Last Updated : 02 Nov, 2016 09:21 AM

 

Published : 02 Nov 2016 09:21 AM
Last Updated : 02 Nov 2016 09:21 AM

அமெரிக்கா ஏன் ஈர்க்கிறது?

அமெரிக்கா உழைப்பை மதிக்கும் தேசம். திறமையை மதிக்கும் தேசம்.

சென்ற சனிக்கிழமை எனது வீட்டுக்கு ஒரு அமெரிக்கப் பெண் வந்திருந்தார். வெள்ளை இனத்தவர். மனித உரிமை வழக்கறிஞராகப் பணிபுரிபவர். இந்தியா முழுவதும் சுற்றியவர். “இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்டேன். “கடுமையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முழு முயற்சி செய்துகொண்டிருக்கிறது. எங்கள் நாட்டில் இந்தியாவில் இருப்பதைப் போன்ற பிரச்சினைகள் இருந்தால், தெருவில் நடக்க முடியாதபடி வன்முறை வெடித்திருக்கும். ஆனால், இந்திய மக்கள் கூடிய மட்டும் வன்முறையை விரும்பாதவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார். “இப்போது என்ன வன்முறை குறைவா?” என்று கேட்டேன். “இல்லை. ஆனால், இப்போது இருப்பதைவிட மிக அதிகமாக இருக்கும்” என்றார்.

வன்முறையின் புள்ளிவிவரங்கள்

நான் இவ்வாறு எழுதுவதால் அமெரிக்காவில் தெருவில் நடமாட முடியாதபடி வன்முறை இருக்கிறது என்று நினைத்துவிட வேண்டாம். பெண்கள் தனியாக இரவில் நடமாட முடியும். காரோட்ட முடியும். பத்திரமாக வீடு திரும்ப முடியும். ஆனால், சில இடங்களுக்கு யாருமே பத்திரமாகச் சென்று திரும்ப முடியாது. அமெரிக்காவில் 12 லட்சத்துக்கு மேல் போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள். அதாவது, ஒரு லட்சம் பேருக்கு சுமார் 300 போலீஸார். இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 119 போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள். இருப்பினும், அமெரிக்காவில் இந்தியாவைவிட இரு மடங்கு அதிகம் கொலைகள் நடக்கின்றன. பாலியல் வன்புணர்வு 15 மடங்கு அதிகம். அமெரிக்காவில் 22 லட்சத்துக்கும் மேலானோர் சிறையில் இருக்கிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100 பேரில் ஒருவர் சிறையில் இருக்கிறார். (இந்தியாவில் சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 லட்சம்.)

உலகில் சிறையில் இருப்பவர்களில் 25% அமெ ரிக்கர்கள். இவர்களில் பெரும்பாலானவர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். லத்தீன் அமெரிக்கர்கள். அதிர வைக்கும் வன்முறையும் குற்றங்களும் அவற்றை எதிர்கொள்வதற்கான கடுமையான முயற்சிகளும் அமெரிக்காவில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கின்றன.

ஆனாலும், உலக மக்களிடம் நீங்கள் எங்கு வசிக்க விரும்புகிறீர்கள் என்றால் பெரும்பாலான வர்கள் அமெரிக்கா என்றுதான் சொல்வார்கள். காரணங்கள் என்ன? முக்கியமாக மூன்று காரணங்கள் இருக்கின்றன.

மூன்று காரணங்கள்

அமெரிக்கா உழைப்பை மதிக்கும் தேசம். திறமையை மதிக்கும் தேசம், துணிந்து இறங்குவதை மதிக்கும் தேசம்.

அமெரிக்க முதலாளித்துவ முறைகளில் ஒரு அடிப்படை ஜனநாயகம் இருப்பதாக ஜோசஃப் ஸ்டாலின் ஒரு நேர்காணலில் 75 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னார். அமெரிக்கத் தொழிலாளர்கள் பல பின்னடைவுகளைச் சந்தித்தாலும், ஸ்டாலின் சொன்ன ஜனநாயகம் அதிகம் சிதையாமல் இன்று வரை இருக்கிறது. உதாரணமாக, சான்பிரான்சிஸ்கோ நகரில் துப்புரவுத் தொழிலாளியின் சராசரி வருட வருமானம் 40,000 டாலர் (சுமார் ரூ.27 லட்சம் ரூபாய்). ஒரு எழுத்தரின் சராசரி வருட வருமானமும் அதே அளவுதான். மனித உழைப்புக்கு இந்த மரியாதை இந்தியாவில் கிடைப்பதில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். யாரும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். உணவு விடுதியில் ‘சாப்பிட என்ன வேண்டும்?’ என்று உங்களிடம் பணிவாகக் கேட்கும் இளைஞர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்குப் படித்துக்கொண்டிருக்கலாம்.

அமெரிக்கா திறமையை மதிக்கிறது என்பதை இந்தியராகிய நமக்குச் சொல்லித் தெரிவிக்க வேண்டியதில்லை. சுந்தர் பிச்சை வகையறாக்களைப் பற்றி பேசி அலுத்திருக்கும். இங்குள்ள பல்கலைக்கழகங்களில் நடக்கும் அறிவுத் தேடல்கள் நாம் நினைத்தே பார்க்க முடியாதவை. உதாரணமாக, டேவிட் ஷுல்மனின் ‘தமிழ்: வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தை போன மாதம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. இந்தியச் செவ்விலக்கிய வரிசையில் பல புத்தகங்களை அது கொண்டுவந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களுக்கு நல்ல ஆங்கில மொழிபெயர்ப்புகளை இன்றுவரை அமெரிக்கப் பல்கலைக்கழகப் பதிப்புகளில்தான் தேட வேண்டும்.

துணிந்து இறங்கியதை அமெரிக்கா மதிக்கிறது என்பதற்கு கூகுள், ஃபேஸ்புக் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால், சிறிய அளவில் எல்லாத் துறைகளிலும் பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதிகம் விளம்பரம் பெறாத முயற்சிகள். ஆனால், தனி மனிதர்கள் சேர்ந்து முதலீடு செய்து ஊக்குவிக்கும் முயற்சிகள். நண்பர் ஒருவரின் மனைவி நேற்று அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சோதனைச்சாலையைப் பற்றிச் சொன்னார். வளர்ச்சி குன்றியவர்களின் வளர்ச்சியைச் சீர்செய்ய இயக்குநீர் ஒன்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இது மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம் அல்ல. ஒரே ஒரு மருந்தைத் தயாரிப்பதில் முழு முனைப்போடு ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சிறிய நிறுவனம். இப்போது மருந்து கண்டுபிடிப்பின் மூன்றாவது கட்டத்தில் இருக்கிறது. மனிதர்களுக்கு மருந்தைக் கொடுத்து அதன் விளைவுகளைப் பரிசோதிக்கும் கட்டம். மருந்து குணப்படுத்தலாம். குணப்படுத்தாமலும் போகலாம். ஆனால், இந்த நிறுவனத்தின் திறமை மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு நிதி அளிக்க தனி மனிதர்கள் இருக்கிறார்கள். இதுதான் அமெரிக்கா. இந்தியாவிலிருந்து எனக்குத் தெரிந்து இதுவரை ஒரு மருந்துகூட மூன்றாவது கட்டத்தைத் தாண்டியது இல்லை.

வகை வகையான மனிதர்கள்

அமெரிக்கப் பெருநகரங்களில்தான் அதன் ஈர்ப்புத்தன்மை தெளிவாகத் தெரிகிறது. உலகில் எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து வாழ்க்கை நடத்துவதைப் பார்க்க முடிகிறது. சென்ற தடவை ஊபர் காரோட்டியிடம் எந்த நாடு என்று கேட்டேன். மாலி என்றார். டிம்பக்டூ நகரமா என்று நான் கேட்டதும் ஒரே மகிழ்ச்சி. ஆமாம், ரம்ஜானுக்கு ஊருக்குப் போகிறேன் என்றார்.

அமெரிக்கா உருவான நாளிலிருந்து ஆட்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வேண்டவே வேண்டாம் என்று அதிபர் வேட்பாளர் ஒருவர் சொல்கிறார். இல்லை, கதவை அடைக்க முடியாது என்று மற்றொருவர் சொல்கிறார்.

இருவரில் யார் வெற்றி பெறப்போகிறார்?

(அமெரிக்காவைச் சுற்றுவோம்)

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x