Last Updated : 15 Nov, 2016 08:54 AM

 

Published : 15 Nov 2016 08:54 AM
Last Updated : 15 Nov 2016 08:54 AM

வன்முறையால் அலைக்கழியும் மல்கான்கிரி

மோதல் நடந்தது பற்றி கிராமத்தினர் சொல்வதும் காவல் துறை சொல்வதும் வேறுபடுகிறது

ஒடிசாவின் மல்கான்கிரி மாவட்டம். சித்ரகொண்டா அணைக்கு அருகிலுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசம். இங்கு அக்டோபர் 24, 25, 27 தேதிகளில் நடந்த மோதல்களில் மாவோயிஸ்ட்டுகள் 30 பேர் கொல்லப்பட்டனர் என்கிறது போலீஸ் தரப்பு. சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து, நவம்பர் 1 அன்று நானும் சில பத்திரிகையாளர்களும் கஜ்ஜுரிகுடா கிராமத்துக்குப் போனோம். அந்தக் கிராமத்தில் 77 குடும்பங்கள் இருந்தன. வேலைக்குப் போன ஆண்கள் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

20 வயதைக் கடந்த கிராமத்து இளைஞர்கள் மூன்று பேரை ஒரு வாரமாகக் காணவில்லை என்கிறார்கள் அவர்கள். “கிராமத்தினரை மாவோயிஸ்ட்டுகள் கட்டாயப்படுத்திக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் செய்கின்றனர்” என்கிறார்கள் கிராமத்தினர். காணாமல்போனவர்களில் இருவர் கொல்லப்பட்டுவிட்டனர். இன்னொருவர் காவல் துறையின் பிடியில் இருப்பார் என்ற அச்சம் நிலவுகிறது. நக்சல் எதிர்ப்புப் படையினர் தாக்குதல் நடத்திய இடத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் இந்தக் கிராமம் உள்ளது.

வேறுபட்ட விவரங்கள்

லோகனு கொல்லாரி, ஜொய்ராம் கிலொ, கமுலு சனபாசியா ஆகிய மூன்று பேர்தான் காணாமல் போனவர்கள். அவர்கள் அக்டோ பர் 23 வரை வீட்டில்தான் இருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆனாலும், அவர்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தைக்குப் போகவில்லை. சில மாவோயிஸ்ட்டுகள் வந்து அடுத்த நாள் கூட்டத்துக்கான சில தேவைகளுக்காக அவர்களை அணுகியுள்ளனர். இந்தக் கிராமத்தில் இப்படி உதவிகள் கேட்டு அவர்கள் வருவது வழக்கம். முடியாது என்று மறுப்பதில் அர்த்தமில்லை. தேவையான உதவிகளைச் செய்யவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று மாவோயிஸ்ட்டுகள் மிரட்டுவார்கள். இந்த மூன்று பேரோடு பக்கத்துக் கிராமத்திலிருந்தும் ஆட்கள் போயிருக்கிறார்கள். அக்டோபர் 24 கூட்டத்தில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் பங்கேற்றுள்ளனர்.

அக்டோபர் 24 காலை 6 மணிக்கு என்ன நடந்தது என்று கிராமத்தினர் சொல்வதற்கும் காவல் துறையினர் சொல்வதற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

பெரிய எண்ணிக்கையிலான படை மாவோயிஸ்ட்டுகளைச் சுற்றிவளைத்தது. அதைப் புரிந்துகொண்ட அவர்கள் சரணடைந் தனர். காவல் துறை அவர்களின் ஆயுதங் களைக் கைப்பற்றியது. ஆண்களையும் பெண் களையும் தனித்தனியாகப் பிரித்தது என்று போகிறது கிராமத்தினர் சொல்லும் கதை.

காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களில் கமுலு சனபாசியாவும் ஒருவர். அவரது சகோதரர் துன்னு சனபாசியா கமுலுவின் வாக்காளர் அட்டையைக் கையில் வைத்துள்ளார். காவல் துறையாலும் மாவோயிஸ்ட்டுகளாலும் எப்படிக் கிராமம் சிரமப்படுகிறது என்பதை விளக்குகிறார் அவர். “ஆயுதங்களோடு யார் வந்தாலும் நாங்கள் அவர்களுக்குச் சரண் அடைந்துவிடுகிறோம். இரண்டு பேருமே ஆயுதங்களோடுதான் வருகிறார்கள்.”

போலி மோதல் கொலையா?

இந்தச் சம்பவத்தில் சித்ரவதை, பாலியல் பலாத்காரம், மோதல் படுகொலைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் பல தரப்புகளிடமிருந்தும் வந்துள்ளன. தெலுங்கு எழுத்தாளரும் பேச்சாளருமான வரவரராவ் முதல் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள், குடிமை உரிமைகள் இயக்கத்தினர், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் வரை பலர் இதை எழுப்பியுள்ளனர். பாக்ஸைட் தனிமத்துக்கான சுரங்கம் தோண்டுவதை ஆந்திரப் பிரதேச அரசு மீண்டும் தொடங்க உள்ளது. அந்தப் பின்னணியில்தான் இந்த நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

அக்டோபர் 24-ல் கொல்லப்பட்டவர்களில் மாவோயிஸ்ட் கட்சியின் கலை-இலக்கிய பிரிவைச் சார்ந்த பிரபாகர் எனும் கங்காதரும் ஒருவர். செகந்திராபாத் கண்டோன்மெண்ட் பகுதியில் அக்டோபர் 27-ல் அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. அதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். அரசின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மாவோயிஸ்ட் கட்சிக்குத் தெலங்கானா பகுதியில் இன்னும் ஆதரவு இருக்கிறது என்பதை அது காட்டியது.

ராணுவக் குடியிருப்பு மையத்தில் உள்ள சுடுகாட்டை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். எங்கும் காவல் துறையினர் கிடையாது. ‘பிரஜா நாட்டிய மண்டலி’ எனும் பண்பாட்டு அமைப்பில் 20 ஆண்டுகளாகப் பிரபாகர் எழுதிய, பாடிய புரட்சிப் பாடல் களைப் பாடி அவர்கள் சென்றனர்.

பிரபாகரனின் அம்மா, மனைவியோடு இணைந்து பிரபாகரனின் சிதைக்குக் கொள்ளி வைத்தார் வரவரராவ். “சொல்ல முடியாத அளவுக்குப் பெண்களைச் சித்ரவதை செய்து அக்டோபர் 24-ல் கொன்றுள்ளனர். தோழர் ஆர்.கே. அவர்களின் பிடியில் இருப்பதாக வதந்திகள் உள்ளன. எவ்வளவு பேரைப் பிடித்துவைத்துள்ளனர், அவர்களை என்ன செய்கின்றனர் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்றார் அவர்.

ஆர்.கே. என்று அழைக்கப்படுபவர் அக்கிராஜு ஹரகோபால். மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர். அவருக்குப் பல பெயர்கள் உண்டு. அதில் ஒன்று ராமகிருஷ்ணா. ஆர்.கே. 2004-ல் ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தபோது நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர் அவர். பாக்ஸைட் கனிமச் சுரங்கம் தோண்டுவதற்கு எதிரான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்துதான் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

ராஜசேகர ரெட்டிக்குப் பிறகு வந்த தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பழங்குடி மக்களின் நலன்களைப் பாதுகாக்கச் சட்டத்திருத்தம் கொண்டுவந்தார். ஆர்.கே. அந்த அமைப்பின் முக்கியமான தலைவர்களில் ஒருவர். அவர் தத்துவரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் பல உத்திகளை வகுப்பவர்.

மறுக்கும் காவல் துறை

காவல் துறை “நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை” என்று மறுக்கிறது. நம்பக மான தகவல் வந்ததும் நாங்கள் வேகமாகச் செயல்பட்டோம் என்கிறார்கள் அவர்கள். ஆயுதம் இல்லாத பணயக் கைதிகளைச் சுட்டுக் கொன்றதனால் வரக்கூடிய விமர் சனத்தைத் தவிர்க்க இருதரப்பு மோதலில் அவர்கள் கொல்லப்பட்டதுபோன்ற தோற்றத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்கிறார்கள் குடிமை உரிமைகள் செயல்பாட்டாளர்கள். ஆந்திரப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்கள், ஒடிசாவின் ஐந்து மாவட்டங்கள் அடங்கிய இந்தப் பகுதியில் நல்ல தகவல்தொடர்பு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம் என்கிறார்கள் காவல் துறையினர். வழக்கமான இத்தகைய செயல்பாடுகளில் மாவோயிஸ்ட்டுகள்தான் வலுவோடு இருப்பார்கள். ஆனால், தற்போது அவர்களின் பிடி இந்தப் பகுதியில் தளர்ந்திருக்கிறது.

ஆர்.கே. தங்களின் பிடியில் இல்லை என்று மறுத்துள்ளது காவல் துறை. அப்பாவி கிராமத்தினர் யாரும் கொல்லப் படவில்லை. மாவோயிஸ்ட்டுகள் மட்டும்தான் கொல்லப்பட்டனர் என்கிறார்கள். ஆனாலும் காவல் துறை காட்டுகிற படங்களிலேயே பலர் சாதாரண ஆடைகளில் உள்ளனர். பெண்களின் உடல்கள் மோசமாகச் சிதைக்கப்பட்டிருந்தன. சொந்த மக்களின் படுகொலைக் களங்களில் ஒன்றாகி இருக்கிறது மல்கான்கிரி.

© ‘ஃப்ரென்ட்லைன்’,

தமிழில் : த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x