Published : 14 Nov 2016 10:04 AM
Last Updated : 14 Nov 2016 10:04 AM

அயோத்தியின் விளைவுகள் மோசமானதாக இருக்கும்!

எப்போதெல்லாம் நாட்டில் இனவெறியும், மதவெறியும் தலைதூக்குகின்றனவோ அப்போதெல்லாம் எப்போதையும்விட காந்தியும் நேருவும் நமக்குத் தேவைப்படுகிறார்கள். பாபர் மசூதிப் பிரச்சினை 22.12.1949 அன்று நள்ளிரவு தலைதூக்கியதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச முதல்வர் ஜி.பி.பந்த்துக்குப் பிரதமர் நேரு தொடர்ந்து தந்தி, கடிதங்களை அனுப்பிவந்தார். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. ஆட்சியாளர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு எப்பேற்பட்ட தாராளவாதச் சிந்தனையுடன் அனைத்து மக்களுக்குமான பிரதிநிதிகளாகச் செயல்பட வேண்டும் என்பதற்கு இன்றும் உதாரணங்களாக இவை நமக்கு வழிகாட்டுகின்றன.

26 டிசம்பர் 1949, தந்தி

அயோத்தியில் நடந்த நிகழ்வுகளை அறிந்து வேதனை அடைந்தேன். இந்த விஷயத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிகழ்வின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் ஒரு மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்படுகிறது. இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

- ஜவாஹர்லால் நேரு



5 பிப்ரவரி 1950, கடிதம்

அன்புள்ள பந்த் அவர்களுக்கு, அயோத்தியில் நிலவும் சூழ்நிலை குறித்து எனக்கு உடனுக்குடன் தெரிவித்து வந்தீர்களானால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். உத்தரப் பிரதேசத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதற்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறேன் என்பதையும், இந்தப் பிரச்சினையால் அகில இந்திய அளவில், அதிலும் குறிப்பாக காஷ்மீரில் என்ன விளைவு ஏற்படும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கடந்த முறை புதுதில்லி வந்திருந்தபோது, தேவைப்பட்டால் நான் அயோத்திக்குச் செல்வேன் என்று கூறியிருந்தேன். அதன்படி நான் அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் கருதினால், அங்கு செல்வதற்கான தேதியை நிர்ணயிக்க முயல்வேன். நான் ஓயாத பணிகளில் மிகவும் அதிகமாக ஈடுபட்டிருந்தபோதிலும் அயோத்தி செல்வேன்.

- ஜவாஹர்லால் நேரு



17 ஏப்ரல் 1950, கடிதம்

அன்புள்ள பந்த் அவர்களுக்கு, உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்த சில சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. ஒருவேளை உத்தரப் பிரதேசத்தில் நடப்பது தொடர்பாக என் மனத்தில் நீண்ட காலமாக இருந்துவந்த உணர்வுகளின் முடிவாக இது இருக்கலாம். மத அடிப்படையில் பார்க்கும்போது, உத்தரப் பிரதேசத்தின் நிலைமை மிகவும் மோசமடைந்துவருகிறதோ என்ற எண்ணம் எனக்கு நீண்ட காலமாகவே இருந்துவந்திருக்கிறது. உண்மையில், உத்தரப் பிரதேசம் எனக்கு அந்நிய நாடாக மாறிவருகிறது. உத்தரப் பிரதேச நிலைமையுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நான் தொடர்பு வைத்திருக்கும் உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, இப்போது செயல்படும் விதம் என்னைத் திகைக்க வைக்கிறது. உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இப்போதைய குரல், நான் அறிந்த காங்கிரஸின் குரல் அல்ல! எனது வாழ்நாளின் பெரும்பாலான நேரங்களில் எதிர்த்துவந்த குரல்!

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தூண்களாக விளங்கிய தலைவர்களின் இதயத்திலும் மனத்திலும் மதவாதம் புகுந்துவிட்டது எனக்குத் தெரிகிறது. இது, நோயாளியால்கூட உணர்ந்துகொள்ள முடியாத மிக மோசமான பக்கவாத நோயாகும். அயோத்தியில் மசூதி மற்றும் கோயில்களிலும் பைசாபாத்தில் ஓட்டலிலும் நடந்தவை மிக மோசமானவை. இதில் இன்னும் மோசமான செயல் என்னவென்றால், இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடப்பதை நமது தலைவர்கள் சிலரே அங்கீகரிப்பதுதான்.

ஏதோ சில காரணங்களுக்காகவோ அல்லது அரசியல் லாபத்திற்காகவோ இந்த நோயை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். இதனால் இந்த நோய் நமது மாநிலம் உட்பட நாடு முழுவதும் பரவிவருகிறது. மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு, இதை மட்டும் எடுத்துக்கொண்டு போராடலாமா என்று சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அப்பணியை மேற்கொள்வேன். அப்போது எனது முழு பலத்தையும் காட்டி இந்தத் தீமையை எதிர்த்துப் போராடுவேன்.

- ஜவாஹர்லால் நேரு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x