Published : 21 Oct 2016 08:50 AM
Last Updated : 21 Oct 2016 08:50 AM

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக உருவாகட்டும் நல்ல திட்டம்!

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் அறிவாற்றலாலும் தொழிலாலும் இந்தியாவுக்கு நல்ல மதிப்பு உருவாகியுள்ளது. அவர்கள் அங்கே இந்தியாவுக்காக வாதாடுகின்றனர். இந்தியப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கின்றனர். இந்தியாவில் முதலீடுகளும் செய்கின்றனர். அவர்களின் பணிகளை அங்கீகரிப்பதில் மத்திய அரசை ஆண்ட கட்சிகள் போட்டிபோட்டன.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்க வேண்டியது, அவர்கள் வசிக்கிற நாடுகள்தான். அதனால் அவை தவறாக நினைத்துக்கொள்ளுமோ என்று ஆரம்பத்தில் எண்ணியது இந்தியா. அதனால் வெளிநாட்டு இந்தியர்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை. இந்தியாவின் முக்கியமான தேசிய தினங்கள் வெளிநாடுகளிலும் இந்திய சமூகத்தினரால் கொண்டாடப்படும். அப்போது இந்திய அரசின் அதிகாரிகள் அவர்களோடு உறவாடுவார்கள்; அவ்வளவே.

ராஜீவின் முயற்சி

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதுதான் இந்த நிலையை மாற்றினார். வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் சீனாவின் வளர்ச்சியில் பங்கேற்பதுபோல, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்குமாறு அழைத்தார். இந்தியாவில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் வழங்கினார். இந்தியாவின் தொலைத்தொடர்பை நவீனப்படுத்திய சாம் பித்ரோடா ஒரு நல்ல உதாரணம்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான இந்தியாவின் புதிய கொள்கைக்கு 1987-ல் ஒரு நெருக்கடி வந்தது. பிஜி நாட்டில் இந்திய வம்சாவளியினர் பெரும்பான்மையாக இருந்த அரசாங்கத்தை ராணுவச் சர்வாதிகாரி சிடிவேணி ரெபூகா கவிழ்த்தார். பிஜிவாழ் இந்தியர்களை இரண்டாம் தர குடிமக்களாகவும் ஆக்கினார்.

இதை ராஜீவ் காந்தி கடுமையாக எதிர்த்தார். பிஜி மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். காமன்வெல்த் நாடுகளுக்கான அமைப்பிலிருந்தும் பிஜியை வெளியேற்றச் செய்தார். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தப் பிரச்சினையைக் கிளப்பினார். பிஜியுடனான தங்களுக்குள்ள உறவுகளை கெடுத்துக்கொள்ள விரும்பாத பிஜி இந்தியர்கள் குழம்பினர். ஆனாலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மீது பாகுபாடுகள், இனவாதம், வாக்குரிமை பறிப்பு போன்றவை நிகழ்ந்தால் இனியும் இந்தியா வேடிக்கை பார்க்காது என்ற நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் இது உருவாக்கியது.

இந்தியாவுக்கும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்குமான உறவு ராஜீவ் காந்தியால் மறுபடியும் உருவான பிறகு அரசு பல நல்ல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவர்களுக்கான தனியான அமைச்சகமும் இந்திய வம்சாவளியினருக்கான அடையாள அட்டை, ப்ரவாசி பாரதிய திவஸ், ப்ரவாசி பாரதிய சம்மான் விருது, அவர்களுக்கான வாக்குரிமை உள்ளிட்டவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டன.

கண்டுகொள்ளாத மோடி

பிரதமர் மோடி தனது வெளியுறவுக் கொள்கையின் மையமாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பிரச்சினையை ஆக்கிக்கொண்டார். வெளிநாட்டுப் பயணங்களின்போது இந்தியர்கள் பங்கேற்ற மாபெரும் கூட்டங்களில் அவர் பங்கேற்றார். இந்தியாவின் முன்னுரிமைகள், தேவைகள் பற்றி அதில் பேசினார். ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்களின் எந்த கோரிக்கையையும் அவர் பேசவில்லை. இருநாடுகளுக்கிடையிலான பயணம் தொடர்பானதாகவும், இந்தியாவில் உள்ள தங்கள் சொத்துக்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் அவர்களுக்கு உள்ள குறைகளைத் தீர்ப்பதற்கான புதுத் திட்டங்கள் எதையும் அவர் அறிவிக்கவில்லை.

வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச் சகத்தோடு வெளிநாடுகளில் வாழும் இந்தியர் களின் விவகாரங்களுக்கான அமைச்சகத்தை இணைப்பதற்கான நடவடிக்கை யதார்த் தமானதாக இருக்கலாம். ஆனால், அது எதிர்மறையாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடுகள் நடத்துவதிலும் விருதுகள் வழங்குவதிலும் உள்ள ஏற்ற இறக்கங்களும் சில சங்கடமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த அரசாங்கத்தின் மீது புதிய நம்பிக்கை களும் எதிர்பார்ப்புகளும் உருவாகியிருக் கின்றன. அதோடு சேர்ந்து அச்சங்க ளும் சங்கடங்களும் உள்ளன. மேற்கு ஆசிய நாடுகளில் பெட்ரோலிய எண்ணெய் விலை வீழ்ச்சியடைவதால் அரசியல் நிலையற்ற தன்மை உருவா கிறது. அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வெளியேறுதல், சம்பளங்கள் குறைவது, வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறைவது ஆகியவை இந்தியர்களை அச்சமூட்டுகின்றன.

இந்தியர்களுக்கு நெருக்கடி வந்தால்தான் அந்த நாட்டில் இந்தியர்கள் இருப்பது நினைவுக்கு வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தியர்கள் பற்றிய துல்லியமான விவரங்கள் தற்போது இந்தியாவிடம் இல்லை. வெளிநாடுகளில் இந்தியர்கள் எந்த அபாயத்தையும் எதிர்கொண்டு வாழ்கின்றனர். உக்ரைன், யேமன், சிரியா என உலகின் எந்த மூலையிலும் கடினமான சூழல்களை எதிர்கொண்டு அவர்கள் வாழ்கின்றனர். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் உண்மையில் முதன்மை குறை தீர்க்கும் அதிகாரியாகவே மாறிவிட்டார்.

அரசின் தயக்கம்

பல இந்தியர்கள் இந்தியா திரும்பமாட்டேன் என்கின்றனர். மாற்று வேலைகளுக்குச் செல்ல மறுக்கின்றனர். அவர்களுக்கு வந்து சேரவேண்டிய பண தாவாக்களைத் தீர்த்துக்கொள்ளவும் விரும்பவில்லை. ஆபத்தான சூழல்களிலேயே தங்கியிருக்க விரும்புகின்றனர். அது மத்திய அமைச்சரைக் குழப்பமடையச் செய்கிறது. சொந்த லாபங்களுக்காக வெளிநாடு சென்றவர்களை மீட்டு வருவதற்கு ஏன் அரசின் பணம் செலவழிய வேண்டும் என்றும் இந்தியாவில் குரல்கள் உருவாகின்றன.

கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் வெளிநாடுகள் போகிற இந்தியர்களைக் கட்டுப்படுத்த வேண்டுமா என்று இந்தியா தயங்குகிறது. அது தனி மனிதச் சுதந்திரத்துக்கு எதிராகப் போய்விடும். ஆனால், குறைந்தபட்சம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் பற்றிய துல்லியமான விவரமாவது இருக்கவேண்டும். எதிர்காலக் கணிப்புக்காக இது தேவைப்படும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு மறுவாழ்வு தரும்போது அவர்கள் அங்கே செய்கிற பணிகளைப் போன்ற அத்தகைய பணிகளையே இந்தியாவிலும் வழங்க வேண்டும். அத்தகைய வாய்ப்புகளோடு திட்டங்களை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். ஒரே நாளில் அவர்களைத் தொழில் முனைவோராக மாறும்படி கோருவது எதிர்மறையான விளைவையே தரும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் முன்பைவிட வளமானவர்களாக மாறியுள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்பதும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள வாய்ப்புகளைப் பற்றிய புரிதலோடுதான் அவர்கள் உள்ளனர். அதே நேரத்தில் பல நாடுகளிலிருந்து இந்தியர்கள் வெளியேறும் சூழல்கள் உருவாவதும் உலகளாவிய பயங்கரவாதத்தில் இந்தியர்களும் பங்கேற்பதும் அவர்களை யோசிக்க வைக்கின்றன.

அமைதியான முறையில் திட்டமிடுவதற்குப் பதிலாக, பிரச்சினைகளிலேயே நேரத்தைச் செலவழிப்பது போதுமானதல்ல. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் வரும் வருமானத்தைப் புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதிலும் தாயகம் திரும்புவோருக்கான மாற்று வாழ்வாதார வழிமுறைகளையும் மத்திய அரசும் மாநிலங்களும் இணைந்து ஒரு முழுமையான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

- டி.பி. ஸ்ரீனிவாசன்,

இந்தியாவின் முன்னாள் தூதர்,

தி இந்து ஆங்கிலம்

தமிழில் - த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x