Last Updated : 30 Nov, 2016 09:41 AM

 

Published : 30 Nov 2016 09:41 AM
Last Updated : 30 Nov 2016 09:41 AM

இந்திய ராணுவமும் காவல் துறையும் ஒன்றா?

இந்திய ராணுவத்தைப் பாராட்ட பல அம்சங்கள் இருக்கின்றன. முழு நேர ராணுவ வீரர்களைக் கொண்ட தொழில்முறை ராணுவம் நம்முடையது என்பது முதல் அம்சம் (பல நாடுகளில் ஓரிரு ஆண்டுகள் மட்டும் கட்டாயமாக ராணுவப் பணி செய்துவிட்டு, பிறகு போர்க் காலத்தில் மட்டும் படைக்கு வருவர்). எந்த மதத்தையும் ஆதிக்கம் செலுத்தவிடாமல் மதச்சார்பற்றதாகத் திகழ்வது இரண்டாவது அம்சம். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்து ஒதுங்கி நிற்பது மூன்றாவது அம்சம். நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவுவது நாலாவது அம்சம். எல்லைக்கு அப்பாலிருந்து ஏவப்படும் பயங்கரவாதிகளின் தாக்குதலின்போதும் நேரடியாக நடக்கும் போர்களின்போதும் அவர்கள் வெளிப்படுத்தும் வீரமும் அவர்களுடைய உயிர்த் தியாகமும் ஐந்தாவது அம்சம்.

ராணுவத்தின் மீது குறைகளும் இல்லாமல் இல்லை. ராணுவத்துக்கான உணவு, உடை, கூடாரம் போன்றவற்றை வாங்குவதில் ஊழல் நடக்கிறது. மூத்த நிலையில் உள்ள அதிகாரிகளில் ஓரிருவர், பதவியில் இருக்கும்போதும் ஓய்வு பெற்ற பிறகும் ஆயுதத் தரகர்களுடன் கள்ளக்கூட்டு வைத்துச் செயல்படுகின்றனர். 1962-ல் சீனத்துடன் நடந்த போரில் நாம் பெருமைப்படும் வகையில் ராணுவம் செயல்பட முடியாமல் போனது. ஆனால், சில குறைகள் இருந்தாலும் போர்க் காலத்திலும் சமாதான காலத்திலும் இந்திய ராணுவம் பெருமைப்படும் விதத்தில்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம்போல நம்முடைய ராணுவ அமைப்பும் மிகச் சிறப்பாகவும் நடுநிலையாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

பதில் இல்லாக் கேள்விகள்

ராணுவத்தின் மீது உள்நோக்கத்துடன் அவதூறு கற்பிக்கும் விதத்தில் யாராவது பேசும்போதோ, கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும்போதோ ராணுவத்தினருக்காகப் பரிந்துப் பேசுவது நம்மூரில் இயல்பு. ஆனால், இதே பரிவை இந்தியக் காவல் துறைக்கும் காட்ட முடியுமா? அப்படி வாதிட்டால் ஏற்க முடியுமா?

போபால் மத்திய சிறையிலிருந்து எட்டு கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களை எடுத்துக்கொள்வோம். “சீருடையில் இருப்பவர்களின் செயல்கள் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது, எனவே நீதி விசாரணை தேவையில்லை” என்று கூறினார் பாஜகவைச் சேர்ந்த பிரதிநிதி. இந்த தேசத்தின் மனசாட்சியின் காவலராகத் தன்னைத் தானே நியமித்துக்கொண்ட ஒரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளரும் இதே முடிவை அறிவித்தார். அத்தோடு நில்லாது, அரசின் விளக்கத்தை ஏற்க மறுக்காதவர்கள் தேச விரோதிகள், பயங்கரவாதச் செயலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் என்றும் அர்ச்சித்தார்.

போபால் மோதல் சம்பவத்தை நிகழ்த்தியவர்களை ‘சீருடையில் இருந்த அதிகாரிகள்’ என்றே அவர்கள் அழைத்தனர். ராணுவமும் சீருடை அணிகிறது, காவல் துறையும் சீருடை அணிகிறது என்றாலும் அந்த ஒரு ஒற்றுமையைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குள் பொதுவில் இல்லை. ராணுவ வீரர்கள் வைரம் பாய்ந்த உடலோடும் துடிப்போடும் எப்போதும் இருக்கின்றனர். போலீஸ்காரர்கள் தொந்தியும் தொப்பையுமாக உடல் பருமனோடு காணப்படுகின்றனர். ராணுவ வீரர்கள் எல்லையில் தூங்காமல் விழித்திருக்கின்றனர். காவலர்கள் நிலையத்திலேயே அதிகாரி இல்லாவிட்டால் பகலில்கூட தூங்கி வழிகின்றனர். ராணுவ வீரர்கள் சொந்த ஆதாயத்துக்காகத் தங்கள் பதவியைப் பயன்படுத்தி ஊழல் செய்வது கிடையாது. காவல் துறையில் எல்லா நிலையிலும் ஊழலைத் தவிர வேறு கிடையாது. ராணுவத்தினர் அரசியலிலிருந்து விலகி நிற்கின்றனர். காவல் துறையினர் ஆளும் கட்சியில் இருப்பவர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு ஆதாயம் பார்க்கின்றனர். இந்திய ராணுவத்தில் பதவி உயர்வும், பதவி வழங்கலும் திறமை, தகுதி அடிப்படையில் மட்டுமே இருக்கின்றன. காவல்துறையில் ஆளும் கட்சிக்கு இணக்கமாக நடந்துகொள்ளும் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வும் நல்ல பணியிடங்களும் கிடைக்கின்றன. நேர்மையான அதிகாரிகள் தண்ணீர் இல்லாத காட்டுக்கோ, பசை மற்றும் அதிகாரம் இல்லாத பதவிகளுக்கோ பந்தாடப்படுகிறார்கள். இரு தரப்பினரையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும்?

காணாமல் போன நேர்மை

நாடு சுதந்திரம் அடைந்த முதல் இரு பத்தாண்டுகளில் இந்த அவலம் இருந்ததில்லை. காவல் துறை அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாறுதல்கள் போன்றவை துறைக்குள்ளேயே தீர்மானிக்கப்பட்டன. எனவே நேர்மை, திறமை, அனுபவம், அர்ப்பணிப்பு ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டன. ஜூலியோ ரிபைரோ போன்ற ஈடு இணையற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் பதவிக்குப் பெருமை சேர்த்தனர். 1970-களுக்குப் பிறகு பதவி உயர்வு, பணியிடம் வழங்கல் போன்றவற்றை அந்தந்த மாநில உள்துறை அமைச்சர்களும் முதல்வர்களும் தீர்மானிக்கத் தொடங்கினர். பணியில் காட்டிய திறமை, ஈடுபாட்டைவிட அமைச்சர், முதலமைச்சர்களுக்குக் காட்டிய தனிப்பட்ட விசுவாசமே பதவி உயர்வு பெற முக்கியத் தகுதியாக மாறியது.

காவல் துறையின் திறமைக் குறைவும், கையாலாகத்தனமும்தான் போபால் சிறைக் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் வெளிப்பட்டன. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி சுட்டிக்காட்டியபடி, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியொருவர் 2014-ல் மாநில அரசை இதுகுறித்து எச்சரித்திருக்கிறார். ‘போபால் சிறையில் பாதுகாப்பு மோசமாக இருக்கிறது, கைதிகள் எந்த நேரத்திலும் சிறையை உடைத்துத் தப்பித்துவிட முடியும்’ என்றிருக்கிறார். போபால் மத்தியச் சிறையில் 3,300 சிறைக் கைதிகளைக் காவல் காக்கும் பொறுப்பு, 139 காவலர்களிடம் விடப்பட்டிருந்தது. அவர்களிலும் 80 பேர் முதலமைச்சர், மாநில அமைச்சர்களின் வீடுகளிலும் அவர்களுடைய உறவினர் வீடுகளிலும் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். காவலர் எண்ணிக்கை பற்றாக்குறையால் அந்த எட்டு கைதிகளாலும் எளிதாகத் தப்ப முடிந்திருக்கிறது. அதைத் தடுக்க முயன்ற தீரம் மிக்க சிறைக் காவலர் ரமாசங்கர் யாதவ் தன்னுடைய உயிரை இழக்க நேர்ந்திருக்கிறது. அவருடைய மரணத்துக்கான பொறுப்பு முதல்வர் சிவராஜ் சிங் சவுகானையும் அவரது அரசையும்தான் சேரும்.

சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்றால், அவர்களைத் தேடிப் பிடித்து கைதுசெய்து, சிறையில் கொண்டுவந்து அடைக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்கை விரைந்து விசாரிப்பதுடன், காவலில் இருக்கும்போது தப்பிச் சென்ற குற்றத்துக்கான வழக்கையும் சேர்த்திருக்க வேண்டும். துப்பாக்கிகளுடன் அவர்களைத் தேடிச் சென்ற காவல் துறையினர் அவர்களை எளிதாக சுற்றி வளைத்துக் கைது செய்திருக்க முடியும். ஆனால் அவர்களோ ஒருவர் மிச்சமில்லாமல் எட்டு பேரையும் அங்கேயே சுட்டுக் கொன்றுவிட்டனர். சகக் காவலரைக் கொன்றதற்குப் பழிவாங்குவதற்கா அல்லது அரசியல் தலைவர்களைத் திருப்திப்படுத்தவா இந்தப் படுகொலை என்று தெரியவில்லை. ஆனால் இது ‘போலி மோதல்’ என்பது எல்லோருக்கும் தெரியும்.

கொல்லப்படும் அப்பாவிகள்

அயர்ச்சி தரும் உண்மை என்னவென்றால், போபாலில் நடந்த இச்சம்பவம் இந்தியாவின் எந்தச் சிறையிலும் நடக்க முடியும். பிற மாநிலங்களிலும் சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை அதிகமாகவும் காவலர்களின் எண்ணிக்கை போதாமலும்தான் இருக்கின்றன. காவலர்கள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதைவிட தங்களுடைய அரசியல் தலைவர்களைக் குஷிப்படுத்துவதிலேயே கவனமாக இருக்கின்றனர். ‘என்கவுன்ட்டர்’ என்று அழைக்கப்படும் போலி மோதல் இந்தியாவின் பல மாநிலங்களில் நடக்கின்றன. காங்கிரஸ் ஆண்ட ஆந்திரத்தில், கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்கத்தில், பாஜக ஆளும் சத்தீஸ்கரில் இவை சகஜம். தீவிரவாதிகள் மிகுந்த மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களும் விதிவிலக்கல்ல. மாவோயிஸ்ட்டுகள், பயங்கர வாதிகள் மட்டும் இப்படி போலி மோதல்களில் அழிக்கப் படுவதில்லை; சாதாரணக் குற்றவாளிகள்கூட இப்படிக் கொல்லப்படுகின்றனர். அவர்களில் பலர் அப்பாவிகள் என்பதே உண்மை.

இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் அல்லது எல்லா மாநிலங்களிலும் உள்ள காவல் துறையினரைப் பற்றிப் பெருமளவில் விமர்சிக்க வேண்டும் என்றால் மூன்று வார்த்தைகள் போதும். ஊழல்காரர்கள், திறமையற்றவர்கள், பாரபட்ச மாகச் செயல்படுகிறவர்கள். காவல் துறையினர் தங்களைத் தாங்களே விமர்சித்துக்கொள்வது கிடையாது. 2014-ல் அப்படி விமர்சித்துக்கொண்ட மகாராஷ்டிர மாநில போலீஸார், “முஸ்லிம்கள் எங்களை நம்புவதில்லை, நாங்கள் மத வெறியர்கள், பாரபட்சமாக நடப்பவர்கள், சிறுபான்மையினரின் கவலைகளை உணராதவர்கள் என்றே நினைக் கின்றனர்” என்று தெரிவித்துள்ளனர். காவலர் களுக்குத் தகவல்கள் முழுமையாகத் தெரிவ தில்லை, லஞ்சத்தில் திளைக்கின்றனர், தொழில் முறை அணுகுமுறையே கிடையாது என்று எல்லா மாநிலங்களிலும் காவலர்களைப் பற்றிக் கூறுகின்றனர்.

யார் பொறுப்பு?

கட்டுரையின் தொடக்கத்தில் அரசியல் தலைவர் கள், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் களைப் பற்றி முதலில் கூறினேன். மத்திய உள்துறை இணை அமைச்சராக இருக்கும் கிரண் ரிஜ்ஜு அவர்களையெல்லாம் மிஞ்சிவிட்டார். “முதலில் நாம் காவல் துறையையும் அதிகாரிகளையும் இப்படி சந்தேகப்பட்டு கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும்; இது நல்ல கலாச்சாரமல்ல. இப்படித் தேவையில்லாமல் சந்தேகப்படுவதையும் கேள்வி கேட்பதையும் மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்” என்று கூறியிருக்கிறார் ரிஜ்ஜு. இது முட்டாள்தனமானது, பொறுப்பில்லாதது. நேர்மையும் நிர்வாகத் திறமையும் உள்ள காவல்துறையை அளிக்க வேண்டியது அவருடைய கடமை. அப்படிக் கூறித்தான் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.

இந்தியக் காவல் துறையின் மிக மோசமான ஓட்டைகளை போபால் சம்பவம் அம்பலப்படுத் தியிருக்கிறது. சாமானிய மக்களைக் காப்பதில் திறமையின்மை, நேர்மையின்மை, வன்செயலில் ஈடுபடத் துடிக்கும் போக்கு, அரசியல் தலைவர்களின் நியாயமற்ற ஆணைகளை நிராகரிக்கும் திராணியற்ற பலவீனம் என்று இவை அனைத்தும் சேர்ந்து அதில் வெளிப்பட்டிருக்கின்றன. உண்மை யான தேச நல விரும்பிகள் இந்த ஓட்டைகளை அடைப்பதில் அக்கறை காட்ட வேண்டும். குறைகளைச் சுட்டிக்காட்டுவோர் மீது சீறக் கூடாது!

- சுருக்கமாகத் தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x