Published : 12 Sep 2022 07:10 AM
Last Updated : 12 Sep 2022 07:10 AM

தேவை மொழிப் பல்கலைக்கழகங்களுக்கான சமநீதி

கோ.பாலசுப்ரமணியன்,

தமிழ்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களுள் பல, தேசியத் தரவரிசைப் பட்டியலில் உயர்நிலை இடம்பிடித்திருப்பது தமிழ்நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்குக் கிடைத்த நற்சான்றாகும். 29.08.2022 இல் வெளியான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப் பக்கக் கட்டுரையில் க.திருவாசகம், தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகப் பல்கலைக்கழக மானியக் குழுவின் முனைப்பும் தமிழக அரசின் எதிர் நிலைப்பாடும் அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவதில் சிக்கல்களை உருவாக்கும் என எச்சரித்துள்ளார்.

இச்சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற மொழிப் பல்கலைக்கழகங்கள் தர மதிப்பீட்டில் உயர்நிலைத் தரச் சான்றிதழ் பெறவே இயலாத நிலை உள்ளது என்பதையும் சேர்த்தே கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.

மத்திய மொழி நிறுவனங்கள்: இந்திக்கு மஹாராஷ்டிரத்தின் வார்தாவில் ‘மகாத்மா காந்தி அந்தராஷ்டிரீய இந்தி விஸ்வ வித்யாலயா’ எனும் மத்தியப் பல்கலைக்கழகமும் (1997), மத்திய இந்தி இயக்ககமும் உள்ளன.

உருது மொழிக்கு ‘மௌலானா ஆசாத் தேசிய உருதுப் பல்கலைக்கழகம்’ (1998) ஹைதராபாத்தில் செயல்பட்டுவருகிறது. இந்திய மொழிகளுக்காக இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் (1969) மைசூரில் நிறுவப்பட்டுள்ளது. செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மொழிகளுள் தமிழுக்கு மட்டும் சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கிவருகிறது.

சம்ஸ்கிருதம் தவிர்த்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு, செம்மொழிச் சிறப்பாய்வு மையங்கள் இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலம், அயலக மொழிகள் பல்கலைக்கழகம் (2007) ஹைதராபாத்தில் இயங்கிவருகிறது.

சம்ஸ்கிருதத்துக்கு மத்திய - மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டுள்ள 18 பல்கலைக்கழகங்களுள், 2020இல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் வழியாக மத்திய சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகம் (டெல்லி), ஸ்ரீ லால்பகதூர் சாஸ்திரி சம்ஸ்கிருத வித்யாபீடம் (டெல்லி), ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத வித்யாபீடம் (திருப்பதி) ஆகிய மூன்று சம்ஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன.

இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமச்சீரான வளர்ச்சிபெறுவதை உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. இந்திய மொழிகள் அனைத்துக்கும் மைசூரில் ஒரு மத்திய நிறுவனம் மட்டுமே உள்ள நிலையில், சம்ஸ்கிருதத்துக்கு மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு உள்ள சிறப்பாய்வு மையங்களும் அந்தந்த மொழிகளின் செம்மொழிக் காலகட்ட மொழி, இலக்கியங்கள் போன்றவற்றை மட்டுமே ஆய்வுசெய்வதற்காக அமைக்கப்பட்ட நிறுவனங்கள்.

இந்நிறுவனங்களில் செம்மொழிகளின் தற்காலப் பயன்பாடு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளவோ திட்டமிட்டு மொழி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்கோ பெரிய அளவில் வழிவகை இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.

எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள்: 1981இல் நிறுவப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தை அடியொற்றி தெலுங்கு (1985), கன்னடம் (1991), மலையாளம் (2012) ஆகிய மொழிகளுக்கும் அந்தந்த மாநில அரசுகளால் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. திராவிட மொழிகளுக்காக ஆந்திர அரசால், பிற தென்னிந்திய அரசுகளின் ஒத்துழைப்புடன், குப்பம் எனும் ஊரில் 1997இல் திராவிடப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

இப்பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநில அரசுகளின் நிதியிலேயே இயங்கிவருகின்றன. மாநிலப் பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பு, ஆய்வுத் திட்டங்கள் உள்ளிட்ட இனங்களுக்கு நிதியுதவி அளித்துவந்த பல்கலைக்கழக மானியக் குழு, 12ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திற்குப் (2012-2017) பிறகு, முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதைத் தவிர, வேறு நிதி ஏதும் வழங்குவதில்லை.

மொழிப் பல்கலைக்கழகங்கள் உட்பட மாநிலப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தன்னளவிலேயே நிதி ஆதாரத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தமையால், மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் தொலைநிலைக் கல்வியைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பல்கலைக்கழகங்களுக்கு ரூசா (RUSA) என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த உயர் கல்வி வளர்ச்சித் திட்ட அமைப்பு, மாநில அரசின் (40%) உதவியுடன் உள்கட்டமைப்பு, ஆய்வு முதலானவற்றிற்கு நிதி வழங்கிவருகிறது.

பல கூறுகளாகப் பிரித்து வழங்கப்படும் இந்த நிதியில், ஆய்வு உட்பட அனைத்துக் கூறுகளுக்கும் நிதியைப் பெறுவதற்குத் தேசிய தரமதிப்பீட்டுக் குழுவால் (NAAC) பல்கலைக்கழகங்கள் சீர்தூக்கப்பட்டு, குறைந்த அளவாக ‘ஏ’ எனும் தரநிலையில் 3.01 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். தொலைநிலைக் கல்விப் படிப்புகளை வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பைப் பெறுவதற்கும் ‘ஏ’ தரம் கட்டாயமாகும்.

இச்சீர்தூக்கலுக்கான மதிப்பீட்டு முறைகள் பல்வகைக் கல்வித் துறைகளைக் கொண்ட பொதுப் பல்கலைக்கழகங்களுக்கானவை. தற்போதையநிலவரப்படி தமிழ்ப் பல்கலைக்கழகம் B ; கன்னடப் பல்கலைக்கழகம் B ; தெலுங்கு B; திராவிடப் பல்கலைக்கழகம் B என்ற அளவிலேயே தரச்சான்றுகளைப் பெற்றுள்ளன.

இப்பல்கலைக்கழகங்கள் ரூசா வழங்கும் நிதிக் கூறுகள் அனைத்தையும் பெறவியலாது; தொலைநிலைக் கல்வியை வழங்கவோ இணையவழியாக மொழிக் கல்வியைப் பரவலாக்கவோ பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிப்பையும் பெறவியலாது.

தமிழ் உள்ளிட்ட மொழிப் பல்கலைக்கழகங்கள் சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகங்களைவிட ஆய்விலும் பிற அளவீடுகளிலும் தாழ்நிலையில் உள்ளதால்தான், அவற்றுக்கு ‘ஏ’ தரச்சான்று கிடைக்கவில்லை என்று கருதிவிட இயலாது. ‘நாக்’ அமைப்பு, சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகங்களுக்கென்று தனித்துவமதிப்பீட்டு முறைகளை வகுத்துள்ளது.

‘சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் மரபார்ந்த அறிவுச் செல்வத்தை வளர்த்தெடுப்பதிலும், பண்பாட்டு உணர்வை உருவாக்குவதிலும் சிறந்த பங்களிப்பைச் செய்வதன்வழி நாட்டு ஒற்றுமையை வலுப்படுத்தும்’ என்று கூறி 18 சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகங்களுள் 6-க்கு ஏ தரச்சான்று கிடைத்துள்ளது.

சிறப்புத் தகுதி: மொழி தொடர்பான மத்திய அரசின் முன்னெடுப்புகளில் மாநில மொழிகளுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை; உயர் கல்வி நிறுவனங்களை விருப்பு வெறுப்பின்றிச் சீர்தூக்கி, சான்றிதழ் வழங்கும் ‘நாக்’ அமைப்பின் மதிப்பீட்டு முறைகளும் மாநில மொழிப் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்குத் துணைபுரியக் கூடியவையாக இல்லை என்பது வெளிப்படை.

எனவே, 1.சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளதுபோல தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் ‘நாக்’ அமைப்பின் தனி மதிப்பீட்டு முறைகள் வகுக்கப்பட வேண்டும்; 2. தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழைப் பரப்புவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் மொழி ஆய்வுகளைத் தொய்வின்றி மேற்கொள்வதற்கும் மத்திய அரசின் நிதி போதிய அளவில் கிடைக்க ஏதுவாக சம்ஸ்கிருதத்துக்கு மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்களை உருவாக்கியிருப்பதற்கு இணையாக மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நாடாளுமன்றத் தீர்மானத்தின் மூலம் சிறப்புத் தகுதி அளிக்கப்பட வேண்டும்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மொழிப் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்தி, கட்டமைப்புப் பணிகளுக்கும் ஆய்வுத் திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி அளிப்பதன் மூலம், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் வளர்ச்சியில் மத்திய அரசு நேரடியாகப் பங்காற்ற வேண்டும்.

- கோ.பாலசுப்ரமணியன்,

தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

தொடர்புக்கு: gbalu123@gmail.com

To Read in English: Needed: Justice for language universities

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x