவாக உதவுகின்றன என்ற உண்மையைக் கண்டுபிடிப்பார். இதுதான் பிரதான காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் யாரும் வியப்படையத் தேவையில்லை. இப்படி ஆராய்ந்து அந்தக் காலத்துக்கும் சேர்த்து ‘முன்தேதியிட்டு’ வரி விதிக்க மாட்டார் என்று நம்புவோம். அப்படிச் செய்தால், இப்போதைய நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய காலம் மேலும் நீடித்துக்கொண்டே போகும்.

மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவை மிகவும் பிடிக்கும் என்கிறார்கள். நகர நாடான சிங்கப்பூரை வளப்படுத்த லீ குவான் யூ முதலில் சீர்படுத்தியது அரசு நிர்வாகத்தைத்தான். ஊதியத்தைத் தாராளமாக வழங்கி, நேர்மையாக நடக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தினார். அவர்கள் ஊழல் செய்வதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடிந்ததில்லை!

- புலப்ரெ பாலகிருஷ்ணன், ஹரியாணாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

சுருக்கமாகத் தமிழில்: த.நீதிராஜன்

© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x