Published : 09 Nov 2016 08:58 am

Updated : 09 Nov 2016 09:07 am

 

Published : 09 Nov 2016 08:58 AM
Last Updated : 09 Nov 2016 09:07 AM

பள்ளிக்கூடங்களும் ஆசிரியர் வேலையும் காசு சம்பாதிப்பதற்கு மட்டும்தானா?

ஒரு மாணவன், பெரிய தலைமுறை ஒன்றின் துவக்கம்

நகரம். தேரோடும் வீதிக்கு அருகில், தகரக் கொட்டகை போட்ட அந்தப் பள்ளியில் புதிதாய் பள்ளிக்கு வந்த அந்த ஆறு வயதுப் பையனிடம், தலைமை ஆசிரியர் கேட்கிறார்: “தம்பி, உன்னோட அப்பா பேரு என்னப்பா?” பையன் திருதிருவென முழிக்கிறான். தலைமை ஆசிரியர் அவனிடம் “நாளை பள்ளிக்கு வரும்போது உன்னோட அம்மாவையும் கூட்டிட்டு வாப்பா..” என்கிறார்.


மறுநாள் அந்தச் சிறுவனின் அம்மாவிடம் பள்ளித் தலைமை ஆசிரியர் அதே கேள்வியைக் கேட்கிறார். கேட்ட மறுகணம் அந்த அம்மா சொன்னாள், “தெரியாது.’’ இப்போது தலைமை ஆசிரியர் திடுக்கிட்டார். “அம்மா, நான் கேட்பது உன்னுடைய கணவர் பெயரைத்தாம்மா... அதைச் சொன்னால்தான் உங்க பையனை இந்தப் பள்ளியில் சேர்க்க முடியும்” என்றவரிடம், சிறுவனின் தாய் சொல்கிறாள். “ஐயா, நீங்க கேட்பது புரியுது. நாங்க தேவதாசிங்க. என் குழந்தைக்கு அப்பா பெயர் கிடையாது. படிக்க வைக்கணும்னு நெனைக்கிறேங்க ஐயா.”

தேவாலயத்தின் அருகில் பள்ளி

நெல்லைக்கு 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு வந்த ரெயினீஸ் பாதிரியார், எங்கே எல்லாம் கிறிஸ்துவின் பெயரால் தேவாலயம் இருக்கிறதோ, அதற்கு அருகில் கண்டிப்பாக ஒரு துவக்கப் பள்ளி இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டவர். நெல்லைச் சீமையில் இருந்த 18 ஆண்டுகளில் 105 கல்வி நிலையங்களைத் துவக்கியவர். மன உளைச்சலுக்கு ஆளானார். மறுவாரம் நடந்த திருச்சபை பள்ளிகளின் பரிசீலனைக் கூட்டத்தில், தலைமை ஆசிரியர் இந்தப் பிரச்னையைக் கிளப்பினார். விரிவாகப் பேசிய அவர் கடைசியில், “பள்ளியில் படிக்க வந்த அந்தச் சிறுவனைத் திருப்பி அனுப்ப எனக்கு மனசில்லை.. ஒரு மாணவன், பெரிய தலைமுறை ஒன்றின் துவக்கம் அல்லவா?” என்றார்.

கூட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தது. அப்பா பெயர் தெரியாவிட்டால், அம்மா பெயரைப் போட்டு பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம். அந்தப் பகுதியில் இந்தச் சிறுவனைப் போன்ற வேறு சிறுவர், சிறுமிகளையும் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டும் என்று. அன்று முதல் கோமதிகளின் பிள்ளைகள் தங்கள் தாயின் முன்னெழுத்துகளோடு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மாடத்தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பல குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்தனர். எழுத்தாளர் ஜி.நாகராஜன் எழுதிய ‘குறத்தி முடுக்கு’ நாவல், மாடத்தெருவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது!

பள்ளியின் சிறப்பு

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் துவக்கப்பட்ட இந்தப் பள்ளி, தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகு, நாளடைவில் படிப்படியாக மாற்றம் பெற்று எல்லா மாணவர்களும் படிக்கும் பள்ளியாக மாறிவிட்டது. பள்ளியில் படித்த பல மாணவர்கள் உயர்நிலைக்குச் சென்றுள்ளனர்.

பாளையங்கோட்டையில் ‘அஸ்போர்ன் நடுநிலைப் பள்ளி எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால், இன்று பலரும் உதட்டைப் பிதுக்குவார்கள். இத்தனைக்கும் ஊருக்கு மத்தியில் லூர்துநாதன் சிலைக்குப் பின்புறம், நூற்றாண்டு மண்டபம் அருகில்தான் இருக்கிறது.

இந்தப் பள்ளிக்கு ஒரு சிறப்பு உண்டு. பெண் கல்வி இல்லாத அந்தக் காலத்தில், பெண்கள் கல்வி பயில, சாராள் டக்கர் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிச் சிறுமி தனது சக மாணவிகளுடன் சேர்ந்து தங்கம் 300 பவுன்களை வசூலித்து இங்கே அனுப்பினாள். அதில் உருவாக்கிய சாராள் டக்கர் பள்ளி தொடங்கப்பட்ட சில ஆண்டுகள் கழித்து, இஸ்லாமியப் பெண்கள் படிப்பதற்காக இந்த அஸ்போர்ன் பள்ளியை கிறிஸ்தவ மிஷனரிகள் துவக்கின. பிறகு, எல்லா தரப்பினரும் படிக்கும் பள்ளியானது. இப்போது ஆண், பெண் படிக்கும் இருபாலர் பள்ளியாக இருக்கிறது. உயர்ந்த கட்டிடங்களோடு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளிடையே சொற்ப கட்டணத்தோடு செயல்படும் அஸ்போர்ன் பள்ளிகள் எவர் கண்ணிலும் படாமல் போவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது!

‘‘எனக்கு படிப்பு சொல்லிக்கொடுங்கள்!’’

பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவ மனைக்குத் தென்புறம் செல்லும் மண் சாலையில் சாராள் டக்கர் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலகம் இருந்தது. காரியதரிசி அனி ஜேன் ஆஸ்க்வித் என்ற இங்கிலாந்துப் பெண்மணி தனது பணியில் மும்முரமாக இருந்தபோது, வெளியே இருந்து “அம்மா..” என்று ஒரு குரல் கேட்டது.

பரிதாபமாக இருந்த குரல் கேட்டுத் திரும்பிய அனி ஜேன், பரட்டைத் தலையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தார். யாசகம் கேட்கிறான் என்று எண்ணி, “இது பள்ளிக்கூடம் தம்பி... இங்கே பிச்சை எல்லாம் போடுவதில்லை” என்று சொல்லியிருக்கிறார். சிறுவன், “நான் பிச்சை கேட்கவில்லை.. பள்ளிக்கூடம் என்று தெரிந்துதான் கேக்கிறேன்.. எனக்கு படிப்பு சொல்லிக் கொடுங்கள்..” என்கிறான்.

இந்தியாவின் இரண்டாவது பள்ளி

எழுந்து வந்த அனி ஜேன் அவமானத்தால் குறுகி நிற்கிறார். அந்தச் சிறுவனுக்கு கண்பார்வை இல்லை. அவனை இல்லத்துக்கு அழைத்துவருகிறார். அவனது சொற்கள் அவரது இதயத்தைத் தொட்டன. இது நடந்தது 1888-ல். சிறுவன் பெயர் சுப்பு. சுப்புவைப் போன்ற பார்வையற்ற குழந்தைகளுக்கு ஏன் இங்கே ஒரு பள்ளி தொடங்கக் கூடாது என்ற கேள்வி அவரது மனதைக் குடைந்தது. உடனே, சிறுவனை அங்குள்ள ஒரு விடுதியில் சேர்த்துவிட்டு, இங்கிலாந்து திரும்பினார். இரண்டு வருடங்கள் பிரெய்லி முறையில் சொல்லித் தரும் முறையைக் கற்றார்.

1890-ல் மீண்டும் இந்தியா திரும்பி, பாளையங்கோட்டையில் பார்வைத்திறன் குறைந்தோர் பள்ளியைத் துவக்கினார் அனி ஜேன் ஆஸ்க்வித். திருமணம் செய்துகொள்ளாத இந்தப் பெண்மணி துவக்கிய இந்தப் பள்ளிக்கு, பின்னாளில் அவரது பெயரே சூட்டப்பட்டது. 126 ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டையில் துவக்கப்பட்ட இந்தப் பள்ளியே இந்தியாவில் இரண்டாவது பார்வைத்திறன் குறைந்தோர் பள்ளி. சுப்பு முதல் மாணவன். படித்து முடித்து இங்கேயே வேலையும் பார்த்தான் அவன். சுப்புவைப் போலப் பலர் இங்கே கல்வி பயின்றனர். இங்கு மழலையர் பள்ளியிலிருந்து 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். உணவு, உடை, உறைவிடம் எதற்கும் கட்டணம் கிடையாது. பார்வையற்றோர் என்ற மருத்துவரின் சான்றிதழ் மட்டுமே வேண்டும்.

திருநெல்வேலியில் மட்டும் அல்ல; பல ஊர்களிலும் இப்படிச் சில பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இன்று பெரும்பாலும் அவை இருண்டு சுருண்டுவிட்டன. அவற்றின் வரலாறும் இன்றைய தலைமுறைக்குத் தெரிவதில்லை. அந்த வரலாற்றை எல்லாம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். கல்வி நிலையங்களும் ஆசிரியர் வேலையும், காசு சம்பாதிப்பதற்காகத்தான் என்று நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு இன்னொரு உலகமும் இருக்கிறது என்பதை வேறு எப்படித்தான் புரியவைப்பது?

- நாறும்பூநாதன், எழுத்தாளர், ‘கண் முன்னே விரியும் கடல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: narumpu@gmail.com

படங்கள்: அ.ஷேக்முகைதீன்


பள்ளிகள்ஆசிரியர்கள்மாணவர்கள்கற்பித்தல்சம்பாத்தியம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x