Published : 01 Nov 2016 08:48 AM
Last Updated : 01 Nov 2016 08:48 AM

மொழியுணர்வு நீடிக்கிறதா?

தமிழ்நாட்டுக்கு இன்று வைர விழா

இந்தியா இன்று உள்ளவாறு 60 ஆண்டுகளுக்கு முன் இல்லை. நாடு பிரிட்டனின் காலனியாக இருந்த வரை, பிரிட்டிஷாரின் நிர்வாக வசதியை மட்டுமே மனதில் கொண்டு மாநில எல்லைகள் பிரிக்கப்பட்டிருந்தன. பண்பாடு, மொழி அடையாளங்களையோ, மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பற்றியோ பிரிட்டிஷார் கவலைப்படவில்லை. அன்றாட வாழ்வில் மக்களை இணைத்து இழையோடும் மொழியை, செயற்கையாய்த் தடுத்து, தனது நலன்களுக்கு ஏற்ப வளைத்து மாற்றியது ஏகாதிபத்தியத்துக்கு நலன் கொடுத்தது.

அவர்கள் காலத்திலேயே பிரச்சினை தொடங்கிவிட்டது. 1895-ல் முதன்முதலாக ஒடிசா மக்கள் மொழிவாரி மாநிலக் கோரிக்கைக்காகக் களம் கண்டனர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே 1936-ல் ஒடிசா மொழிவழிப் பிராந்தியமானது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள், மக்களின் இந்தத் தேவையை உணர்ந்தனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த மொழிவழி இணைப்பை வலுப்படுத்தும் கொள்கையை ஏற்றனர்.

1920-களில் காந்தியின் காங்கிரஸ் கட்சி, மொழியை அடிப்படையாகக் கொண்டு தனது நிர்வாகத்தை அமைத்தது. 1928-ல் அமைக்கப்பட்ட நேரு கமிட்டி தன் அறிக்கை யில் ‘விடுதலைக்குப் பிறகான இந்தியா, மொழிவழி மாநிலங்களைக் கொண்டிருக்கும்’ என்று தெரிவித்தது. அந்த அறிக்கையில் பிற பகுதிகளோடு முரண்பட்டவர்கள் கூட மொழிவழி மாநிலங்களை ஏற்றனர்.

தியாகத்தால் உருவான மாநிலம்

இந்தியா விடுதலை பெற்றதும் மொழிவாரி மாகாண ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழுவோ மொழிவழி மாநிலங்கள் ஏற்படுத்தினால், அது நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படுத்துமென விநோதமான விளக்கத்தை முன்வைத்தது. தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி மொழிவழி மாநிலக் கோரிக்கையை ஏற்கவில்லை. மெட்ராஸ் ராஜதானியை அப்படியே தட்சிணப் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்றார் ராஜாஜி. தேசிய இனங்களின் விருப்பங்கள் குறித்த கவலை காங்கிரஸ் கட்சிக்கு இல்லாது போனது. தமிழ்நாடு, ஐக்கிய கேரளம், விசாலாந்திரம், சம்யுக்த மகாராஷ்டிரம் ஆகிய முழக்கங்களை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. இந்திய ஒன்றியத்தில் உள்ள ராஜ்யங்களின் எல்லைகளைப் பொதுமொழி அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும், தாய்மொழி வழிக் கல்வி உரிமை, இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது என்ற கொள்கைத் திட்டத்தோடு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் போராட்டக் களம் கண்டனர். இதன் தொடர்ச்சியாகவே சுதந்திர இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைந்தன. 1956 நவம்பர் 1 முதல் மொழிவழி மாநிலங்கள் அமலாகின.

தமிழ்நாட்டோடு கன்னியாகுமரி மாவட் டத்தை இணைத்திடும் போராட்டத்தில் தாக்கப்பட்டு 16 பேர் உயிர் நீத்தனர். தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக ஒரு நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. தமிழ்நாடு பெயர்சூட்டலை அன்றைய காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. மெட்ராஸ் என்ற பெயர் புகழ்பெற்றிருந்ததை அதற்குக் காரணமாக காங்கிரஸ் குறிப்பிட்டபோது ‘மெட்ராஸ் நகரத்துக்குள்ள முக்கியத்துவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், ஒரு நாட்டின் முக்கியத்துவத்தை, நகரத்தின் முக்கியத்துவத்துக்காகக் குறைக்கக் கூடாது’ என்றார் சட்டமன்றத்தில் ஜீவா.

1956 ஜூலை 27-ல் காந்தியர் சங்கரலிங் கனார், மதராஸ் ஸ்டேட் என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்ற வேண்டும் என்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். விருதுநகர், தேசபந்து மைதானத்தில் போராட்டம் தொடங்கியபோது காமராஜர்தான் முதலமைச்சர். 70 நாட்களுக்கும் மேல் உண்ணாவிரதம் தொடர்ந்தது. காங்கிரஸ் அமைச்சர்கள் அங்கு வந்தபோது 12 கோரிக்கைகளில் ஒன்றையாவது நிறைவேற்றுங்கள் என்று கேட்டார் சங்கரலிங்கனார். 70 நாட்களைத் தாண்டி உண்ணாவிரதம் சென்றபோது, சில காங்கிரஸ் கட்சியினர் பந்தலைப் பிய்த்து எறிய வந்தனர். அவருக்குக் கம்யூனிஸ்ட்கள் பாதுகாப்பளித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்க மணி, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அவரைச் சந்தித்து, ‘உங்கள் கோரிக்கையை நாங்கள் முன்னெடுக்கிறோம், மக்கள் போராட்டத்தின் மூலம்தான் வெல்ல முடியும், உண்ணாவிரதத்தைத் தயவுசெய்து கைவிடுங்கள்’ என்று கோரிக்கை வைத்தார்கள். இருப்பினும், அவர் தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். 77 நாட்களுக்குப் பிறகு அவரது உயிர் பிரிந்தது. மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, “நான் இறந்த பிறகு என் உடலை கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படையுங்கள், அவர்கள்தான் இறுதி நிகழ்ச்சி நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார் என்பது நெகிழ்ச்சியான நிகழ்வு. கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்புடன் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு இறுதி நிகழ்ச்சி நடத்தியது.

நாடாளுமன்றத்தில் விவாதம்

சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று சட்டபூர்வமாகப் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட பி.ராமமூர்த்தி கட்சியில் முன்முயற்சி எடுத்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான அரசமைப்புத் திருத்தத் தனிநபர் மசோதாவை, கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்ற மேலவையில் பூபேஷ் குப்தா அறிமுகம் செய்தார். இது 1963-ல் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பி.ராமமூர்த்தி சிறையில் இருந்தார். மசோதாவை வலியுறுத்திப் பேசிய பூபேஷ் குப்தா, “தியாகி சங்கரலிங்கனாரின் போராட்டத்தையும் அவரது கொடுமையான மரணத்தையும் மனதில் நினைத்துப் பார்த்து இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” என்று கோரிக்கை வைத்தார். மசோதாவை வரவேற்றுப் பேசிய அறிஞர் அண்ணா, “இதை முழு மனதுடனும், முழுமையாகவும், உண்மையாகவும் ஆதரிக்கிறேன்” என்று கூறினார்.

தமிழே முதன்மை

நீண்ட போராட்டங்களுக்குப் பின், 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரான பிறகு அவரது முன்முயற்சியினால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர்சூட்டல் நடந்தேறியது. இந்தப் போராட்டங்கள் பெயருக்கானவை மட்டுமல்ல. மொழிவழி மாநிலம், பெயர் ஆகிய கோரிக்கைகளுக்குப் பின்னணியில் - ஆட்சி மொழியாகத் தமிழ், நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழ், கோயில்களில் வழிபாட்டு மொழியாகத் தமிழ், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விகளில் என அனைத்திலும் பயிற்று மொழியாகத் தமிழ் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளும் இருந்தன.

1915 முதல் தேசிய இயக்கம் உச்சத்தை எட்டிய காலம் தொட்டே மொழிப் பற்றும் இணைந்தே வளர்ந்தது. சமகாலத்தில், தமிழிலே பாரதியும், ஆந்திரத்தில் வீரேசலிங்க பந்துலுவும், வங்கத்தில் ரவீந்திரநாத் தாகூரும், இந்துஸ்தானில் மைதிலேஸ்வரன் குப்தாவும் தோன்றியது - ஏகாதிபத்திய எதிர்ப்பும் மொழிப் பற்றும் இணைந்தே தோன்றியதைக் காட்டுகின்றன. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழில் பேசுவதை வலியுறுத்திய ராமமூர்த்தி, “நம் நாடு சுதந்திரம் அடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஐந்து வருடங்களாகியும் நாம் இந்த அந்நிய பாஷையை வைத்துக்கொண்டு, அந்நிய பாஷையில் பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை” என்றார். சட்டமன்றத்தில் அந்த நிலை மாறிவிட்டது. மற்ற அனைத்திலும் தமிழே முதன்மை என்று ஆக்கிவிட்டோமா? வைர விழாவில், வைரம்போல் வலிமை பெற வேண்டிய சிந்தனை இது.

- ஜி.ராமகிருஷ்ணன், தொடர்புக்கு: gr@tncpim.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x