Last Updated : 24 Nov, 2016 09:08 AM

 

Published : 24 Nov 2016 09:08 AM
Last Updated : 24 Nov 2016 09:08 AM

1962 சீனப் போரில் விமானப் படையை பயன்படுத்தாதது ஏன்?

ராணுவ உத்திகளைத் தயாரிக்கும்போது விமானப் படையின் உதவி அவசியமா என்று விவாதிக்கப்பட்டது

இந்திய, சீனத் துருப்புகள் வெகு நெருக்கமாக இருந்து போரிட்டதாலும், இரு நாடுகளின் பகுதிகளும் ஒன்று இன்னொன்றில் சொருகி வைத்ததைப் போல கலந்து இருந்ததாலும் விமானப் படை மூலம் குண்டுகளை வீசினால் அது இந்தியத் துருப்புகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தும் என்பதாலுமே விமானப் படையை நாம் பயன்படுத்தும் முடிவு கைவிடப்பட்டது.

இந்திய விமானப் படை தனது 84-வது பிறந்த நாளைச் சமீபத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. இரண்டாவது உலகப் போர் தொடங்கி சமீபத்தில் நடந்து முடிந்த போர் வரையில் இந்திய விமானப் படையின் சாகசங்களையும் மீட்புகளையும் விவரிக்கும் செய்திப்படம் திரையிடப்பட்டது. 1947-48, 1965, 1971 போர்களில் விமானப் படைக்குக் கிடைத்த வெற்றிகள் நன்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 1962-ல் சீனப் படைக்கு எதிராக இந்திய விமானப் படை பயன்படுத்தப்படவே இல்லை என்று படத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார் வர்ணனையாளர். அப்போது வடமேற்கு எல்லைப்புற முகமை (நேஃபா) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கும் லடாக் பிராந்தியத்துக்கும் செல்ல ஹெலிகாப்டர்களும், விமானப் படையின் போக்குவரத்துப் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டன. சீன மக்கள் விடுதலைப் படையின் தரைப் படையானது நேஃபாவிலும் லடாக்கிலும் முன்னேறிக்கொண்டிருந்தபோது நமது விமானப் படையையும் போரில் ஈடுபடுத்த அரசியல் தலைமையும் ராணுவத் தலைமையும் தயங்கியது ஏன்?

அன்றைய நிலை

1962-ல் இந்திய விமானப் படையில் 500-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இருந்தன. ஹண்டர் எம்.கே.-56, நாட், மிஸ்டெரி, டூஃபானி, கான்பெர்ரா, வேம்பைர் ரக விமானங்கள் இருந்தன. இவற்றால் எதிரி விமானத்தை வழிமறிக்க, குண்டுகளை வீச, தரை இலக்குகளைக் குறிவைத்துத் தாக்க முடியும். சீனத்தின் மக்கள் விடுதலைப் படையின் விமானப் படைப் பிரிவில் மிக்-15, மிக்-17, மிக்-19, நடுத்தர தொலைவு இலக்குகளைத் தாக்கும் ஐ.எல்.-28 ரக குண்டுவீச்சு விமானங்கள் இருந்தன.

சீனத்திடமிருந்த விமானங்களின் மொத்த எண்ணிக்கை, அவற்றின் பல்வேறு ரகங்கள், அவற்றின் தாக்கும் திறன் போன்றவை குறித்து வலுவான மதிப்பீடு ஏதும் இந்திய விமானப் படையிடம் அப்போது இல்லை. எனவே ஐபி என்று அழைக்கப்படும் மத்திய ரகசியப் போலீஸ் பிரிவு அளித்த தகவல்களை மட்டுமே அது நம்பியிருந்தது. இந்திய விமானப் படையைப் பயன்படுத்தினால் பதிலுக்கு கல்கத்தா உள்ளிட்ட கிழக்கு மாநில நகரங்களைச் சீனா குண்டுவீசித் தாக்கக் கூடும் என்று ஐபி எச்சரித்தது. அத்துடன், இந்தப் போர் மேலும் சில மாதங்களுக்கு நீடித்தால், “நாங்கள் நெறிமுறைகளின்படி நடக்கிறோம்” என்று கூறி உலக அரங்கில் தார்மிகப் பலத்துடன் கூறிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தது.

திபெத்திலிருந்து மட்டுமே சீன விமானப் படையால் செயல்பட்டிருக்க முடியும் என்பதையும், அங்கிருந்துகூட உயரமான மலைப் பகுதிகளைக் கடந்து ஆயுதங்களுடன் வந்து தாக்குதலில் ஈடுபடுவது சீனத்துக்கு பெருத்த ஆபத்தாகவே இருக்க முடியும் என்பதையும் இந்தியத் தரப்பு கணிக்கத் தவறியது. அசாமிலிருந்தும் பஞ்சாபிலிருந்தும் இந்திய விமானப் படையால் ஏராளமான ஆயுதங்களையும் குண்டுகளையும் எடுத்துச் சென்று சீனப் படைகளின் மீது வீசி, தாக்குதலை முறியடித்திருக்க முடியும்.

‘தரைப் படையுடன் இணைந்து செயல்படும் அளவுக்கு இந்திய விமானப் படை பயன்படுத்தப்படவில்லை’ என்று நேஃபா பகுதியில் பெரிய படைப் பிரிவின் தளபதியாகப் பணியாற்றிய ஜெனரல் பி.எம்.கவுல் தனது வாழ்க்கை வரலாற்றில் வருத்தப்பட்டிருக்கிறார். “கவுல் அப்படி ‘தனக்கு விமானப்படையின் உதவி தேவை’ என்று கோரவே இல்லை” என்று ஐபி-யின் அப்போதைய தலைவர் பி.என்.மல்லிக் தனது வாழ்க்கை வரலாற்றில் பதிலுக்குக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஆனால், விமானப் படையின் உதவி அவசியமா என்ற கேள்வி எழுந்து, அதைப் பற்றி ராணுவ உத்திகளைத் தயாரிக்கும்போது விவாதித்தனர் என்பதே உண்மை.

அப்போது போர்க்களத்தில் இந்திய, சீனத் துருப்புகள் வெகு நெருக்கமாக இருந்து போரிட்டதாலும், இரு நாடுகளின் பகுதிகளும் ஒன்று இன்னொன்றில் சொருகி வைத்ததைப் போல கலந்து இருந்ததாலும் விமானப் படை மூலம் குண்டுகளை வீசினால் அது சீனத் துருப்புகளுக்கு மட்டுமல்ல, இந்தியத் துருப்புகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தும் என்பதாலுமே விமானப் படையை நாம் பயன்படுத்தும் முடிவு கைவிடப்பட்டது.

நேருவின் துடிப்பு

ஐபி மட்டுமல்ல; வேறு சிலரும் இந்திய விமானப்படை பயன்படுத்தப்படுவதைத் தடுத்தனர். 1962-ல் விமானப் படையின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பதிகாரியாக இருந்த எச்.சி.திவான் அவர்களில் ஒருவர். “இந்தியத் துருப்புகள் நேஃபாவில் கடுமையாகச் சிக்கிக்கொண்டுவிட்டதால், ஃபைட்டர் விமானங்களைக் களத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் நேரு துடித்தார். அப்படிச் செய்திருந்தால் இந்தியத் தரப்புக்குக் கடும் சேதம் ஏற்படும் என்பதால் நாங்கள்தான் அதைத் தடுத்தோம்” என்கிறார் திவான்.

லண்டனிலிருந்து வெளிவரும் ‘தி டைம்ஸ்’ பத்திரிகையின் நிருபர் நெவில் மேக்ஸ்வெல், இந்தியாவின் சீனப் போர் என்ற தனது நூலில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “கல்கத்தா உள்ளிட்ட நகரங்களின் மீது சீன விமானங்கள் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் நேஃபாவில் தரைப்படைக்கு ஆதரவாக விமானப் படையின் குண்டுவீச்சு விமானங்களைப் போரில் ஈடுபடுத்தக் கூடாது என்ற முடிவு உயர்நிலையில் எடுக்கப்பட்டது. நேஃபாவின் தரைப்பகுதி சமவெளிகளைப் போன்றது அல்ல என்பதால் விமானப் படையைப் போரில் இறக்கினாலும் அதனால் பலன் ஏற்படுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது” என்று பதிவுசெய்திருக்கிறார் நெவில் மேக்ஸ்வெல்.

அந்தப் போரின் பிற்பகுதியில், அசாமின் தேஸ்பூர், குவாஹாட்டி, மேற்கு வங்கத்தின் தலைநகர் கல்கத்தா ஆகிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி சீனப் படைக் கைப்பற்றினால், அமெரிக்காவின் விமானப் படையைத் துணைக்கு அழைப்பது குறித்து இந்தியா தீவிரமாகப் பரிசீலித்திருக்கிறது. அப்படி எதுவும் நடப்பதற்கு முன்னதாக, சீன மக்கள் விடுதலைப் படையே நவம்பர் 21-ல் தானாகவே போர் நிறுத்தத்தை அறிவித்து நேஃபா பகுதியிலிருந்து முழுதாகவும், லடாக்கின் ஒரு பகுதியிலிருந்தும் விலகிச் சென்றது.

எல்லை மீறிப் போக வேண்டாம் என்று சீன அதிபர் மா சே துங்கை அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி எச்சரித்து, இந்தியப் பிரதமர் நேருவுக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். அமெரிக்க அரசு தங்களுடைய அழைப்பையேற்று வெகு விரைவாக உதவிக்கு வரத் தயாரானதால்தான் சீனத்துடனான போர் நின்றது என்று பிரதமர் நேருவே பின்னாளில் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்; போர் நின்றதற்கு அதுவும் ஒரு காரணம். ‘1962-ன் சீனப் போர் அவமானகரமான தோல்வி’ என்ற கருத்தை இந்திய ராணுவ நிபுணர்களும் வரலாற்று ஆசிரியர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாறாக அதை, நேருவின் அணிசாரா கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்க வேண்டும். அமெரிக்காவிடமிருந்தும் சோவியத் ஒன்றியத்திடமிருந்தும் கிடைத்த மாபெரும் ராணுவ, பொருளாதார உதவிகள் காரணமாக 1965-ல் இந்திய ராணுவப் படைகள் பெரும் போரை எதிர்கொள்ளும் அளவுக்குப் பின்னர் தயாராகிவிட்டன. அது மிகப் பெரிய ஆபத்தினால் (1962 சீன ஆக்கிரமிப்பு) நமக்குக் கிடைத்த நன்மை!

- பிரவீண் தவார், தரைப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x