Last Updated : 17 Oct, 2016 08:56 AM

 

Published : 17 Oct 2016 08:56 AM
Last Updated : 17 Oct 2016 08:56 AM

விளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்?

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா ஒரு தங்கம்கூட வாங்கியதில்லை என்ற கசப்பான வரலாறு, நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் வரையிலும் தொடர்கிறது. தடகளத்தில் ஏன் இந்த முறையும் இந்தியா மண்ணைக் கவ்வியது?

ஊழல், அரசியல் என்று அரதப்பழசான வார்த்தைகளையே சொல்லித் தப்பிக்கப் போகிறோமா? தோற்றுப்போன களத்தை ஆய்வுசெய்யாமல் விடுவது அடுத்த தோல்வியின் முதல்படி. இந்த ஒலிம்பிக்கைக் கள ஆய்வு செய்வோம்.

இந்தியாவின் தடகளக் குழுதான் அதிகமான வீரர்களை அனுப்பியது. மொத்தம் 34 பேர். ஒலிம்பிக் முடிவில் அவர்களின் தரப் பட்டியல் இது. டூட்டி சந்த் (100 மீ) 50-வது இடம், ஸ்சரபானி (200 மீ) 55-வது, நிர்மலா (400மீ) 44-வது, அங்கித் சர்மா (நீளம் தாண்டுதல்) 24-வது, விகாஸ் கௌடா (வட்டு எறிதல்) 28-வது, டின்டு லூகா (800 மீ) 29-வது, சுதா சிங் (3,000 மீ) 30-வது, ரஞ்சித் மகேஷ்வரி (நீளம் தாண்டுதல்) 30-வது, தொனகல் கோபி (மாரத்தான்) 25-வது, கேதா ராம் (மாரத்தான்) 26-வது, நிதேந்திர சிங் நாவத் (மாரத்தான்) 84-வது, மன்தீப் கவூர் (50 கிமீ நடை) 54-வது, பெண்கள் மாரத்தான் ஜைஷா 89-வது, கவிதா 120-வது இடம்.

பட்டியலை நுட்பமாகப் பார்த்தால் ஒன்று புரியும், இவர்கள் யாரும் முதல் 25 இடங்களில்கூட இல்லையென்பது. இரண்டு தமிழக வீரர்களைக் கொண்ட இந்திய தொடர் ஓட்ட அணி தகுதிநீக்கமே செய்யப்பட்டுவிட்டது. வட்டு எறிதலில் தகுதி தூரம் 66.00 மீ. ஆனால், கௌடா வீசியதோ 58.99 மீ. ரஞ்சித் மகேஷ்வரி மும்முறை நீளம் தாண்டுதலில் தகுதி அளவான 16.85 மீ. விடக் குறைவாகவே (16.13 மீ.) தாண்டினார். நீளம் தாண்டுதலில் தகுதி அளவு 8.15 மீ. நம்மவர் குதித்ததோ 7.67 மீ.

இவ்வளவு மனித சக்தியைக் கொண்ட ஒரு தேசம், தடகளத்தில் தகுதிச் சுற்றுக்குக்கூடத் தடுமாறுகிறது என்பதை எப்படி மென்மையுடன் அணுக முடியும்?

வாழ்வதும் வீழ்வதும்

ஒரு வீரர் முன்னணி ரேங்கிங்கை வைத்திருக்கும்போது அணியிலிருந்து அவரைக் கழட்டிவிடுவது சிரமமான ஒன்று. கிரிக்கெட் போன்று குழு விளையாட்டுப் போட்டிகளில் அரசியல் செய்து யாரையும் நீக்கிவிடலாம். ஆனால், தடகளத்தில் வாழ்வதும் வீழ்வதும் ஒரு வீரனின் தனிப்பட்ட செயல்பாடு. இப்படி தனி ஆளுமை கொண்ட விளையாட்டுகளில் ஏன் முதல் 10 இடங்களில்கூட இந்தியர்களால் வர முடியவில்லை?

மிக முக்கியக் காரணம், பயிற்சியின்மை. இது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். “ஒவ்வொரு வீரரும் எவ்வளவு பயிற்சி செய்கிறார்கள்? பயிற்சியின்மை என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” எனக் கேட்கலாம். பயிற்சிக்கான தடகளத்தில் அசைக்க முடியாத நாடுகளான ஜமைக்காவையும், அமெரிக்காவையும், ஆப்பிரிக்காவையும் நோக்கிக் கை நீட்டுவேன். அவர்களின் பயிற்சியையும் நம் பயிற்சியையும் தராசிடுங்கள், பிறகு தெரியும் இந்தியா ஏன் சர்வதேச வீரர்களை உருவாக்கவில்லை என்று.

திட்டமிட்ட பயிற்சி

ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட ரஞ்சித் மகேஷ்வரி, டின்டு போல பெரும்பான்மையானோர் தேசிய சாதனையைத் தன்வசம் கொண்டவர்கள். இந்தியர்களில் தேசிய சாதனை ஒலிம்பிக்கில் 25-வது இடத்துக்குத் தள்ளப்படுகிறது. 2000-ல், சிட்னி ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 56-வது இடத்தில் இருந்த ஜமைக்கா ரியோவில் 16-வது இடத்துக்கு எப்படி வந்தது? கென்யா, ஜமைக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் மனிதவளம், பொருளாதாரத்தின் பக்கத்தில்கூட வர முடியாத நாடுகள் என்பதை அறிவோம். அப்படியிருந்தும் அவர்கள் ஜொலிப்பது எதனால்? திட்டமிட்ட பயிற்சி.

நம் வீரர்களை ஆப்பிரிக்காவுக்கும், ஜமைக்காவுக்கும் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். சுழற்சி முறைகளில் வீரர்களை அனுப்பி, நம் களத்தை மீட்டெடுக்க வேண்டும். வீரர்களின் செயல்பாடுகள், தேர்வு முறையில் வெளிப்படைத் தன்மையைக் கட்டாயமாக்க வேண்டும்.

முதல் தமிழ்ப் பெண்

ஆப்பிரிக்க நாடுகள் பயிற்சிக்குக் கண்டிப்பு பெற்றவை. வீரர்கள் பயிற்சியைத் தவிர வேறெந்தச் சலுகையையும் எதிர்பார்க்க முடியாது. டூட்டி சந்த், விமானத்தில் தனக்கு உயர் வகுப்பு இருக்கை கிடைக்கவில்லை என்கிறார். போட்டிகள் முடிந்து ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே அதிகபட்சமாக ஆறு தங்கம் உட்பட அதிகப் பதக்கங்கள் குவித்த கென்யாவோ, “எப்போது விமானக் கட்டணங்கள் குறையும் ஊருக்குப் போலாம்” என்று ஒலிம்பிக் கிராமம் மூடப்பட்ட நிலையில், பிரேசிலில் ஒரு ஒதுக்குப்புறக் கிராமத்தில் சில நாட்கள் காந்திருந்தது.

தோற்றுப்போனதற்கு இன்னொரு முக்கியக் காரணம், திறமையானவர்களை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதது. உங்களுக்கு சாந்தியைத் தெரிந்திருக்கும். 2006-ல் தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் 200 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற முதல் தமிழ்ப் பெண் அவர். தேசிய அளவில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும், சர்வதேசப் போட்டிகளில் 11 பதக்கங்களையும் வென்றவரான சாந்தி, பாலினச் சர்ச்சையில் சிக்கினார். அதில் பதக்கங்களும் பறிக்கப்பட்டதுடன், எந்தப் போட்டியிலும் பங்கேற்றக முடியாதபடி தடையும் விதிக்கப்பட்டது. இந்திய அரசு அவரைக் கைவிட்டதால், செங்கல்சூளை வேலைக்குப் போனார் சாந்தி.

ஆப்பிரிக்காவின் அடையாளம் செமன்யா

சாந்திக்கு நடந்ததைப் போலவே தென் ஆப்பிரிக்க வீராங்கனை செமன்யாவுக்கு 2009-ல் பிரச்சினை வந்தபோது, அந்த தேசமே வெகுண்டெழுந்தது. பெர்லினில் வென்ற தங்கத்தைப் பறிகொடுத்துவிட்டு, நாடு திரும்பிய செமன்யாவை தென்னாப்பிரிக்க விளையாட்டுத் துறை அமைச்சரே நேரில் வரவேற்று ஆறுதல் சொன்னார். அந்தச் சோதனைக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்த அந்நாட்டுப் பிரதமர், அரசு சார்பில் ஐநா அவையில் வழக்கும் தொடர்ந்தார். வெற்றியும் கிடைத்தது. தென் ஆப்பிரிக்காவின் பெருமை மிகு அடையாளமாக செமன்யா பார்க்கப்பட்டார். 2012-ல் லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில், தென்னாப்பிரிக்காவின் சார்பாக அந்நாட்டுக் கொடியைக் கையில் ஏந்திச் சென்றவர் அதே காஸ்டர் செமன்யாதான். இதோ தன் தேசத்துக்காக ரியோவிலும் தங்கம் வாங்கிக் கொடுத்துள்ளார். அமெரிக்க நாடுகளில் கவுண்டி எனப்படும் உள்ளூர் விளையாட்டுகளில் ஜெயித்தவர்கள்கூட நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வருவார். நாம்தான் ஆசிய வீராங்கனையைச் செங்கல் பொறுக்க விடுகிறோம்.

கண்டுகொள்ளப்படாத வீரர்களைப் போல புதிய வீரர்களைக் கண்டுபிடிக்காததும் தோல்வியின் காரணம். திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் வாழ்வாதாரத் தேவைக்கு அரசு பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். சர்வதேசத் தரத்திலான விளையாட்டு மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகளைப் படிப்படியாக உருவாக்க வேண்டும். கிராமம், நகரம் மாவட்ட வாரியான தடகளப் போட்டிகளை நடத்த ஊக்கப்படுத்தவும், கலந்துகொள்ளும் வீரர்களை மதிப்புடனும், கரிசனத்துடனும் தேர்வு செய்ய வேண்டும்.

தோல்விக்கு நாம் காரணம்

இந்திய சராசரி மனநிலையும் நம்மைத் தோல்விக்கு இட்டுச்சென்றது. இந்தியர்கள் விளையாட்டுத் துறைக்கு வராததன் காரணம், பணம் சம்பாதிக்க முடியாது என்ற எண்ணம். பணம்தான் முக்கியமென்றால், 21 வயதில் பி.வி.சிந்து சம்பாதித்ததைவிட, மனப்பாடக் கல்வியைப் படிக்கும் நாம் யாரும் சம்பாதிக்க முடியாது என்பதைத் தாழ்மையுடன் நினைவுபடுத்துகிறேன்.

இந்த கசப்பான தோல்விக்கு இன்னொரு காரணம், நாம். ஆம்! நாமேதான். கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு குடிமகனாக நாம் என்ன செய்திருக்கிறோம்? அவர்களைக் கண்டால் புன்னகையுடன் கைகுலுக்குங்கள், அவர்கள் இந்தியாவின் கனவுகளைச் சுமக்கிறார்கள். ஏன் அவர்களுடன் ஒரு இரவு உணவையோ, தேநீரையோ பகிர்ந்துகொள்ளக் கூடாது? நண்பர்கள் சேர்ந்து அவர்களுக்கு ஒரு காலணியைப் பரிசாகத் தரக் கூடாது? மைதானத்தில் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளுங்கள். மெனக்கெட்டு உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளைப் போய்ப் பாருங்கள். உங்கள் செய்கைகள் மூலம் அவர் அசாத்தியமான ஒன்றை சாத்தியமாக்க முயற்சிசெய்கிறார் என்ற பெருமையை உணர வையுங்கள்.

நீண்ட, நெடிய பாரம்பரியமும், வீரமும் கொண்ட தேசத்துக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கித் தருவதைவிடச் சிறந்த சாதனை இருந்துவிட முடியாது. நீங்கள் தேசத்துக்காகப் புழுதிபடியக் களத்தில் நின்றீர்கள் என்றால், இந்த தேசம் ஒருபோதும் உங்களைக் கைவிடாது. அது நம் தேசத்தின் அறம்.

- நிலன்,

தொடர்புக்கு: writernilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x