Published : 16 Jul 2014 09:00 AM
Last Updated : 16 Jul 2014 09:00 AM

சமூகநீதிக்கு இதுவும் ஒரு வழி

எல்லோரும் கவனிக்கத் தவறிவிட்ட நிதிநிலை அறிக்கையின் 102-வது பத்தி சொல்வது என்ன?

சிறு, குறு தொழில் பிரிவுகள் தொடங்குமாறு அரசு ஊக்குவிப்பதுதான் சமூக நீதிக்கு வழிவகுக்கும். 1970-களில் மலேசியா இந்த மாதிரியான பிரிவுகளை ஊக்குவித்ததால் வெறும் 2%-லிருந்து 1990-ல் 20% ஆக இவை உயர்ந்துவிட்டன. இதைத்தான் நிதிநிலை அறிக்கையின் 102-வது பத்தியும் வலியுறுத்துகிறது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றிய பெரும்பாலான விவாதங்கள் அந்நிய நேரடி முதலீடு, முதலீட்டு ஊக்குவிப்பு, வரிச் சலுகைகள் போன்றவற்றைச் சுற்றியே நடைபெறுகின்றன. நிதிநிலை அறிக்கையின் பத்தி 102 குறித்து யாருமே அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் சரிபாதியைப் பற்றியது!

பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்கியமான முத்திரை, நிதியமைச்சர் அருண் ஜேட்லி தயாரித்துள்ள நிதிநிலை அறிக்கையின் 102-வது பத்தியில் இடம்பெற்றிருக்கிறது: ‘சிறு, குறு தொழில் பிரிவுகள்தான் நம்முடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பு. நம்முடைய தொழில்துறை உற்பத்தி, வேலைவாய்ப்பின் பெரும் பகுதி அவற்றால்தான் சாத்தியமாகியிருக்கிறது. சேவைத் துறையில் உள்ள பெரும்பாலான அலகுகளும் சிறு, குறு பிரிவுகள்தான். இவற்றில் பெரும்பாலானவை தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்குச் சொந்தமானவை. எனவே, இந்தத் துறையினர் எப்படி நிதி திரட்டி இவற்றை நிர்வகிக்கின்றனர் என்பதை ஆராய்வது அவசியம். நிதித் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்பிரிவுகளுக்கான துறை, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை நியமித்து, மூன்று மாதங்களுக்குள் அந்தக் குழுவின் பரிந்துரைகளைப் பெற உத்தரவிட முடிவுசெய்திருக்கிறேன்.’

இதன் முக்கியத்துவம்தான் என்ன?

‘கிரடிட் சூசி' என்ற உலகப் புகழ்வாய்ந்த வங்கி, முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஆசிய -பசிபிக் பகுதி நாடுகளை ஆராய்ந்து தயாரித்துள்ள அறிக்கை இதைப் புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும்: ‘இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்துமே வெறும் ‘வால்'கள்தான். இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் பெருநிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 50%, வேலைவாய்ப்பில் வெறும் 10%. தேசிய அளவில் நுகரப்படும் பொருள்களில் வெறும் 15%தான் இந்தியத் தொழில்நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) தொழில் பிரிவுகளும் 1991 தொடங்கி 20 ஆண்டுகளில் மொத்தம் 37 லட்சம் பேருக்குத்தான் வேலை கொடுத்துள்ளன.’

பதிவுசெய்யப்படாதவை ஆனால் முறையானவை

தொழிற்சாலைச் சட்டப்படி தங்களைப் பதிவுசெய்துகொண்டுள்ள இந்திய நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து 1 கோடியே 40 லட்சம் தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை தருகின்றன. அப்படியானால், கோடிக் கணக்கான இதர இந்தியர்களுக்கு வேலை தரும் தொழில்பிரிவுகள் எவை? அமைப்புரீதியாகத் திரட்டப்படாதவை என்றும் பதிவுசெய்யப்படாதவை என்றும் அறியப்படும் சிறு, குறு தொழில்பிரிவுகள்தான் அவை. மேலை நாடுகளில் முறைசாராத தொழில்பிரிவுகள் என்றாலே திருட்டுத்தனமாகத் தொழில்செய்பவை என்று பொருள். அரசாங்கத்தின் வரிவிதிப்புக்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்படாமல் இருப்பதற்காகத் தந்திரமாகச் செயல்படும் தொழில்பிரிவுகள் அவை. ஆனால், இந்தியாவில் ‘முறைசாராத தொழில்பிரிவுகள்' என்றால் வளர்ச்சியடையாத, அரசினால் எந்தவித உதவியும் கிடைக்கப்பெறாத பிரிவுகள் என்று பொருள்.

முறைசாராத துறை எவ்வளவு பெரியது?

இந்தியாவில் முறைசாராத துறையில் நிலவும் வேலைவாய்ப்பில் 84% இந்த சிறு, குறு நிறுவனங்களில்தான் கிடைக்கிறது. இந்தியாவின் முறைசாராத துறையில் 5.77 கோடி சிறு, குறு தொழில்பிரிவுகள் இருப்பதாக 2011-ல் எடுக்கப்பட்ட தேசியப் புள்ளிவிவரத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. 1991 முதல் இவை வேகமாக வளர்ந்துவருகின்றன. 1998 முதல் கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டன. இதற்கு மாறாக, தாராளமயம் - உலகமயம் என்ற கொள்கைகள் அமலுக்கு வந்தபிறகு, முறையான தொழில்துறையில் வேலைவாய்ப்பு 8% முதல் 7% வரை குறைந்துவிட்டது. முறைசாராத தொழில்பிரிவுகள் என்று இதுவரை இகழ்ச்சியாக அழைக்கப்பட்ட இந்தப் பிரிவை, ‘சொந்தக் கணக்குத் தொழில்பிரிவுகள்’ என்று தேசியப் புள்ளிவிவரத் துறை முதல்முறையாக அடையாளப்படுத்தியிருக்கிறது. இவையெல்லாம் சுயதொழில் பிரிவுகள் என்றும் அறியப்படுகின்றன.

சராசரி வருமானம் அதிகம்

இந்தத் துறையில் பெரும்பாலான பிரிவுகள் கிராமப் பகுதிகளில்தான் செயல்படுகின்றன. தேசியப் பொருளாதாரத்துக்கு ரூ.6.28 லட்சம் கோடியை அளிக்கின்றன. இவற்றில் 70% கிராமங்களில் சுமார் 11 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கின்றன. ஒரு தொழிலாளி சராசரியாக ரூ.58,000 மதிப்புக்கு உற்பத்திசெய்கிறார். ஊதியத்துக்கு அமர்த்தப்படும் தொழிலாளி சராசரியாக ரூ.47,000 மதிப்புக்கு உற்பத்திசெய்கிறார். இது, 2009-10-ல் கணக்கிடப்பட்ட சராசரி தேசிய நபர்வாரி வருமானத்தைவிட அதிகம். கிராமப்புறங்களில் கணக்கிடப்பட்ட சராசரி தேசிய நபர்வாரி வருமானத்தைவிடவும் அதிகம். ஒவ்வொரு அலகுக்கும் நிரந்தர முதலீடு சுமார் 2 லட்ச ரூபாய்தான். இந்தப் பிரிவுகளில் மூன்றில் இரண்டு பங்கு வர்த்தகம், சேவைத் துறைகளில் உள்ளன. எஞ்சியவை உற்பத்தித் துறையில் உள்ளன.

5.77 கோடி பிரிவுகளில் 48%-ஐ இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரும், 10% முதல் 14% பிரிவுகளைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் 2005 முதல் 2011 வரையில் நிர்வகித்துவருவதாகவும் அது குறிப்பிடுகிறது. திறந்தவெளிப் பல்கலைக்கழகம்போல, சமுதாயரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு இந்தத் துறை வேலைவாய்ப்பையும் தொழில்செய்யும் வாய்ப்பையும் வழங்குகிறது. அதே சமயம், மேல்தட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களிலும் (ஐ.ஐ.டி.), இந்தியத் தொழில் மேலாண்மைக் கழகங்களிலும் (ஐ.ஐ.எம்.) படித்துவிட்டு - வேலை தருவோராக அல்ல - வேலை தேடுவோர்களாகத் தங்களைப் பதிவுசெய்துகொள்கின்றனர்.

4% மட்டுமே நிதியுதவி!

விவசாயம் சாராத துறைகளில் 90% வேலைவாய்ப்பை வழங்கும் சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்கு அமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி வெறும் 4%தான். எனவே, இவர்கள் கந்துவட்டிக்காரர்களின் கருணையினால் நிதி பெறுகிறார் கள். நாட்டின் மொத்த ரொக்கச் சேமிப்பும் வங்கிகளின் ஏகபோகமாகிவிட்டது. பதிவுசெய்துகொண்டுள்ள சிறிய எண்ணிக்கையிலான தொழில் பிரிவுகளுக்கும் கடன் தர முடியாதபடிக்கு வங்கிகள் இத்துறைக்கு ஒதுக்கிய நிதியளவு 1994 தொடங்கி 2008-க்குள் வெறும் 7% ஆக இருந்தது. எனவே, 1994-ல் கிடைத்துவந்த வங்கிக் கடனளவுகூட இப்போது கிடைப்பதில்லை. இந்தப் பிரிவுகளில் மேலும் பலரை, தொழில் பிரிவுகள் தொடங்குமாறு அரசு ஊக்குவிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். இதை எளிதில் நிறைவேற்றலாம். 1970-களில் மலேசியா இந்த மாதிரியான பிரிவுகளை ஊக்குவித்ததால் வெறும் 2%-லிருந்து 1990-ல் 20% ஆக இவை உயர்ந்துவிட்டன. இதைத்தான் நிதிநிலை அறிக்கையின் 102-வது பத்தியும் வலியுறுத்துகிறது.

102-வது பத்தி என்பது புதிய சிந்தனையின் வெளிப்பாடு. வளர்ச்சிக்கும் சமூகநீதிக்கும் உற்ற வழி சிறு, குறு தொழில் துறையினருக்கு உரிய ஊக்குவிப்பையும் ஆதரவையும் அளிப்பதுதான் என்று பிரதமர் மோடி அடையாளம் கண்டிருக்கிறார். ‘இந்தத் துறைக்கான நிதித்தேவைகளைப் பூர்த்திசெய்ய வழிவகை காண்பது மிகவும் அவசியம்' என்ற வரிகள் அதைத்தான் உணர்த்துகின்றன. இப்போதுள்ள வழி அதற்கு ஏற்றதல்ல என்பதும் இதிலேயே வெளிப்பட்டுவிடுகிறது. அடையாளம்கண்டதெல்லாம் சரி, இதே முனைப்போடு இதைச் செயல்படுத்துவாரா, ஏற்கெனவே உள்ள அமைப்புகளை மாற்றக் கூடாது என்று நினைப்பவர்கள் - குறிப்பாக, இந்திய ரிசர்வ் வங்கி - ஒத்துழைக்குமா என்பதே அடுத்த கேள்விகள்.

© ‘தி இந்து' (ஆங்கிலம்), தமிழில் சுருக்கமாக: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x