

தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962இல் குடியரசுத் தலைவரானார். அவருக்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து தமிழகத்திலிருந்து ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவரானார்.
நாடு சுதந்திரமடைந்த பிறகு தமிழக அரசிலும் மத்திய அரசிலும் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஆர். வெங்கட்ராமன். மதராஸ் மாநிலத்தில் 1957 முதல் 1967 வரை தொழில், தொழிலாளர் நலம், கூட்டுறவு, போக்குவரத்து, வணிக வரி, மின்சாரம் போன்ற துறைகளைக் கவனித்தவர் ஆர். வெங்கட்ராமன். பிறகு மத்தியத் திட்டக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார். 1980 முதல் 1984 வரை நிதி, பாதுகாப்பு, உள்துறை போன்ற துறைகளுக்கான மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர்.
பின்னர் 1984 முதல் 87 வரை குடியரசுத் துணைத் தலைவராகவும் ஆர். வெங்கட்ராமன் இருந்தார். 1987இல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றபோது, ஆர். வெங்கட்ராமனை காங்கிரஸ் கட்சி சார்பில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி களமிறக்கினார். இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக வி.ஆர். கிருஷ்ண ஐயர் நிறுத்தப்பட்டார்.
இத்தேர்தலில் ஆர். வெங்கட்ராமன் 7,40,148 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.ஆர். கிருஷ்ண ஐயர் 2,81,550 வாக்கு மதிப்புகளைப் பெற்று தோல்வியடைந்தார்.
நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவராக 1987 ஜூலை 25 அன்று ஆர். வெங்கட்ராமன் பதவியேற்றார்.
- மிது