Last Updated : 18 Nov, 2016 09:13 AM

 

Published : 18 Nov 2016 09:13 AM
Last Updated : 18 Nov 2016 09:13 AM

ட்ரம்பின் வெற்றி ஏற்படுத்திய பிளவு!

அச்சம் தரும் வாக்குறுதிகளையும் தாண்டி ட்ரம்ப் வென்றது ஏன் என்று சிந்திக்க வேண்டும்

அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் அதிர்ச்சி தரத்தக்க வகையில் வெற்றி பெற்றதிலிருந்தே, எதிர்ப்புப் பேரணிகளால் அமெரிக்கா அதிர்ந்துகொண்டே இருக்கிறது. இதை ‘வெள்ளைச் சின அலை’ என்றும், ‘வெள்ளைச் சவுக்கடி’ என்றும் வர்ணிக்கிறார்கள். 2012-ல் ஒபாமாவை இரண்டாவது முறையாக அதிபராக்க 51.1% வாக்காளர்கள் இணைந்து வாக்களித்த பிறகு, வெள்ளையர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒரு பக்கமும் மற்றவர்கள் இன்னொரு பக்கமும் அணி திரண்டுள்ளனர்; இது மூன்றுவிதக் கருத்துகளை உருவாக்கியிருக்கிறது.

முதலாவதாக, தேர்தல் முடிவைக் கணிப்பதில் வல்லுநர்களும் ஊடகங்களும் எப்படி ஒரே மாதிரியாகத் தவறு செய்தார்கள் என்று அதிர்ச்சியும் வியப்பும் ஒருங்கே ஏற்பட்டுள்ளது. வெள்ளை இனத்தவர் அதிலும் குறிப்பாக - வெள்ளை இனத்தைச் சேர்ந்த உடல் உழைப்புத் தொழிலாளர்களின் கோபத்தை எப்படிக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அவர்கள் அதிகமாக வாழும் மாகாணங்களின் வாக்கு வலிமையைக் கருத்தில்கொள்ளாமல் முடிவைக் கணித்தார்கள் என்று திகைப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெள்ளை இனத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் மாகாணங்களின் வாக்குகள்தான் இந்த வெற்றியை ட்ரம்புக்கு உறுதிசெய்துள்ளன.

வெறுப்பின் வளர்ச்சி

இரண்டாவதாக, ட்ரம்பின் வெற்றியால் துணிச்சல் அடைந்துள்ள பிற மத வெறுப் பாளர்கள் சிறுபான்மைச் சமூகத்தவர்களை வார்த்தைகளாலும் கைகலப்பு உள்ளிட்ட சிறு வன்செயல்களாலும் தாக்கியுள்ளனர். இத்தாக்குதல்களின்போது பெண்கள், தன்பாலின உறவாளர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு எதிராக வசைகளைப் பொழிந்துள்ளனர். பல இடங்களில் தங்களுடைய வெறுப்புகளை எழுத்தில் வடித்து அத்துடன் ஸ்வஸ்திக் சின்னத்தையும் வரைந்து வைத்திருந்தனர்.

மூன்றாவதாக, ட்ரம்ப் வெற்றிபெற்ற தேர்தல் முடிவையே ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். 2020-ல் நிச்சயம் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்தான் அதிபராக வேண்டும் என்று அவர்கள் முழங்குகின்றனர். பெருநகரங்களிலும் புறநகர்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடந்தன. சமூக வலைதளங்களில், “ட்ரம்ப் எங்களுடைய அதிபர் அல்ல” என்ற கண்டனங்கள் அதிகரித்தன.

நிறவெறி கொண்ட பல்வேறு நிலையினர் ட்ரம்பை ஆதரித்தார்கள் என்பது உண்மைதான். ட்ரம்பின் பேச்சும் சில சமயங்களில் அவர் சாதித்த மவுனமும் இவர்களை ஆதரவாளர்களாக்கிவிட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதே வகையில்தான் - பெண்களைத் துச்சமாக மதிப்பவர்கள், முஸ்லிம்களை வெறுப்பவர்கள், பிற மத வெறுப்பாளர்கள் ஆகியோர் அவர் பென்சில்வேனியா சென்றபோது உடன் தொற்றிச் சென்றனர். இவர்களைத் தனது ஆதரவாளர்களாக்கிக் கொண்டதற்காக அவர் பொறுப்பேற்க வேண்டும்.

மகளிர், முஸ்லிம்கள், லத்தீன் அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், தன்பாலின உறவாளர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை மட்டம்தட்டிப் பேசும் இயல்புள்ளவர் என்பதால், பரந்த சிந்தனையுள்ள அமெரிக்கர்கள் அவரை விமர்சிக்கத் தகுதிபெற்றவர்கள். அப்படிப்பட்ட இயல்பு அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது. ட்ரம்பையும் அவருடைய முரட்டு ஆதரவாளர்களையும் கண்டிக்கும் அதே வேளையில், நல்ல அமெரிக்கர்களும் ட்ரம்பை நோக்கி ஓடியதைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அவருடைய பிரச்சாரம் இலக்கில்லாமலும் அச்சமூட்டக்கூடிய வாக்குறுதிகளைக் கொண்டிருந்தாலும் இவர்கள் ட்ரம்பை நோக்கி ஓடியது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.

போராடுங்கள், கவனியுங்கள்

ஜனநாயகக் கட்சிக்காரர்கள் செய்த இரண்டாவது பெரிய தவறு, தங்கள் நிலையிலிருந்து மாறாமல் ஊன்றி நின்றதுடன், மிஷேல் ஒபாமா தங்களைக் காக்க வருவார் என்று காத்திருந்ததுதான். 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று அதிபராக வேண்டும் என்றால், மாநில வாரியாகப் பிரச்சாரம் செய்து தங்களுக்கு ஆதரவு திரட்டியாக வேண்டும். ஆனால், இது ஹிலாரி கிளிண்டனுக்காக ஏற்கெனவே முயற்சி செய்து பார்க்கப்பட்டு இப்போது கண்ணீரில் முடிந்திருக்கிறது. அவர்கள் உணர வேண்டியது என்னவென்றால், ஒரு காலத்தில் தொழில்வளர்ச்சி கண்ட மாநிலங்களாக இருந்த இந்தக் கடலோர மாநிலங்கள், மூன்று முறை தங்களுடைய எதிர்காலம் வளமடையும் என்ற நம்பிக்கையில் புதியவர்களுக்கு அடுத்தடுத்து வாக்களித்திருக்கின்றன.

இவர்களுடைய கோரிக்கைகள் என்ன, இவர்கள் ஏன் விரக்தி அடைந்திருக்கிறார்கள் என்று பேசி, இவர்களுடைய வேதனையை நன்கு புரிந்துகொண்டால்தான் தங்களுக்கு ஆதரவைப் பெருக்கிக்கொள்ள முடியும். அப்படி இல்லாவிட்டால், வெள்ளை மாளிகையில் ஒரு ஜனநாயக வேட்பாளர் அதிபராக அமர்ந்தால்கூட இவர்களுடைய வாக்குகள் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும். தங்களுடைய அகங்காரத்தையும் விருப்பு-வெறுப்புகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, எதிர்த்து வாக்களித்தவர்களை அழைத்துப் பேசி ஆதரவாளர்களாக மாற்றுவதே கட்சியை வலுப்படுத்தும்.

சுய பரிசோதனைக்கான காலம்

குடியரசுக் கட்சிக்கு வழக்கமாக ஆதரவு தருகிறவர்களுக்கும், ட்ரம்பின் சீண்டல் பேச்சால் உற்சாகமடைந்த ஆதரவாளர் களுக்கும் இடையில் பெருத்த பிளவை ட்ரம்பின் வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது. அரசியலில் வெற்றிபெற வெள்ளை மாளிகையின் ஆதரவு ட்ரம்புக்கு அடுத்த நான்கு ஆண்டுகளுக்குத் தேவைப்படுகிறது. தங்களுடைய ஆதரவாளர்களான பழமை வாதிகளின் கோரிக்கைகளைத் தீர்த்து வைக்க ட்ரம்பின் உதவி குடியரசுக் கட்சிக்கும் அவசியப்படுகிறது. இருவருக்கும் இடையில் இணைப்புப் பாலம் ஏற்பட வேண்டும். பரஸ்பர அவநம்பிக்கையும், வெறுப்பும் தொடர்வது நல்லதல்ல. இது எளிதானதும் அல்ல.

ட்ரம்பைப் பதவி நீக்கம் செய்ய, அவருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படும் இயல்புள்ள ட்ரம்ப், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கே ஆபத்தாக விளங்கக்கூடும். அப்படி நடந்தால், நாடாளுமன்றமே அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு வாய்ப்பாகிவிடும்.

அதிகார நடவடிக்கையில் முறைமையைக் கடைப்பிடிக்கத் தான் விரும்பவில்லை என்று ட்ரம்ப் கோடி காட்டியிருக்கிறார். இடைக்கால ஏற்பாட்டுக் குழுவில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். சொந்த நலனுக்காக விதிகளைக்கூட அவர் வளைக்கக் கூடும். தன்னுடைய மனைவணிக வியாபாரத் துக்கு அவர் சலுகைகள் செய்யக்கூடும்.

இவ்வாறு, தான் வகிக்கும் பதவிக்குப் பொருந்தாத வகையில் சுயலாபத்துக்காக அவர் செயல்பட்டார் என்றால், அவரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவருவது மிக எளிது. எது நடந்தாலும் ஜனநாயகக் கட்சியினர் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள அவகாசம் கிடைக்கும். டரம்பை எதிர்த்து நிற்க, ஜனநாயகக் கட்சியினர் முதலில் தங்களுக்குள் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

© ‘தி இந்து’ ஆங்கிலம்

சுருக்கமாகத் தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x