Published : 08 Nov 2016 09:11 AM
Last Updated : 08 Nov 2016 09:11 AM

வறுமையையும் பட்டினியையும் ஒழிப்பது எப்படி?

வளர்ச்சியும் மறுபங்கீடும் வறுமை ஒழிப்புக்கு மிக முக்கியமானவை

உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதார நாடு இந்தியா. எனினும், இந்தியர்களில் ஐந்தில் ஒருவர் ஏழை. உலகின் 76 கோடி மக்கள் ஏழைகள்; 80 கோடிப் பேர் போதுமான உணவு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதிர்ச்சி தரும் எண்ணிக்கை இது.

பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட பிரச்சினையான வறுமை, சுதந்திர வாழ்வைப் பின்பற்றுவதில் இருக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. பட்டினியும் அதைத்தான் செய்கிறது. இவற்றை அளவிடுவதில் இருக்கும் குழப்பத்தைக் களையவும், அவை தொடர்பான தகுந்த பார்வையைப் பெறவும் சமீபத்திய இரண்டு அறிக்கைகள் முயல்கின்றன. முதலாவது, சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய பட்டினி அட்டவணை (ஜி.ஹெச்.ஐ.) அறிக்கை. அடுத்து, உலக வங்கி வெளியிட்ட வறுமைக் குறைப்பு மற்றும் இந்தியாவின் வளத்தைப் பகிர்வதற்கான வழிமுறைகள் எனும் அறிக்கை.

உலக நாடுகளில் நிலவும் வறுமையின் அளவைக் கணக்கிட உலகளாவிய பட்டினி அட்டவணை முயல்கிறது. இந்த அட்டவணை, மக்கள்தொகையில் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களின் சதவீதம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு; வளர்ச்சிக் குறைபாடு; இறப்பு விகிதம் ஆகியவற்றின் சதவீதம் எனும் நான்கு கூறுகள் கொண்ட சுட்டிக்காட்டிகளால் ஆனது.

0 முதல் 100 வரை

இந்த அட்டவணை 0 முதல் 100 வரையிலான அளவீடுகளைக் கொண்டி ருக்கிறது. இதில் 100 என்பது ‘முற்றிலும் பட்டினி’ எனும் நிலையையும், 0 என்பது ‘முற்றிலும் பட்டினியின்மை’ எனும் நிலையையும் குறிக்கின்றன. உலக நாடுகளும், பிரதேசங்களும்கூட பட்டினியின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. 9.9-க்கு இணையான - அதற்கும் குறைவான அளவீட்டின் கீழ் வருபவை ‘குறைந்த அளவு பட்டினி கொண்டிருப்பவை’ என்று கருதப்படுகின்றன. 10.0 முதல் 19.9 வரையிலான அளவீட்டைக் கொண்டவை ‘நடுத்தரமானவை’ எனும் வகைப்பாட்டிலும், 20 முதல் 34.9 அளவீட்டின் கீழ் வருபவை ‘தீவிர நிலையில் இருப்பவை’ எனும் வகைப்பாட்டிலும், 35 முதல் 49.9 வரையிலான அளவீட்டின் கீழ் வருபவை ‘அபாயகரமான’ நிலையில் இருப்பவை என்றும், 50-க்கும் அதிகமான புள்ளிகள் கொண்டவை ‘மிகவும் அபாயகரமான’ நிலையில் இருப்பவை என்றும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த ஆண்டின் உலகளாவிய பட்டினி அறிக்கையில் பொருத்தமான சில அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, பட்டினியின் அளவைக் குறைப்பதில் வளரும் நாடுகளுக்குப் பிரதான பங்கு இருக்கிறது. 2000-லிருந்து இந்த நாடுகளில் பட்டினியின் அளவு 29% குறைந்திருக்கிறது. இரண்டாவதாக, ஜி.ஹெச்.ஐ. புள்ளிகள் அதிகம் கொண்ட தனித்த சில பிராந்தியங்கள், ஐநாவின் நீடித்த வளர்ச்சி இலக்குகளைப் பூர்த்திசெய்வதில் உதவலாம். 2016 அட்டவணையில், சஹாராவின் தெற்குப் பகுதி ஆப்பிரிக்க நாடுகளும், தெற்காசியாவும் அதிகபட்ச ஜி.ஹெச்.ஐ. புள்ளிகள் கொண்டிருக்கின்றன (முறையே 30.1 மற்றும் 29.0 புள்ளிகள்). எனவே, அவை ஜி.ஹெச்.ஐ.யில் ‘அபாயகரமான’ வகைப்பாட்டில் வைக்கப் பட்டிருக்கின்றன. மூன்றாவதாக, இந்த அட்டவணையில் பரிசீலிக்கப் பட்டிருக்கும் 118 நாடுகளின் பட்டியலில், இந்தியா படுமோசமாக 97-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதாவது, இன்னமும் ‘தீவிர நிலையில்’ இருக்கும் நாடுகளின் பட்டியலில்தான் இந்தியாவும் இருக்கிறது.

இந்தியாவைவிடச் சிறப்பு

பட்டினியுடன் தொடர்புடைய வறுமையானது, சர்வதேசப் பொருளாதார வளர்ச்சியில் உள்ள மிகச் சிக்கலான பிரச்சினைகளில் ஒன்று. இந்தியாவின் வளர்ச்சி அனுபவத்தில் உலக வங்கி அறிக்கை கவனம் செலுத்துகிறது. நான்கு முக்கிய விஷயங்கள் இதில் வெளிப்படுகின்றன.

முதலாவதாக, 1994-லிருந்து 2013 வரை, இந்தியாவில் வறுமை கணிசமான அளவு குறைந்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதே காலகட்டத்தில், இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் சதவீதம் 45%-லிருந்து 22%-ஆகக் குறைந்திருக்கிறது. அதாவது, 13.3 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். எனினும், இந்தியாவின் வளர்ச்சி அப்படி ஒன்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இரண்டாவதாக, இந்தியாவில் குறிப்பிட்ட சில தரப்பு மக்களின் நிலை, பிற மக்களுடன் ஒப்பிடுகையில் மோசமாகவே உள்ளது. பழங்குடியினரும், பட்டியல் இனத்தவரும் இதில் அடக்கம். 2012 நிலவரப்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களில் 43% பேர் பழங்குடியினர்; 29% பட்டியல் இனத்தவர்.

மூன்றாவதாக, குறிப்பிட்ட சில பகுதிகளில் வறுமை நிரந்தரமாக இருப்பதாகத் தோன்றுகிறது. முற்றிலும் வறுமை எனும் அடிப்படையில் இந்தியாவில் முதல் இடங்களில் இருக்கும் மாநிலங்கள், உத்தரப் பிரதேசம் (6 கோடிப் பேர் ஏழைகள்), பிஹார் (3.6 கோடிப் பேர் ஏழைகள்), மத்தியப் பிரதேசம் (2.4 கோடிப் பேர் ஏழைகள்). முதல் ஏழு இடங்களில் இருக்கும் மாநிலங்களில், இந்தியாவின் ஏழை மக்களில் 62% பேர் வாழ்கிறார்கள். வறுமை எனும் விஷயத்தில் கிராமப்புற - நகர்ப்புற வேறுபாடும் முக்கியமானது. இந்தியாவில் ஐந்து பேரில் ஒருவர் ஏழை. ஒவ்வொரு ஐந்து பேரில் நான்கு பேர் கிராமப்புறத்தில் வசிக்கிறார்கள். அத்துடன், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பெரிய நகரங்களில் வறுமை விகிதம் 7%தான். வறுமையின் அளவு குறைவதற்கு, மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும் என்பது முக்கியமான இன்னொரு புரிதல். வளர்ச்சி விகிதத்தில் பின்தங்கி யிருக்கும் மாநிலங்களின் தனிநபர் ஒட்டு மொத்த மாநில உற்பத்தி குறைவாக இருப் பதுடன், வறுமையும் அதிகமாகவும் உள்ளது.

நான்காவதாக, வளர்ச்சியும் மறுபங்கீடும் வறுமை ஒழிப்புக்கு மிக முக்கியமானவை.

ஆகையால், அடுத்த பதினைந்து ஆண்டுகளில், ஐநாவின் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் முதலாவது, இரண்டாவது இலக்குகளில் மேம்பாடு காண்பதே இந்தியாவின் குடிமக்கள், ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்),

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x