நெல் கொள்முதல்: தேவை கொள்கையில் மாற்றம்!

நெல் கொள்முதல்: தேவை கொள்கையில் மாற்றம்!
Updated on
1 min read

இந்த ஆண்டு குறுவை சாகுபடி முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில், நெல் கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 1 இல் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பெய்துவரும் மழையால், காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அது நெல்லின் ஈரப்பதத்தைப் பாதித்திருக்கிறது. மத்திய நெல் கொள்முதல் கொள்கையின்படி 17% ஈரப்பதமே கொள்முதலுக்கு ஏற்றது; தமிழக அரசின் கோரிக்கையின் அடிப்படையில் அதை 19% ஆக உயர்த்தியது மத்திய அரசு.

ஆனால், விற்பனைக்கு உள்ள நெல்லின் ஈரப்பதம் 19%-க்கும் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் ஈரப்பதம் காரணமாகக் காரீஃப் பருவ நெல் கொள்முதலை மத்திய அரசு நிறுத்தியது; தெலங்கானாவிலும் மத்திய அரசின் நெல் கொள்முதல் கொள்கை தொடர்பாக மாநில – மத்திய அரசுகளுக்கு இடையே கருத்துகள் முரண்பட்டன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களை மாநில அரசின் முகமை அமைப்புகள் வழியாகவே மத்திய அரசு கொள்முதல் செய்துவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசின் கொள்முதல் விலையுடன் சேர்த்து நெல் ரகத்தைப் பொறுத்து மாநில அரசு ரூ.100, ரூ.75 ஊக்கத்தொகை வழங்குகிறது.

மாறிவரும் காலநிலையால் வேளாண்மையில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள விவசாயிகளிடம் கருவிகள் இல்லை. நெல்லை உலர்த்த சூரிய ஒளியை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், ஈரப்பத அளவைக் குறைப்பதற்கான உலர் இயந்திர வசதிகள் அவர்களிடம் இல்லை. எனவே, அனுமதிக்கப்பட்ட ஈரப்பத அளவை 17இலிருந்து 22% ஆகவும் நிறம் மாறுதலை 5இலிருந்து 7% ஆகவும் முதிராத்தன்மையை 3லிருந்து 5% ஆகவும் சேதத்தை 5லிருந்து 7% ஆகவும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வேளாண் சங்கங்கள் எழுப்பியுள்ளது பொருள்படத்தக்கது.

மத்திய அரசின் கொள்முதல் கொள்கை முடிவுகளை நிறைவேற்றுவது மாநில அரசின் முகமையான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்தான். இந்தக் கொள்முதல் முறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விவசாயிகள் தரப்பின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உணவுத் துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார். ஆனாலும் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இதன் மூலம் விவசாயிகள் இல்லாதவர்களும் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாகப் பலன் பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.

கொள்முதல் சட்டத்தின்படி நாட்டின் எந்தப் பகுதியிலும் விவசாயிகள் உணவுப் பொருட்களை விற்க முடியும் என்பதால், அப்பகுதி மக்களின் முன்னுரிமை பாதிக்கப்படுகிறது. இது முறைகேடுகள் நடப்பதற்கும் ஏதுவாகிறது. இந்தக் கொள்கையிலும் மாற்றம் அவசியத் தேவையாகும். உணவுப் பாதுகாப்பும், விவசாயப் பொருட்களுக்கு ஆதார விலை அளிப்பதும் இதன் முக்கிய நோக்கம் என்பதை உணர்ந்து, மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது உடனடித் தேவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in