Published : 25 Nov 2016 09:21 AM
Last Updated : 25 Nov 2016 09:21 AM

சட்டமியற்றும் பொறுப்பு மாநில அரசுகளுடையது!

நிலம் கையகப்படுத்தல் சட்டமியற்றலில், மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்பட முடியும்.

மத்திய - மாநில அரசுகள் இரண்டுக்கும் பொதுவான பட்டியலில் ஒரு பொருள் இருக்கும்போது, மத்திய அரசின் சட்டத்தை மீறும் தன்மையில் மாநில அரசுகள் தங்களுடைய மாநிலத்துக்குப் பொருத்தமான சட்டத்தை இயற்றிக்கொள்ள அரசியல் சட்டமே அனுமதிக்கிறது. மத்திய அரசின் சட்டம், ஒரு பிரதேசத்தின் தனித்தன்மைக்கு முரணாக இருந்தால், அதற்கு நியாயமான, ஏற்கத்தக்க தடை ஒன்று இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இத்தகைய ஏற்பாடு அரசியல் சட்டத்தில் செய்யப்பட்டிருக்கிறது. நிலம் கையகப்படுத்தல் சட்டம் தொடர்பாக நாம் இந்தப் பின்னணியில் விவாதிக்கலாம்.

இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிடையே பொருளாதார வளர்ச்சியில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு நிலவுகிறது. தமிழ்நாட்டையும் பிஹாரையும் பல அம்சங்களில் ஒப்பிடும்போது இது தெளிவாகும். எனவே, இரு மாநிலங்களும் அதன் தேவை மற்றும் தன்மைக்கேற்ப சட்டங்களை இயற்றிக்கொள்ள முடியும். அது மட்டுமல்ல; சமூக, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் உத்தரப் பிரதேசத்தில் மத்திய சட்டத்தைவிட வலிமையான சட்டத்தை இயற்றுவதுடன் நில்லாமல், உத்தரப் பிரதேசத்தின் கிழக்கிலும் மேற்கிலும் அதைச் செயல்படுத்துவதற்கான தனி செயல் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும்.

மாநிலங்களிடையே ஏற்றத்தாழ்வு

மாநிலச் சட்டம் என்றாலே மத்திய சட்டத்தைவிடத் தரத்தில் குறைந்ததாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அர்த்தமற்றது. நிலங்களைக் கையகப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு அதிக அனுபவமும் திறமையும் இருக்கிறது என்பதே உண்மை. சில வேளைகளில் மத்திய அரசு தரும் இழப்பீட்டுத் தொகையைவிட மாநில அரசுகள் வழங்கும் ஈட்டுத்தொகை நியாயமாகவும் கணிசமாகவும் இருக்கிறது.

மத்திய அரசு 2013-ல் இயற்றிய நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு, மறுகுடியமர்வுச் சட்டத்தின் முக்கியமான ஒரு அம்சம், ஒரு பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்துவதால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிடுவது. அவ்வாறு நிலத்தைக் கையகப்படுத்த அப்பகுதியில் உள்ளவர்களில் குறைந்தபட்சம் எத்தனை பேர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பதும் ஒரு அம்சம். இதில்தான் வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு விதமாக அம்சங்களைச் சேர்த்து சட்டமியற்றியதால் அது நீர்த்துப்போய்விட்டது என்ற விமர்சனம் காணப்படுகிறது. மத்திய அரசின் சட்டமே ‘சமூகப் பாதிப்பு மதிப்பீடு’அம்சத்தை நீர்த்துப் போகவைத்துவிட்டது.

சமூகப் பாதிப்பை மதிப்பீடு செய்யும் ஆணையமும், நிபுணர்கள் குழுவும் நிலம் கையகப்படுத்தல் முயற்சியை மேற்கொள்ளக் கூடாது என்று நிராகரித்திருந்தாலும், நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் 7(4):9-வது துணைப் பிரிவின் கீழ், ‘நிலம் கையகப்படுத்தல் ஏன் அவசியமாகிறது என்று மாநில அரசு எழுத்துபூர்வமாகப் பதிவுசெய்துவிட்டால் அதைத் தொடரலாம்’ என்கிறது. இந்தச் சட்டத்துக்குப் பெருத்த அளவு எதிர்ப்பு வராமல் போயிருந்தால், இந்த ஒரு பிரிவை மட்டுமே பயன்படுத்தி, மாநிலங்கள் அனைத்துமே நிலங்களை எளிதாகக் கையகப்படுத்தியிருக்கும். இதிலிருந்து ‘சமூக நலனுக்குப் பாதிப்பு’ என்ற அம்சத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அக்கறை மேலுக்குத்தான் என்பதை உணர முடிகிறது.

ஆரோக்கியமான செயல்முறை

அரசின் திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்த நில உடமையாளர்கள் ஒப்புதலைத் தருவது அவசியம் என்று 2013-ம் ஆண்டு சட்டம் கூறவில்லை. நில உடமையாளர்களின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயம் என்று மாநிலங்கள் தங்களுடைய சட்டத்தில் சேர்த்திருந்தாலும், அதிகம் பேர் ஒப்புதல் தெரிவித்தால் போதும் என்று மத்திய அரசின் சட்டம் கூறுகிறது. மாநிலச் சட்டங்களிலிருந்து இது வேறுபடுகிறது.

நிலத்தை விற்றுவிடப் பலர் விரும்பும்போது, சிலர் மட்டும் விற்க விரும்பவில்லை எனும்போது கட்டாயப்படுத்தித்தான் நிலத்தைப் பெற முடியும். எத்தனை பேர் சம்மதம் தெரிவிக்க வேண்டும், எத்தனை பேர் சம்மதம் தெரிவிக்காவிட்டால் பரவாயில்லை என்பதைச் சட்டம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், அடிப்படையில் இது அரசியல் சார்ந்த விஷயம். சட்டப்படி 85% பேர் நிலத்தைத் தர ஒப்புக்கொண்டாலும், விருப்பம் இல்லாத 15% பேர் தடைகளை ஏற்படுத்தலாம். ஆட்சியில் இருக்கும் கட்சி அல்லது அரசு தனது வாதத் திறமையைப் பயன்படுத்தி நில உடைமையாளர்களை இணங்கச் செய்ய வேண்டும். நியாயமான இழப்பீடு, மாற்று ஏற்பாடுகள் போன்றவை செய்யப்படாவிட்டால், எதிர்க்கட்சி தலையிட்டு நியாயம் வழங்குவதற்குத் துணை புரிய வேண்டும். இதுதான் ஜனநாயகத்தில் ஆரோக்கியமான செயல்முறையாக இருக்க முடியும்.

குடியரசுத் தலைவரின் பொறுப்பு

அரசியல் சட்டத்தின் 254(2) பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் இத்தகைய சட்டங்களுக்கு ஒப்புதல் தருவது வெறும் சம்பிரதாயம் இல்லை. இத்தகைய சட்டங்களுக்கு ஒப்புதல் தருவதற்கு முன்னால், குடியரசுத் தலைவர் மனம் ஊன்றிப் படித்துப்பார்த்து ஒப்புதல் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்னர் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. மாநிலங்களின் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என்பதல்ல இதன் பொருள்.

நிலம் கையகப்படுத்தல் சட்டம் தொடர்பாக இப்போது மத்திய அரசும் மாநில அரசுகளும் சில மாறுதல்களைச் செய்ய விரும்புவதுதான் இதில் வினோதமான அம்சம். 2013-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோது அடுத்து நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தலை மனத்தில் கருதி நிறைவேற்றப்பட்டதா? ஆம் என்றால், இது மோசமான முன்னுதாரணம்.

2013 நிலம் கையகப்படுத்தல் மறுவாழ்வு - மறுகுடியமர்த்தல் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னால், மாநிலங்களில் அவற்றுக்கே உரிய நிலம் கையகப்படுத்தல் சட்டங்கள் இருந்தன. 1894-ல் இயற்றப்பட்ட பிரிட்டிஷ் அரசின் சட்டம் அதிகம் பயன்படுத்தப்பட்டதில்லை. இப்போதும்கூட மாநிலங்கள் தங்களுக்குத் தேவைப்படும் சட்டங்களை இயற்றிக்கொள்ளத் தடை ஏதும் இல்லை. நன்றாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் இதில் பிரச்சினைகள் குறைவு. அவை விரும்பிய நிலங்களைக் கையகப்படுத்தி வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றன. பிற மாநிலங்கள்தான் இச்சட்டம் குறித்து ஆழ்ந்து யோசித்துச் செயல்பட வேண்டும்.

- தனமஞ்சரி சாட்டே,

புணே நகரில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x