Last Updated : 02 Nov, 2016 09:17 AM

 

Published : 02 Nov 2016 09:17 AM
Last Updated : 02 Nov 2016 09:17 AM

யார் தரகு வாங்க இந்த உருக்குப் பாலம்?

உருக்கு மேம்பாலம் என்ற நஞ்சை நகர மக்களுக்கு அளிக்கப்பார்க்கிறார் சித்தராமய்யா



அக்டோபர் 16 ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு மாநகர மக்கள் நடத்திய உருக்குப் பால எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். இளைஞனாக இருந்தபோது ஊர்வலங்கள், தர்ணாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக என்னுடைய எதிர்ப்பைக் கூட்டங்களில் பேசியும் கட்டுரைகளில் எழுதியும் தெரிவித்துவருகிறேன். சித்தராமய்யா தலைமையில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, நகரின் முக்கியமான பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மிகப் பெரியதும், வீதிகளின் அழகையே குலைக்கக்கூடியதுமான ஓர் உருக்குப் பாலத்தைக் கட்ட முடிவுசெய்திருக்கிறது.

நன்கு வளர்ந்த 800 பெரிய மரங்களை இதற்காக வெட்டப்போகிறார்கள். புராதனப் பெருமை வாய்ந்த பல கட்டிடங்களை இடிக்கப்போகி றார்கள். இந்தப் பகுதிக்கே அழகூட்டிவரும் பல சாலைகளின் அமைப்பையும் அழகையும் கெடுத்து, சுற்றுப்புறத்தையே நாசப்படுத்தப்போகிறார்கள்.

யாருக்கும் பயனில்லை

பெங்களூரு விமான நிலையத்துக்கு விரைவில் செல்வதற்காக இந்த மேம்பாலத்தை அமைக்கப் போகிறார்களாம். இத்தனை அழிவுகளைச் செய்யாமலேயே மாற்றுவழியில் ஏற்பாடுகளைச் செய்துவிடலாம் என்று போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர். விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் விடுவதன் மூலம் இதைச் சாதிக்கலாம் என்கின்றனர். பாலத்துக்கு ஆகும் செலவில் 4,000 பெரிய பேருந்துகளை வாங்கி நகரப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினால், ஏராளமான தனியார் கார்களுக்கு அவசியம் இல்லாமல் போகலாம். மாற்று யோசனைகளால் குறைந்த அளவுக்கே சமூகத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும். உருக்குப் பாலம் கார் வைத்திருக்கும் பணக்காரர்களுக்குத்தான் அதிகம் பயன்படும். அவர்களுக்குக்கூடப் பயன் இருக்காது. ஏனென்றால், மேம்பாலத்தை வேகமாக கடக்கும் வாகனங்கள் மேம்பால முடிவில் மீண்டும் பெரியதொரு போக்குவரத்து நெரிசலில்தான் சிக்கும்.

இந்தியாவின் மிகச் சிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் பெங்களூருவில்தான் இருக்கிறது. இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி.) அதன் பெயர். போக்குவரத்து, சூழலியல், எரிபொருள் ஆகிய துறைகளில் நல்ல ஆலோசனைகளை வழங்கக்கூடிய உலக நிபுணர்கள் அதில் பணிபுரிகின்றனர். அவர்களிடம் கேட்டிருந்தால்கூட, நெரிசலில் சிக்காமல் விரைவாகவும் பாதுகாப்பாகவும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமலும் விமான நிலையத்துக்கு எப்படிப் போகலாம் என்று திட்டம் வகுத்துக் கொடுத்திருப்பார்கள்.

கமிஷன் பாலம்

2010-லேயே இந்தத் திட்டத்தை வகுத்துவிட்டதாக மாநில அரசு கூறுகிறது. அப்படியென்றால், அதைத் தொடங்க ஏன் இத்தனை தாமதம்? இப்போது இதை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போது உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநில சட்டப் பேரவைகளுக்குப் பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தல் வேலைக்கு காங்கிரஸ் தலைமைக்குப் பணம் தேவைப்படுகிறதா? இந்த மேம்பாலப் பணியில் கிடைக்கும் கமிஷனை அதற்குப் பயன்படுத்த உத்தேசிக்கிறதா? கர்நாடகத்துக்கே பேரவை பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ்காரர்களின் சட்டைப் பைகள் பணம் இல்லாமல் காலியாக இருக்கின்றனவா? அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் இருப்பதால், அதற்குள் கொஞ்சம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனரா?

இந்தத் திட்டத்தால் மிகப்பெரிய ஆபத்து இல்லை என்றாலும், தேவையற்ற இந்த மேம்பாலத் திட்டத்தின் பின்னால் ஏதோ ரகசியம் இருக்கிறது என்று உணர்ந்து மக்கள் தாங்களாகவே திரண்டு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். உத்தேச பாலம் தொடங்கும் இடம் முதல், முதல் பகுதி வேலை முடியவிருக்கும் சாளுக்கியா ஹோட்டலையொட்டிய இடம், பெல்லாரி சாலையும் சி.வி. ராமன் சாலையும் சந்திக்கும் மேக்ரி சர்க்கிள் வரையில் மக்கள் சாலையின் இருபுறமும் மனிதச் சங்கிலி அமைத்து கோஷங்கள் இட்டனர், பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர். ‘நோ’ என்று ஆங்கிலத்திலும் ‘பேடா’ என்று கன்னடத்திலும் அட்டைகளில் எழுதியிருந்தனர்.

வரலாற்றைக் குலைக்கும் செயல்

கொல்கத்தாவைப் போல பெங்களூரு தர்ணாக்களையும் ராஸ்தா ரோகோக்களையும் அதிகம் பார்த்ததில்லை. வங்காளிகள் அதிகமாகவே போராடுகின்றனர். பெங்களூரு குடியேறிகளை அதிகம் கொண்ட நகரம், புரட்சிகர சமூக இயக்கங்கள் அதிகம் இடம் பெறாத நகரம். எனவே, போராட்டங்கள் மிகமிகக் குறைவு. எனவேதான் போராட்டத்துக்கு ஆதரவாக ஏராளமானோர் கூடியது கண்ணைக் கவர்ந்தது.

அன்றிரவு, நியூயார்க் நகரைச் சேர்ந்த எழுத்தாளர் பீட் ஹாமில் எழுதிய ‘பீஸ்வொர்க்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். முதல் இரண்டு கட்டுரைகள் ஹாமில் வாழ்ந்த பாரம்பரியப் பெருமைமிக்க கட்டிடங்கள் உள்ள இடத்தை, நகர வளர்ச்சிக்காக என்று சொல்லி இடித்துத் தரைமட்டமாக்கியதை விவரிக்கிறார். தான் வளர்ந்த நியூயார்க் நகரம் எப்படி காலத்தாலும் முன்னேற்றத்தாலும் பணத்தாசையாலும் விபத்தாகவும் இடித்து சின்னாபின்னமாக்கப்பட்டு, பிறகு வானுயரக் கட்டிடங்களாக எழும்பி நின்றது என்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறார். ஒரு நகரம் என்பது கட்டிடக் கலை என்ற அம்சத்துக்காக மட்டுமல்ல என்கிறார். பழைய அமைப்பையும் வீடுகளையும் வீதிகளையும் குலைப்பது வரலாற்றையே குலைப்பதாகும் என்று குமுறுகிறார். வயதாகிவிட்டது என்று ஒன்றை இடிக்கும்போது, அந்த இடத்தில் புதிதாகத் தோன்றுவது பழையதைவிட அசிங்கமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்ததாகவும் குறிப்பிடுகிறார்.

இருபது முதல் ஐம்பது வரை

ஒரு காலத்தில் இந்திய நகரங்களில் மிகப் பெரிய கட்டிடங்களைக் கட்டும்போது, மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக நாமும் பெரிய அளவில் கட்ட வேண்டும் என்ற ஆசையில் கட்டினார்கள். அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங்கைப் போல நம்மூரிலும் வேண்டும் என்று பெங்களூருவில் பப்ளிக் யுடிலிடி பில்டிங்கை 1970-களில் கட்டினார்கள். அதில் பாதியிடம் யாரும் குடிவராமல் காலியாகவே இருக்கிறது. தீப்பிடித்தால் தப்பித்து ஓடுவதற்கு வழியில்லாமல் அதைக் கட்டியிருப்பதுதான் காரணம்.

சமீப காலங்களில் பெருந்திட்டங்கள் அனைத்தும் ஆள்பவரின் முட்டாள்தனத்தால் அல்ல, மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கினாலேயே விளைகின்றன. விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், புனல் மின் நிலையங்கள் போன்றவற்றை ஏற்படுத்த ஒப்பந்தப்புள்ளி வழங்கும்போது, மொத்தத் திட்டத் தொகையில் கணிசமான பணம் ஒப்பந்தக்காரர்களாலேயே ஆட்சியாளர்களுக்கு அல்லது ஆளும் கட்சிக்கு வழங்கப்படுகிறது. இந்த பேரங்களும் பரிமாற்றங்களும் ரகசியமாகவே நடப்பதால் திட்டவட்டமான தொகை தெரிவதில்லை. ஆனால், பெரும்பாலும் திட்ட மதிப்பில் 20%, சில பெரிய திட்டங்களில் 50% வரையில்கூட கமிஷனாகப் பெறப்பட்டுவருகிறது.

உழைப்பால் உயர்ந்தவர்

அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை வழங்குவதற்கென்றே கட்டுறுதி மிக்க விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. திட்டம் பெரிது என்றால் கமிஷனும் பெரிது. பெங்களூருவில் இப்போது கட்ட உத்தேசித்துள்ள உருக்கு மேம்பாலப் பணித் தொகை மொத்தம் ரூ.1,200 கோடியாக இருந்தது. திடீரென அதன் மதிப்பு ரூ.1,700 கோடியாக உயர்ந்தது. இந்தத் திட்டத்தின் சூத்திரதாரிகளுக்கு மட்டும் ரூ.100 கோடி. வேகவேகமாக இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி, பணம் ஒதுக்கக் காட்டும் அவசரம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு விவகாரம் தொடர்பாக அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறிய ஒருவர், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவை இத்திட்டத்தை ஏற்றுள்ளது. அந்த அமைச்சர் குறித்து பலருக்கும் நல்ல எண்ணம் இல்லை. ஆனால், முதலமைச்சர் சரியாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கை நிலவியது.

2013 மே மாதம் சித்தராமய்யா கர்நாடக முதல்வரானபோது சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும் அவருக்கு இருந்தது. சாதாரண கட்சித் தொண்டராக இருந்து, கடின உழைப்பால் தலைமைப் பதவிக்கு வந்தவர், சாமானியர், சுயமாக முன்னுக்கு வந்தவர். முந்தைய பாஜக அரசின் ஊழல் நடவடிக்கைகளைக் குறிவைத்துப் பேசி ஆட்சியைப் பிடித்தவர். பெல்லாரியைச் சேர்ந்த சுரங்கத் தொழிலதிபர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டது முந்தைய பாஜக அரசு. பதவிக்காக சோனியா, ராகுலின் வீட்டில் குற்றேவல் செய்கிறவர் அல்ல சித்தராமய்யா. தேர்தல் பிரச்சார வேலைகளையெல்லாம் தன் தோளில் சுமந்தவர் என்ற வகையில், முதல்வர் பதவிக்கு உரிமை கோரிப் பெற்றவர்.

கைப்பாவையான சித்தராமய்யா

ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மாறிவிட்டார். எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது மாநிலம் முழுக்கப் பாதயாத்திரை சென்று அரசின் செயலற்ற தன்மையையும் ஊழலையும் தோலுரித்துக் காட்டினார். முதல்வரான பிறகு, பாசனத் திட்டங்களை விரைவுபடுத்துவார், விவசாயத்துக்கு முக்கியத்துவம் தருவார் என்று நம்பப்பட்டது. ஆனால், அப்படி எதை யும் அவர் செய்யவில்லை. பெங்களூரு உள்ளிட்ட மாநில நகரங்களின் தரத்தை உயர்த்துவார், வசதிகளை மேம்படுத்துவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. அதிலும் அவர் கவனம் செலுத்தவில்லை. மூன்றரை ஆண்டு ஆட்சிக்குப் பிறகு, அவர் இரண்டு சக அமைச்சர்களுக்குக் கைப்பாவை ஆகிவிட்டார். முந்தைய அரசில் பெல்லாரி சகோதரர்கள் எப்படியோ அப்படியே அந்த இரு காங்கிரஸ் அமைச்சர்களும் என்றாகிவிட்டது. சகவாச தோஷத்தாலும் செயல்படாத் தன்மையாலும், மக்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் போக்கிக்கொண்டுவிட்டார். ஒரு வகையில், முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஒப்பிடத்தக்கவராக இருக்கிறார். ஆட்சிக்கு வந்தபோது நல்லவர், நன்மைகளைச் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது.

பதவிக்காலத்தின் இறுதிப் பகுதியில் உருக்கு மேம்பாலம் என்ற நஞ்சை நகர மக்களுக்கு அளிக்கப்பார்க்கிறார் சித்தராமய்யா. 800 மரங்களைப் பலிவாங்கும் இந்தப் பாலம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எந்த வகையிலும் உதவாது. கட்சிக்காரர்களின் பைகளை நிரப்ப மட்டுமே உதவும். முட்டாள்தனமானதும் மோசடியானதுமான இந்தத் திட்டத்தை ஒரு சிறுமி கையில் பிடித்திருந்த வாசக அட்டை தெளிவாக உணர்த்தியது. ‘உருக்கால் அல்ல, ஊழலால் பாலம் கட்டி ஏமாற்றாதீர்’ என்பதே அது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x