Published : 31 Oct 2016 08:58 AM
Last Updated : 31 Oct 2016 08:58 AM

அகதிகளின் மரணங்களைத் தவிர்ப்பது எப்படி?

ஆபத்தான பயணங்களைத் தடுக்க, அகதிகளுக்கான போக்குவரத்து உதவிகள் வழங்குவதை முதலில் நிறுத்த வேண்டும்

பரந்துவிரிந்த கடல். அருகில் அடிவானம். கடலில் இருக்கும்போது உங்களால் எந்தத் தொலைவையும் அறிய முடியாது. ஒவ்வொரு அடி உயரும்போதும் அடிவானம் விலகுகிறது. கடல் எல்லைக்கு மேல் ஐந்து அடிக்கு மேல், ஒரு மிதவையில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் - கரையிலிருந்து மூன்று மைல்களுக்கு அப்பால். மூழ்கிக்கொண்டிருக்கும் உங்கள் படகிலிருந்து, லிபியாவை உங்களால் பார்க்க முடியும்; மீட்புக் குழுவினரின் வருகையையும்.

அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில், உதவிக் குழுக்களும் இத்தாலியக் கடல் காவல் படையினரும் லிபியா கடற்கரையிலிருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை மீட்டிருக்கிறார்கள். துயரம் தரும் புகைப்படங்களில் இந்தக் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. அகதிகள் நிறைந்த படகுகள், ஒருகாலத்தில் அடிமைகளை ஏற்றிவந்த கப்பல்களுடன் ஒப்பிடப்படுகின்றன.

மனிதாபிமான நடவடிக்கைகள்

மீட்கப்பட்ட அகதிகள் இறந்தவர்களின் உடல்கள் மீது நின்றுகொண்டிருக்கிறார்கள். கலங்க வைக்கும் இந்தக் காட்சியில் ஆறுதல் தரும் ஒரே விஷயம், மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கைகள்தான். எனினும், மீட்புப் பணிகூடத் தவறான விஷயமாக இருக்கலாம். ஏனெனில், இந்த மக்களை நாம் திருப்பி அனுப்பியாக வேண்டும். காரணம், இந்த நவீன ‘மத்திய பாதை’யில் (‘மிடில் பாஸேஜ்’ - மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கு அமெரிக்காவுக்கு அடிமைகள் கொண்டுவரப்பட்ட பயணம்) ‘அடிமைகள்’ தங்கள் சொந்தச் செலவில் பயணம் செய்கிறார்கள். மனிதாபிமானிகள் இந்தப் பயணத்துக்குக் ‘கப்பல்’வழங்கி உதவுகிறார்கள்.

இந்தக் காட்சிகள் அதிர்ச்சியூட்டினாலும், லிபிய அதிபர் கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்நாட்டில் களேபரங்கள் அதிகரிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து நடந்துவரும் விஷயங்களையே இவை காட்டுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 1,50,000 பேர் இந்தப் பகுதியைக் கடந்திருக்கிறார்கள். துருக்கி - கிரேக்கம் இடையிலான ஏஜியான் பாதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூடப்பட்டதிலிருந்து, லிபியா வழியிலான போக்குவரத்துகள் அதிகரித்திருக்கின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து கடந்துசெல்வது இன்னும் ஆபத்தானது. பயணங்கள் எத்தனை அதிகமோ அந்த அளவுக்கு மரணங்களும் அதிகம். இந்த ஆண்டு மட்டும் 3,000 மரணங்கள்.

மீட்புக் குழுவினரின் கண்காணிப்பு

மரணங்களின் எண்ணிக்கையை மனிதாபிமான நடவடிக்கைகள் சமன்செய்ய முயன்றிருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில், 40 வெவ்வேறு மீட்பு நடவடிக்கைகளில் 6,500-க்கும் மேற்பட்ட அகதிகள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில் நடந்த மீட்பு நடவடிக்கைகளைக் கவனிப்பவர்கள், இவை எந்த நாட்டின் கடல் எல்லைக்கும் உட்படாத கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டவை என்றே நினைத்திருப்பார்கள். உண்மையில், லிபிய கடற்கரையிலிருந்து பத்து மைல் தூரத்தில் நடந்தவை இவை. ராடார், விமானங்கள் மூலம் லிபியாவுக்குச் சற்றுத் தொலைவில் வந்துகொண்டிருக்கும் அகதிகளைக் கண்காணிக்கும் மீட்புக் குழுவினர், அவர்கள் வந்த படகுகளிலிருந்து, ஐரோப்பாவுக்குச் செல்லும் போர்க் கப்பல்களில் ஏற்றுகிறார்கள்.

பெரும்பாலும் மீட்புப் பணிகளின் உதவியில்லாமல் அகதிகள் சென்று சேர்வதில்லை. இந்த ஆண்டில் மட்டும் இத்தாலியைச் சென்றடைந்த 1,10,000 அகதிகள், மீட்புக் கப்பல்கள் மூலமாகவே கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களைக் கொண்டுவரும் கடத்தல்காரர்களுக்கு இது தெரியும். அதனால்தான், கடல் பயணத் துக்குத் தகுதி இல்லாத படகுகளில் போது மான உணவும் எரிபொருளும் இல்லாம லேயே அகதிகளைக் கூட்டிவருகிறார்கள். தேவையில்லாத விஷயங்களில் எதற்கு முதலீடு செய்ய வேண்டும்? மீட்புப் பணிகள்தான் கைகொடுக்கின்றனவே!

உரிமை இல்லை

ஆபத்தான இந்தப் பயணங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால், போக்குவரத்து உதவிகள் வழங்குவதை நிறுத்துவதுதான் ஒரே வழி. மாற்று வழியும் உண்டு - அவர்களைக் காப்பாற்றி, திருப்பி அனுப்புவது. அகதிகளின் படகுகள் பயணிப்பதை நிறுத்திவிட்டால், கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நின்றுவிடும். எப்படியாவது ஐரோப்பாவுக்குள் சென்றுவிடலாம் என்று கடத்தல்காரர்கள் அகதிகளைச் சம்மதிக்க வைக்க முடியாத நிலையை உருவாக்கினால், இப்படியான பயணங்கள் நின்றுவிடும்.

இது புகலிட விதிகளை மீறுவதாகத் தோன்றலாம். ஆனால், கடலில் மீட்கப்படும் மக்கள் அடைக்கலம் கோருவதற்கு உரிமை இல்லை. தாங்கள் விரும்பும் இடத்துக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று கோரவும் அவர்களுக்கு உரிமை இல்லை. உடைந்த கப்பல்களிலிருந்து மீட்கப்படும் மக்கள் தங்கள் மண்ணில் இறக்க வேண்டும் என்ற அவசியமும் நாடுகளுக்கு இல்லை - அவர்கள் அடைக்கலம் கோரியிருந்தாலும்!

இவையெல்லாம் யதார்த் தமானவையாகவும் சட்டபூர்வமானதாகவும் இருக்கலாம். ஆனால், அறத்தின் அடிப்படையில் பார்த்தால் இது நியாயமா? நம்பிக்கை இழந்து தவிக்கும் இந்த மக்களுக்கு நாம் உதவ வேண்டியதில்லையா? நிச்சயம் உதவ வேண்டும். ஆனால், மீட்பு நடவடிக்கையை எதிர்பார்க்கலாம் எனும் நிலையை அவர்களிடம் உருவாக்க வேண்டியதில்லை.

அகதிகள் அந்தப் படகுகளில் ஏறுவதற்கு முன்னரே, அவர்கள் புகலிடம் பெறுவதற்குத் தகுதியானவர்கள்தான். எனவே, அவர்களது புகலிடக் கோரிக்கைகளை அவர்களது சொந்த நாடுகளிலேயே பரிசீலித்து, தகுதியானவர்களை விமானம் மூலம் ஐரோப்பாவுக்கு அனுப்பலாம். அது இன்னும் மனிதாபிமானம் மிக்க நடவடிக்கையாக இருக்கும். உயிர்களைக் காக்கலாம். படகுப் பயணத்தைவிட இது மலிவாகக்கூட இருக்கலாம்.

பொறுப்பு யாரிடம்?

லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்களின் மோசமான நிலையை மாற்றுவதில் ஐரோப்பா இன்னும் நிறைய செய்யலாம். அத்துடன், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு, அந்நிய நாட்டுக்குத் தப்பிச் செல்ல வைக்கும் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும்.

பரிதவித்துக்கொண்டிருக்கும் மக்களைக் கைகாட்டி அழைத்து, பெரும் அபாயத்தில் தள்ளிவிடக் கூடாது. கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. அத்துடன், அடிவானத்தைக் கண்காணிக்கிற, நமது செயல்களின் விளைவுகளைக் கவனிக்கின்ற பொறுப்பும் உண்டு.

நமக்குக் கிடைக்கும் காட்சிகள் அச்ச மூட்டுகின்றன. நாம் ஏதாவது செய்தாக வேண்டும். எனவே, கடலில் அபாயத்தில் இருக்கும் மக்களுக்குப் பண்டைய கால பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும் - அவர்களைப் பத்திரமாகக் கரை சேர்க்க வேண்டும். அதன் பின்னர், கடல் எல்லையை மூடுங்கள். அடி வானத்தைப் பாருங்கள் படகுகள் மீண்டும் நிரம்பிக்கொண்டிருக்கின்றன!

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x