

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இத்தாலியில் செப்டம்பர் 25 அன்று நிறைவடைந்த பொதுத்தேர்தலில் ‘தி பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ தலைமையிலான வலதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியில், தீவிர வலதுசாரி அரசாங்கம் ஒன்று ஆட்சியைப் பிடித்திருப்பதும், பெண் ஒருவர் பிரதமராகத் தேர்வாகியிருப்பதும் இதுவே முதல்முறை. இது ஐரோப்பிய அரசியலில் மட்டுமின்றி, உலக அரசியலிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் ஜியோர்ஜியோ மெலோனி தலைமை வகிக்கும் கட்சி 26% வாக்குகளைப் பெற்றிருக்கிறது; இந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த ‘லீக்’ கட்சி 8.78% வாக்குகளையும் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையிலான ‘ஃபோர்சா இத்தாலி’ கட்சி 8.12% வாக்குகளையும் பெற்றுள்ளன. 400 இடங்களைக் கொண்ட இத்தாலிய நாடாளுமன்றத்தில் 237 இடங்களை இந்தக் கூட்டணி கைப்பற்றியுள்ளது. மெலோனியின் கட்சி தனித்து 114 இடங்களை வென்றுள்ளது; மேலவையின் 200 இடங்களில் 112 இடங்கள், இக்கூட்டணியின் வசமாகியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே இத்தாலியின் அரசியல் நிலைமை தொடர் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் 11 அரசாங்கங்கள் மாறியிருக்கின்றன. இந்தப் பின்னணியில், நிலையான ஆட்சியைத் தரக்கூடிய பாரம்பரியக் கட்சி ஒன்றை இத்தாலியர்களால் அடையாளம் காண முடியாத சூழலில், புதிய வரவான மெலோனியின் கட்சிக்கு மக்கள் வாய்ப்பளித்திருக்கிறார்கள்.
2012 இல் தொடங்கப்பட்ட ‘தி பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’, 2018 பொதுத்தேர்தலில் வெறும் 4% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில், 26% வாக்குகளைப் பெற்று இப்போது ஆட்சியைப் பிடித்திருப்பது பிரமிப்பாகப் பார்க்கப்பட்டாலும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அக்கட்சி வெற்றிபெறும் என்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. இரண்டாம் உலகப் போர் காலத்தில் இத்தாலியை ஆண்டுவந்த பெனிட்டோ முசோலினியின் பாசிசக் கட்சியான இத்தாலிய சோஷலிச இயக்கத்தின் கூறுகளைக் கொண்டிருப்பதால் அக்கட்சியின் நீட்சியாக மெலோனியின் கட்சி பார்க்கப்படுகிறது. உலகளாவிய வலதுசாரித் தலைவர்கள் பலர் மெலோனி தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘கடவுள், குடும்பம், தாய்நாடு’ என்கிற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்ட மெலோனியின் கட்சி திருநங்கைகள், திருநம்பிகள், தன்பால் ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவர்கள் மற்றும் அகதிகள் சார்ந்து கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. தீவிரத் தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இக்கட்சி, ஐரோப்பிய ஒற்றுமையை வலுப்படுத்தத் தவறலாம் என்கிற அச்சமும் பரவலாக எழுந்துள்ளது. இந்தப் பின்னணியில் உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பா எதிர்கொண்டுள்ள சவால்கள், குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில் எழுந்துள்ள எரிவாயுத் தட்டுப்பாடு, கரோனா பெருந்தொற்று காரணமாகச் சரிந்துள்ள பொருளாதாரத்தைச் சீர்செய்ய வேண்டிய நெருக்கடி எனப் பல்வேறு சவால்களைப் புதிய அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் ஜியோர்ஜியா மெலோனியின் முன்னுரிமை வலதுசாரி அரசியலை முன்னெடுப்பதா நெருக்கடிகளிலிருந்து மீட்பதா என்பதை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது.