Last Updated : 07 Oct, 2016 09:17 AM

 

Published : 07 Oct 2016 09:17 AM
Last Updated : 07 Oct 2016 09:17 AM

வாக்குப் பதிவில் அடுத்த புரட்சி!

வாக்குகளின் ரகசியம் காக்க வேண்டும் எனும் அடிப்படைக் கோட்பாட்டை நோக்கிய நடவடிக்கை இது!



வாக்குச் சாவடிகளின் தனித் தனியான வாக்குப் பதிவு விவரங்களை மொத்தமாகக் கூட்டல் போடுகிற ‘டோட்டலைசர்’ கருவியை அறிமுகப்படுத்துவதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுபற்றி வெளியான பெரும்பாலான அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் தெளிவாக இல்லை. அவற்றை வாசித்தால் யாராலும் ஒரு தெளிவான கருத்துக்கு வரவே முடியாது.

தேர்தல் காலகட்டங்களில், வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குப் பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தப் புதிய கருவி இணைக்கப்படும். அது ஒட்டுமொத்தமான வாக்குப் பதிவு எண்ணிக்கையைத்தான் தரும். தனித்தனியான எண்ணிக்கைகளைத் தராது.

வாக்குச்சாவடி நிர்வாகம்

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலை பகுஜன் சமாஜ், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வரவேற்றுள்ளன. இடதுசாரிக் கட்சிகள் கோட்பாட்டு அளவில் இதை ஆதரித்துள்ளன. ஆனால், முழுமையாக இதனை அமலாக்குவதற்கு முன்பாக, குறிப்பிட்ட காலகட்டத்துக்குக் குறிப்பிட்ட சில பகுதிகளில் இதனைச் செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன. ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாவுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. தேர்தல் நேரங்களில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தங்களுக்குக் கிடைத்துள்ள வாக்குகளைத் தெரிந்துகொள்வது அரசியல் கட்சிகளுக்கு முக்கியம் என்கிறது அது. அதை வைத்துத்தான் தங்களின் வாக்குச் சாவடிவாரியான உத்திகளை உருவாக்க முடியும் என்றும் காரணம் சொல்கிறது. புதிய தொழில்நுட்பத்தின் மேல் பாஜகவுக்கு அதிருப்தி உள்ளது. பாஜகவின் நிலைப்பாட்டுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்த பெரும் வெற்றிக்கு வாக்குச் சாவடிகள் மட்டத்தில் வகுத்த தேர்தல் உத்திகளும் முக்கியமான காரணம். பெரும் திரளான பாஜகவினர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தோடு இணைந்து வாக்காளர்களைத் தங்களுக்குச் சாதகமாகத் திரட்ட வாக்குச் சாவடிகள் மட்டத்தில் கடுமையாக வேலை செய்தனர். அதை ‘வாக்குச் சாவடி நிர்வாகம்’ என்கிறார்கள்.

பாஜக எதிர்ப்பது இருக்கட்டும், மற்ற அரசியல் கட்சிகளின் இத்தகைய அணுகு முறையால் பாதிக்கப்பட்டவை திரிணமூல் காங் கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை. அவையும் புதிய வாக்கு எண்ணிக்கை முறையை எதிர்க்கின்றன என்பது ஆச்சரியம்.

வாக்குச் சாவடி மட்டத்தில் வாக்குகளை எண்ணினால் வேட்பாளர்களும் கட்சிகளும் தங்களுக்கு யார் ஆதரவாக வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்பதை அறிந்துகொள்ள முடியும். அது அடுத்த தேர்தலில் தேர்தல் உத்திகளைத் திட்டமிட அவர்களுக்கு உதவும்தான். ஆனால், அவர்கள் வாக்குச் சாவடி மட்டத்திலான வாக்கு எண்ணிக்கை விவரங்களைத் திட்டமிட மட்டும் பயன்படுத்தினால் பரவாயில்லை. அப்படியானால், தற்போதைய நிலைமையே தொடரலாம்தான். ஆனால், தேர்தலுக்கு முன்பாகவும் பின்பாகவும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் சமீப ஆண்டுகளில் வாக்காளர்களை மிரட்டுகிற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதனால்தான் இத்தகைய கூட்டல் கருவி தேவைப்படுகிறது.

தோற்றுப்போன வேட்பாளர்கள், தங்க ளுக்கு எதிராக வாக்களித்த குறிப்பிட்ட கிராமங்கள், சாதிகள், சமூகக் குழுக்களைத் துன்புறுத்துவதற்கு வாக்குச் சாவடி மட்டத்திலான வாக்கு எண்ணிக்கைகள் பயன்படுகின்றன. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு, இந்தத் திசையில் வரவேற்புக்குரியது.

தேர்தலுக்கு முன்பாகவும் தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் வாக்குச் சாவடி களின் மட்டங்களில் உருவாக்கும் தேர்தல் உத்திகளை இந்தக் கருவிகள் உண்மை யிலேயே பாதிக்குமா?

நடைமுறை சாட்சியங்கள்

பல்வேறு வாக்குச் சாவடிகளிலிருந்து வரும் வாக்குகளைக் கலப்பது அரசியல் கட்சிகள் வாக்குச் சாவடிகள் மட்டத்தில் வாக்காளர்களைத் திரட்டுகிற தேர்தல் உத்திகளுக்குத் தீமை தரக் கூடாது. கட்சிகளின் உள்ளூர் ஊழியர்கள் தருகிற தகவல்களால் குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் எப்படிப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

எந்தக் கட்சிக்கு, எந்தச் சமூகம் ஆதரவளிக்கிறது என்பது பற்றிய தேர்தல் ஆய்வுகளும் இது பற்றிய தெளிவைத் தருகின்றன. எந்தக் கட்சி தங்களது சாதி அல்லது சமூகத்தின் மீது அக்கறை செலுத்துகிறது என்பதில் வாக்காளர்கள் தெளிவான கருத்தோடு இருக்கிறார்கள் என்பதற்கு நடைமுறைச் சாட்சியங்கள் இருக்கின்றன. இந்த விவரங்களே அரசியல் கட்சிகளுக்குப் போதுமானவை. வாக்குச் சாவடி மட்டத்திலான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் இல்லாமலேகூட வாக்குச் சாவடி மட்டத்திலான அரசியல் நிர்வாக உத்திகளை அவர்களால் உருவாக்க முடியும். ஒரு கட்சி, தனது நிதி மற்றும் மனித வள ஆதாரங்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது, அதன் வாக்குச் சாவடி மட்டத்திலான தேர்தல் உத்தியின் திறன். வாக்கு எண்ணிக்கை பற்றிய விவரங்களும் இந்த விவகாரத்தில் சமமான அளவுக்கு முக்கியமானவை.

வாக்குச் சாவடி வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டபோது, ஒவ்வொரு வாக்காளரும் எப்படி வாக்களித்தனர் என்பதை வேட்பாளர்களால் அறிய முடியாது. ஆனாலும், எந்தச் சாதி அல்லது சமூகம் யாருக்கு வாக்களித்தது, யாருக்கு வாக்களிக்கவில்லை என்கிற ஒரு பொதுவான புரிதலை அவர்களால் பெற முடியும்.

வாக்காளர்கள் பாதிக்கப்படுவதை இந்தக் கூட்டல் யந்திரம் முழுவதுமாகத் தீர்த்து விடாது. அதற்கு இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டும். ஆனால், வாக்குகளின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படைக் கோட்பாட்டை நோக்கிய நடவடிக்கை இது.

தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் ஊழியர் கள் பாத்திரம் முக்கியமானது. வாக்காளர் களைத் திரட்டுவது, வாக்காளர்களைத் தங்களுக்கு வாக்களிக்க இணங்கச்செய்வது, அவர்களை வாக்குச் சாவடிக்குப் போக வைப்பது உள்ளிட்ட பல உத்திகளை மேற்கொள்கின்றனர். பெரும்பாலான கட்சிகள் வாக்குச் சாவடி மட்டத்திலான நிர்வாகத்துக்குச் சாதியையும் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் அதிகமான வாக்காளர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருக் கிறார்களோ அந்தச் சாதியினரையே அந்த வாக்குகளைச் சேகரிக்கிற வேலையைச் செய்யவைக்கின்றனர். எல்லா அரசியல் கட்சிகளும் இதைச் செய்கின்றன. ஆனால், சிலர் மட்டுமே அதை ஒப்புக்கொள்கின்றனர்.

இந்திய வாக்காளர்கள் பல்வேறு சமூகப் பின்னணி கொண்டவர்கள். பல்வேறு மட்டங்களில் தேர்தல்கள் நடந்துவருகின்றன. தேவை ஏற்படும்போது தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவதில் தீமை ஒன்றுமில்லை. இந்த கூட்டல் இயந்திரத்தை அறிமுகப்படுத்துவது முற்போக்கு நடவடிக்கைகளில் ஒன்று. சில கட்சிகள் இதனைப் பயன்படுத்துவதில் தற்போது கருத்து மாறுபாடுகளைத் தெரிவிக்கலாம். ஆனால், காலப்போக்கில் அவர்களும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் கட்டாயம் புரிந்துகொள்வார்கள். தற்போதைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் இத்தகைய பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்தியா போன்ற பெரிய நாட்டில் தற்போது அவை பயனுள்ளவையாக உள்ளன என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது.

சஞ்சய் குமார்,

புதுடெல்லியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x