

ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி வம்சம் தன்னாட்சி மன்னர்களாகக் கருதப்படுகின்றனர். இப்பகுதியை ஆண்ட ரகுநாத சேதுபதி என்கிற கிழவன் சேதுபதியால் 1674–1710 ஆண்டுகளுக்கு இடையில் ராமலிங்க விலாசம் என்கிற அரண்மனை ராமநாதபுரத்தில் கட்டப்பட்டது. தென்னிந்தியாவின் கலை நுணுக்கமான அரண்மனைகளில் இதுவும் ஒன்று. நூறு ஏக்கரில் கட்டப்பட்ட இந்த அரண்மனை வளாகத்தில் தற்போது தர்பார் அரங்கு மட்டுமே எஞ்சியுள்ளது.
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ஜாக்ஸனுக்கும் கட்டபொம்மனுக்கும் இடையிலான சந்திப்பு இங்குதான் நடைபெற்றது. இந்த மண்டபத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் சேதுபதி மன்னர்களுக்குத் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களுடன் இருந்த அரசியல் உறவு, ஐரோப்பியத் தொடர்புகள், ராமாயண, பாகவதக் கதைகள், மன்னரது பொழுதுபோக்கு போன்ற நிகழ்வுகள் காட்டப்பட்டுள்ளன. கிழவன் சேதுபதி ஆட்சிக் காலத்தில் (8.5.1694), இலங்கையிலிருந்து இங்கு வந்த டச்சுக்காரர்கள் சேதுபதியிடம் முறையிட்டு, சேது நாட்டுக் கடலில் உள்ள முத்துச் சலாபங்களில் முத்துக்குளிக்கும் உரிமையைப் பெற்றனர். இந்நிகழ்வு ஓவியங்களாக இந்த அரண்மனையில் வரையப்பட்டிருக்கிறது.
இந்த அரண்மனையில் வரையப்பட்ட ஓவியங்களில் இரண்டு இடங்களில் ஐரோப்பியர்கள் குறித்த நிகழ்வுகள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவதில், சேதுபதி மன்னர் தன் அரியாசனத்தில் அமர்ந்துள்ளார். அவருடன் அவரது இரண்டு மெய்க்காப்பாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு எதிரே, மூன்று டச்சுக்காரர்கள் காட்டப்பட்டுள்ளனர். முதலாவது நபர், தனது தலையைக் குனிந்து குல்லாவைக் கழற்றி இடது கையில் வைத்து, வலது கையால் வணக்கம் வைக்கிறார். இரண்டாம் நபர், தலைகுனிந்து கையில் விலையுயர்ந்த பரிசினை மன்னருக்கு வழங்க இருக்கிறார். மூன்றாம் நபர், மார்பில் கையைக் கட்டி மன்னரைப் பவ்யமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். மன்னர் தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வணிகம் செய்ய அனுமதி கேட்க வரும் ஐரோப்பிய வணிகர்களைக் கையாளும் காட்சி நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. இதில் மன்னரும் உதவியாளர்களும் மேலாடையின்றி யதார்த்த உடையிலும், டச்சுக்காரர்கள் தொப்பி - அலங்கரிக்கப்பட்ட வண்ணத் துணிகளாலான ஆடையிலும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளனர்.
மற்றொரு ஓவியத்தில், அரண்மனை தர்பாரில் நிகழும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் விலையுயர்ந்த, அலங்கரிக்கப்பட்ட உடையில் மன்னரும் ராணியும் ஆசனத்தில் அமர்ந்து உத்தரவு வழங்கிக்கொண்டிருக்கின்றனர். எதிர்ப்புறம், மூன்று டச்சுக்காரர்கள் சாதாரண நாற்காலியில் அமர்ந்து மன்னரின் பேச்சைக் கவனித்துவருகின்றனர். இவர்களைச் சுற்றி அரசின் வெவ்வேறு நிலையில் உள்ள பணியாளர்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கின்றனர். முதல் சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பாகவும், இரண்டாம் சந்திப்பு அரசியல்ரீதியானதாகவும் இருக்கக்கூடும். இந்த ஓவியங்கள் மூலம் நாம் தெரிந்துகொள்வது, ஆரம்பத்தில் வணிகத்துக்காக வருகைபுரிந்த ஐரோப்பியர்கள், மிகுந்த பயத்துடனும் மரியாதையுடனும் அரசர்களைச் சந்தித்து சலுகைகளைப் பெற்றனர். பின்னர் சிறிதுசிறிதாக உள்ளூர் அரசியலில் தலையிட்டு, ஒரு கட்டத்தில் நாடு பிடிக்கும் செயலில் ஈடுபடத் தொடங்கினர்.முதலாம் ஓவியத்தில், எளிய உடையில் டச்சுக்காரர்களை ஓரிடத்தில் சந்திக்கிறார். அப்போது, அவர்களை நிற்கவைத்து மன்னர் பேசுகின்றார். அடுத்த ஓவியத்தில், மன்னர் ராணியுடன் அரண்மனையில் அமர்ந்திருக்க, எதிரில் ராஜமரியாதையுடன் டச்சுக்காரர்களை அமரவைத்துப் பேசுகின்றார்.
- கலை வரலாற்று ஆய்வாளர், தொடர்புக்கு: gandhirajanktart@gmail.com