Published : 22 Nov 2016 10:30 AM
Last Updated : 22 Nov 2016 10:30 AM

என்ன நினைக்கிறது உலகம்?- கேள்விக் குறியாகியிருக்கும் ஜனநாயகம்!

கென்ய நாளிதழ் தலையங்கம்.

கென்யாவின் ஜனநாயகம் செழித்து வளரவில்லை என்று சொல்வதே சற்று மேம்போக்கான வர்ணனைதான். உண்மையைச் சொன்னால், கென்யாவில் ஜனநாயகமே தேங்கிப்போய்விட்டது. முக்கியக் காரணம்: அரசியல் கட்சிகள். ஜனநாயகத்தின் சாபமாகவே அரசியல் கட்சிகள் இருக்கின்றன. பொதுவாகவே, அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தை மேம்படுத்த வேண்டும்; முட்டுக்கட்டை போடக் கூடாது. துரதிருஷ்டவசமாக, கென்யாவில் நடப்பது அதுதான். அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கக் கருவூலம் நிதியளிப்பதை ‘அரசியல் கட்சிகள் சட்டம் 2011’ அங்கீகரித்தது. ‘லெட்டர் பேடு’ கட்சிகளைப் புறக்கணிக்கவும், கும்பல்களால் கட்சிகள் ஏலம் போடப்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், ஜனநாயகக் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

மிக முக்கியமாக, அரசியல்வாதிகளின் வசதிக்கேற்ப உருவாக்கப்பட்ட பழங்குடியின, குறுங்குழுவாத அரசியல் கட்சிகளை அச்சட்டம் வெளியேற்றிவிடும் என்றும் நம்பப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் 3 பில்லியன் ஷில்லிங்குகள் (கென்ய கரன்ஸி) அரசியல் கட்சிகளுக்கு முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது ஜனநாயகம்தான் என்று அனுமானிப்பது எளிது. இந்தக் கட்சிகளில் பெரும்பாலானவை, தனிப்பட்ட ஆளுமைகளை மையமாக வைத்து உருவானவை; பழங்குடியினங்கள், பிராந்தியங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டவை. இவை, நாட்டை ஒன்றுபடுத்துவதை விடவும் பிரிப்பதையே அதிகம் செய்கின்றன. அரசியல் தலைவர்கள் இதுபோன்ற கட்சிகளை, சுய விளம்பரத்துக்காகவும், தங்கள் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்திக்கொள்கின்றனர். கென்யா வில் 1991-ல் பல கட்சி அரசியல் அமைப்பு மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. இது, அரசியல் கட்சிகள் மாற்று தேசிய செயல்திட் டங்களைப் பற்றிய விவாதங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

உண்மையில், பாரபட்சமற்ற செயல் திட்டத்தைத்தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். சொல்லப்போனால், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, கென்ய அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகமும், சித்தாந்தமும் அதிக அளவில் தேவையாக இருந்துவருகின்றன. பல கட்சிகள் கொள்கைகளே இல்லாமல், மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமலேயே இயங்கிவருகின்றன. பொதுவாகவே எங்கு சர்வாதிகாரம் நிறைந்திருக்கிறதோ அங்கு, ஒற்றை நபரின் அதிகாரம்தான் இருக்கும். அரசியல் கட்சிகள் சட்டத்தின்(2011) மூலம் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்கள், ஜனநாயகம் தழைப்பதை உறுதிசெய்வதை ஆழமாக நிறைவேற்றிவிடவில்லை. சிறந்த, முற்போக்கான கட்சிகள்தான் முதிர்ச்சியான ஜனநாயகத்தின் முக்கியமான அங்கங்கள். அந்த நிதி அதற்கான ஆதரவைத் திரட்டுவதற்கும், கொள்கை தொடர்பான குடிமை கல்வியை வழங்குவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. வரி செலுத்தும் குடிமக்கள் தங்கள் முதலீட்டுக்கான பலனை அடைய வேண்டிய தருணம் இது!

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x