Last Updated : 27 Nov, 2016 12:11 PM

 

Published : 27 Nov 2016 12:11 PM
Last Updated : 27 Nov 2016 12:11 PM

க்யூப சூரியன்

‘அறிவியல் பூர்வமான சோஷலிஸம்’ என்று நாம் அழைக்கும் சித்தாந்தம் தார்மிக நெறியின் மொத்த வடிவமாக இல்லையென்றால் அதனால் ஏதும் பயனில்லை என்பதை வேறு எந்த கம்யூனிஸத் தலைவரையும்விட நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்தியவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அதனால்தான் அவரது உற்ற நண்பரும் மகத்தான படைப்பாளியுமான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், “நம் காலத்தின் மகத்தான லட்சியவாதிகளுள் ஒருவர்” என்று ஃபிடலைக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிலிருந்து ‘சுட்டுவிடும்’ தூரத்தில்தான் இருக்கிறது க்யூபா. அமெரிக்காவைவிட 84 மடங்கு சிறிய நாடு. குட்டித் தீவு! மனித வரலாற்றிலேயே சக்திவாய்ந்த பேரரசு ஒன்றால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் குட்டி நாடான க்யூபா ஏன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டும்? பாகிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம் வந்தபோது, இந்தக் குட்டி நாடு ஏன் அதன் மருத்துவர்களை அங்கு அனுப்ப வேண்டும்? இத்தனைக்கும் பாகிஸ்தானிலோ வேறு எங்கிலுமோ க்யூபாவுக்கு எந்த அரசியல் ஆதாயமும் இல்லை. தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசு நிகழ்த்திய ஊடுருவலிலிருந்து அங்கோலா நாட்டை விடுவிக்க ஏராளமான க்யூபாக்காரர்கள் ஏன் தங்கள் உயிரை தியாகம் செய்ய வேண்டும்? க்யூபாவின் மருத்துவக் குழுவினர் 18-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக் கணக்கான மக்களைக் காப்பாற்றிக்கொண்டு எந்த ஆதாயமும் எதிர்பார்க்காமல் ஏன் பாடுபட வேண்டும்? சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கடும் போராட்டத்துக்குள்ளான 1990-களில் தன் நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் பள்ளி செல்வதை ஏன் உறுதிசெய்ய வேண்டும்? அதே காலகட்டத்தில், உலகச் சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவில் புரதச் சத்தும் போஷாக்கும் நிறைந்த ஆரோக்கியமான உணவை ஒவ்வொரு குடும்பமும் பெறுவதை க்யூபா ஏன் உறுதி செய்ய வேண்டும்? அதேபோல், தேசத்தின் குழந்தை மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான கல்வி கிடைப்பதையும் அவர்களுக்குரிய சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்பெறுவதையும் க்யூபா ஏன் உறுதிசெய்ய வேண்டும்? அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் க்யூபாவுக்கு பல கோடிக்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்பட்டபோதும் அதைப் பொருட்படுத்தாமல், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரத்தை சூறாவளி சூறையாடியபோது ஆயிரக் கணக்கான மருத்துவர்களை அங்கே க்யூபா ஏன் அனுப்பிவைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகளையெல்லாம் தார்மிக நெறியுடன் தொடர்புபடுத்தி ஃபிடல் பார்த்ததுதான் அரசியல் கலையில் அவரைத் தனித்துவம் மிக்கவராக ஆக்குகிறது. தனது எல்லாக் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாத தேசம், தனது எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை ஊட்டச்சத்தை உறுதிசெய்யாத தேசம், ஊட்டச்சத்துக் குறைபாட்டையும், தடுக்கக் கூடிய நோய்களையும் ஒழிக்காத தேசம் அதர்மமான தேசம் என்பது ஃபிடலுடைய கருத்து.

மனிதகுலம்தான் தாய்நாடு

மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலானோரின் மரணத்துக்குக் காரணமாக இருக்கும் நோய்களால் க்யூபர்கள் மரணமடைவதில்லை என்பது குறித்து ஃபிடல் பெருமை கொண்டிருந்தார். மிகவும் வறிய தேசமான க்யூபா எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் ஏன் தனது மருத்துவர்களை உலகின் மூலைமுடுக்குகளில் உள்ள நாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்? “மனிதகுலம்தான் தாய்நாடு” என்ற ஹொசே மார்த்தியின் தாரக மந்திரத்தை அடிக்கடி ஃபிடல் மேற்கோள் காட்டுவார். அவரைப் பொறுத்தவரை தேசியவாதத்தின் இதயத்தில், மனிதகுலம் மொத்தத்துக்கும் ஆற்ற வேண்டிய கடப்பாடு பொதிந்திருக்கிறது.

தொடங்கிய இடம்…

1950-களில், அவரது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில், ஃபிடல் ஒரு தேசியவாதியாக இருந்தார்; தனது நாட்டை அமெரிக்கா சுரண்டுவதற்கு எதிரான அரசியல் அது. பெரு நிலவுடைமையாளரின் மகனான ஃபிடல் ஒரு நடுத்தரவர்க்க ஜனநாயகவாதியாகவும் இருந்தார். அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோதான் ஃபிடலை கம்யூனிஸத்துக்கும் சே குவேராவுக்கும் அறிமுகப்படுத்தினார். இவர்களுடன் மட்டுமல்லாமல், ஏழை விவசாயிகளின் மத்தியில் அவர்களுக்காகப் பாடுபட்டு அவர்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு கம்யூனிஸத்தை நோக்கி மேலும் நகர்ந்தார்.

ஒவ்வொரு புரட்சியும் அசலானதாக இருக்க வேண்டும். ரஷ்யப் புரட்சியின் நகலாக சீனப் புரட்சி நிகழவில்லை; சீனப் புரட்சியின் நகலாக வியத்நாம் புரட்சி நிகழவில்லை. அதேபோல், ஃபிடல் முன்னெடுத்த புரட்சி, ரஷ்யப் புரட்சி நீங்கலான ஏனைய புரட்சிகளைவிடத் தனித்துவமானது. க்யூபாவின் சியரா மயெஸ்த்ரா மலைத் தொடரின் அடர்ந்த காட்டுக்குள் போராளிப் படைகளை உருவாக்கியவர்கள் கட்சிரீதியாக ஒன்று சேர்ந்தவர்களல்ல, புரட்சிகர நோக்கத்துக்காக ஒன்றுசேர்ந்தவர்கள். இருக்கவே முடியாத அந்தப் பிரதேசங்களில் இருந்துகொண்டு, அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி பாதிஸ்தாவின் ராணுவத்தை எதிர்கொண்டு வெற்றிபெற்றதற்கு ஏழை எளியோர்களும் குடியானவர்களும் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும், ஃபிடலும், அந்தப் படையின் இரண்டாவது தளபதியாக இருந்த சேகுவேராவும் முக்கியக் காரணங்கள்.

அவரது ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாத’த்தின் மீது அமெரிக்கா கடுமையான வெறுப்பு கொண்டிருந்தது. அமெரிக்காவின் அந்த வெறுப்பே தேசியவாதம் குறித்த கீழ்க்காணும் வரையறையை ஃபிடல் உருவாக்குமாறு செய்தது: ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக்கொண்டே முதலாளித்துவத்தைப் பின்பற்ற முடியாது; ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருக்க வேண்டும் என்றால் சோஷலிஸ்ட்டாகவும் கம்யூனிஸ்ட்டாகவும் இருந்துதான் ஆக வேண்டும்; முதலாளித்துவத்துக்கும் சோஷலிஸத்துக்கும் இடையே சமரசம் என்பதே கிடையாது.

எளியோருக்காக எளியோர்கள்…

புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்து 18 மாதங்களுக்குப் பிறகு 1960 அக்டோபரில் சோஷலிஸம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார் ஃபிடல். என்றாலும், 1961, ஏப்ரல் 16-ல் அவர் நிகழ்த்திய உரை மூலம்தான் சோஷலிஸம் குறித்த அவரது தீர்க்கமான பார்வை நமக்குக் கிடைக்கிறது. “நாம் இருக்கிறோம், அதனாலேயே ஏகாதிபத்தியவாதிகளால் நம்மைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை… தொழிலாள தோழர்களே, குடியான தோழர்களே, எளியவர்களுக்காக எளியவர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட எளியவர்களின் சோஷலிஸ, ஜனநாயகப் புரட்சி இது… சோஷலிஸப் புரட்சி என்றென்றும் வாழ்க! சுதந்திர க்யூபா என்றென்றும் வாழ்க! தாய்நாடு இல்லையே மரணம்!” என்று அந்த உரையில் பேசியிருப்பார். இப்படிப்பட்ட தீர்க்கமான மாற்றங்களுக்குப் பிறகு, 1965-ல்தான் க்யூப கம்யூனிஸக் கட்சியே உருவாக்கப்படுகிறது.

கருத்துக்களின் போர்க்களத்தில்…

அதிபர் பதவியில் இருந்தபோதும் கருத்துகளின் போர்க்களத்தில் ஒரு வீரராகத் தொடர்ந்து தேசியப் பத்திரிகைகளில் ஃபிடல் எழுதிவந்தார். தனது வாழ்க்கை, க்யூபப் புரட்சி, ஏகாதிபத்தியத்தின் தந்திரங்கள், லத்தீன் அமெரிக்காவின் மற்ற நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஒட்டுமொத்த மனிதகுலமும் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் என்று பலவற்றைப் பற்றியும் ஃபிடல் எழுதினார். எடுத்துக்காட்டாக, உலகம் எதிர்கொண்டிருக்கும் சுற்றுச்சுழல் பேரழிவைப் பற்றி முதன்முதலில், அதாவது 1992-லேயே, எச்சரித்தவர் ஃபிடல்தான். லாபவேட்கையை குறியாகக் கொண்ட தொழிலுற்பத்தியும் அதன் விளைவான நுகர்வியமும் நமது சுற்றுச்சூழலில் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவால் மனித குலத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது என்று ஃபிடல் எச்சரித்தார். அவரது இறுதிக் காலத்திலும் இந்தப் பிரச்சினை அவரது மனதையும் எழுத்துக்களையும் பெரிதும் ஆக்கிரமித்திருந்தது.

க்யூபா என்ற முன்னுதாரணம்

ஆதிக்கத்தின் மூலமாக அல்ல, லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே 100% கல்வி, 0% ஊட்டச்சத்துக் குறைபாடு என்ற சாதனையை எட்டியிருக்கும் ஒரே நாடு என்ற முன்னுதாரணத்தைக் கொண்டே க்யூபா தனது மக்களுக்குச் சேவை செய்கிறது; உலகுக்கு அதை போதிக்கிறது. க்யூபாவில் ஆரம்பக் கல்வியிலும் நடுநிலைக் கல்வியிலும் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தனை பேருக்கு இத்தனை மருத்துவர் என்ற விகிதத்தில் உலகிலேயே க்யூபாவில்தான் அதிக மருத்துவர்கள் இருக்கிறார்கள். தேசத்தின் தொழில்நுட்பப் பணிகளிலும் அறிவியல் பணிகளிலும் பெண்கள்தான் பெரும்பான்மை. ஒரு ஹெக்டேருக்கு இவ்வளவு என்று பார்க்கும்போது க்யூபாவின் வேளாண் உற்பத்தி கணிசமாக உயர்ந்திருக்கும் அதே நேரத்தில் தீங்கான வேதி இடுபொருட்களின் பயன்பாடும் குறைந்திருக்கிறது; சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகளே க்யூபாவின் விவசாயத்தில் அதிகம் பின்பற்றப்படுகின்றன.

தனது நாட்டில் ஏற்பட்ட இந்த வரலாறு காணாத மாற்றங்களின் மேற்பார்வையாளராகத் தான் இருந்தது குறித்து ஃபிடலுக்கு பெரும் மனநிறைவு இருந்தது. குறிப்பாக, 1990-களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு க்யூபாவின் பொருளாதாரத்தில் சில பிரிவுகள் புரட்சிக்கு முன்பு எப்படி இருந்தனவோ அந்த நிலைக்குச் சென்றுவிட்டன. அப்படிப்பட்ட மோசமான சூழலிலிருந்து மீண்டது க்யூபாவின் சரித்திரத்தில் நிகழ்ந்த அற்புதங்களுள் ஒன்று! அவரது அரசியல் வாரிசுகள் லத்தீன் அமெரிக்காவின் பல்வேறு நாடுகளின் ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்தது குறித்தும் ஃபிடலுக்குப் பெருமிதம் இருந்தது. வெனிசுலாவின் ஹ்யூகோ சாவேஸ், பொலிவியாவின் ஏவோ மொராலிஸ் போன்றோர் ஃபிடலின் குறிப்பிடத் தகுந்த அரசியல் வாரிசுகள். நோய்வாய்ப்பட்டிருந்ததால் ஃபிடல் காஸ்ட்ரோ 2008-ல் தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்தபோது ஃபிடல் காஸ்ட்ரோ ஓய்வுபெற்றுவிட்டார் என்று பல பத்திரிகைகள் எழுதின. அப்போது சாவேஸ் “ஃபிடல் போன்ற ஒரு தலைவர் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை. என்றும் அவர் வழி நடத்திக்கொண்டுதான் இருப்பார்” என்று கூறினார். அது முற்றிலும் உண்மையே!

- அய்ஜாஸ் அகமது, இந்தியாவைச் சேர்ந்த மார்க்ஸிஸ சிந்தனையாளர்.

சுருக்கமாகத் தமிழில்: ஆசை

© ஃப்ரண்ட்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x