Published : 12 Oct 2016 09:12 AM
Last Updated : 12 Oct 2016 09:12 AM

ஒரே தேசம், ஒரே தேர்தல் சரிதானா?

நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் மாநிலங்களில் உள்ள சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கு இறக்கை முளைத்திருக்கிறது. ஊடகங்களில் எப்போதாவது இது பேசப்பட்டது போக, இது ஒரு பெரும் விவாதம் ஆகியிருப்பதுடன், மத்திய அரசும் இதுபற்றி மக்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறது. அக்டோபர் மாத மத்தியில் வரை இணையத்தில் தங்கள் கருத்துகளை முன்வைக்க முடியும்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் ஆணையச் செலவு, மனித உழைப்பு நேரம் போன்றவை மிச்சப்படும். மக்களும் அடிக்கடி தேர்தலுக்காக வாக்குச் சாவடிகளுக்குப் போக வேண்டிய அவசியம் இருக்காது. ஏதாவதொரு தேர்தலுக்காக அரசின் திட்டங்களைத் தொடங்காமலோ, கிடப்பில் போடாமலோ இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. எப்போது பார்த்தாலும் தேர்தல் வேலைகளிலேயே அரசியல் தலைவர்கள் மூழ்குவதால் நிர்வாகம் சுணங்குவதும் ஓயும் என்கிறார்கள் இந்த வாதத்தை முன்னிறுத்துபவர்கள். இது எந்த அளவுக்குச் சரி?

செலவு குறையும், சந்தேகமில்லை

இந்தியாவில் தேர்தல் நடத்த பெரும் செலவாகிறது என்பதை மறுக்க முடியாது. அரசு ஒருபுறம் தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்புப் படையினர், வாக்குச் சீட்டு, போக்குவரத்து போன்றவற்றுக்குச் செலவிட வேண்டியிருக்கிறது. அரசியல் கட்சிக ளும் தலைவர்களின் பிரச்சாரம், பயணம், பிரச்சாரப் பிரசுரங்கள் என்று பல வழிகளில் செலவழிக்க நேர்கிறது. வேட்பாளர்கள் அதிகபட்சம் எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்று வரம்பு இருந்தாலும், பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள், செல்வாக்குள்ள பணக்காரர்கள் இதையெல்லாம் மீறியே செலவழிக்கின்றனர்.

மிகக் குறைந்த முறைகள் மட்டுமே தேர்தல் நடந்தால் செலவு குறையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஜனநாயகம் என்பதன் ரத்த ஓட்டமே தேர்தலில்தான் இருக்கிறது. மக்களவைக்கும் பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வாய்த்தால் அது இயற்கையான நடைமுறை. ஆனால், அதைக் கட்டாயமாகத் திணித்தால் அது விரும்பத்தகாதது மட்டுமல்ல, செலவைக் குறைப்பதற்காக, ஜனநாயகம் தரும் உரிமைகளை மறுக்கிற செயலாகவும் ஆகிவிடும்.

புதிய திட்டங்களுக்குத் தடை

ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் நிர்வாகம் நன்றாக இருக்கும் என்பது அவர்களுடைய இன்னொரு வாதம். அவ்வப்போது, ஏதாவதொரு மாநில பொதுத் தேர்தல் குறுக்கிடுவதால் தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்காக மத்திய அரசு புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தள்ளிவைக்க நேர்கிறது என்கிறார்கள்.

இது உண்மைதான் என்றாலும், வளர்ச்சித் திட்டங்களை அரசு தொடங்கு வதற்கு தேர்தல்கால நடத்தை நெறி முறைகள் ஒரு தடையாக இல்லாமலிருக்க, விதிகளைத் திருத்தினாலே போதுமானது. இப்போதே சில திட்டங்களுக்குத் தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை கலந்து ஒப்புதல் பெறலாம் என்ற விதி இருக்கிறது. அத்துடன் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மட்டும் தடையை அமல்படுத்தினால்கூடப் போதும்.

விதியல்ல.. விலக்குகளும் உண்டு

மக்களவைக்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடக்கும்போது, வெவ்வேறு அரசுகளுக்கு வெவ்வேறு கட்சிகளைப் பரிசீலித்து வாக்களிக்கும் வாய்ப்பு வாக்காளர்களுக்குக் கிடைக்கிறது. பொதுவாக, ஒரு கட்சியின் ஆதரவாளர்கள், இரண்டு தேர்தல்கள் ஒரே சமயத்தில் - ஒரே நாளில் நடந்தால் இரு தேர்தல்களிலும் ஒரே கட்சிக்கு வாக்களிப்பதை வழக்கமாகக் கொள்வது உண்டு. ஆனால் இது பொதுவான விதியல்ல, விதி விலக்குகளும் உண்டு.

1989 பொதுத் தேர்தலிலிருந்து கணக்கிட்டால் 31 முறை மக்களவைக்கும் பேரவைக்கும் சில மாநிலங்களில் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்திருக்கிறது. ஆந்திரம் (1989, 1999, 2004, 2009, 2014), கர்நாடகம் (1989, 1999, 2004), சிக்கிம் (2009, 2014), தமிழ்நாடு (1989, 1991, 1996), மகாராஷ்டிரம் (1999), அசாம் (1991, 1996), உத்தரப் பிரதேசம் (1989, 1991), மேற்கு வங்கம் (1991, 1996), அருணாசலப் பிரதேசம் (2009, 2014), தெலங்கானா (2014).

சட்டப் பேரவைக்கும் மக்களவைக்கும் இம்மாநிலங்களில் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தபோது, 24 தேர்தல்களில் பேரவைக்கும் மக்களவைக்கும் ஒரே விகிதத்தில் வாக்களித்திருக்கின்றனர்; 7 சந்தர்ப்பங்களில் மட்டுமே மக்களவைக்கு ஒரு கட்சிக்கும், மாநிலத்துக்கு வேறு ஒரு கட்சிக்குமாக வாக்களித்திருக்கின்றனர். ஆனால், பேரவைத் தேர்தலும் மக்களவை பொதுத் தேர்தலும் வெவ்வேறு தருணங்களில் நடந்த மாநிலங்களில் இதே காலகட்டத்தில் பெரும்பாலான தேர்தல் முடிவுகள் வெவ்வேறாகவே இருந்திருக்கின்றன.

பறிபோகும் பன்மைத்துவம்!

ஒரே நேரத்தில், பேரவைகளுக்கும் மக்களவைக்கும் தேர்தல் நடத்துவது எளிதல்ல. முதலில் இப்படித் தேர்தலை நடத்த அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். இப்போதிருக்கும் பல பேரவைகளின் பதவிக்காலம் வெவ்வேறு காலத்தில் முடிவடைவதால் முன்கூட்டியே பேரவைகளைக் கலைக்க அம்மாநிலங்கள் ஒப்புதல் தர வேண்டும். தவிர, ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தாலும் முழுப் பதவிக்காலமும் ஆட்சியில் இல்லாமல் ஒரு மாநில அரசு கவிழ்ந்து, அங்கு மாற்று அரசுக்கு வழியில்லாவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியை நாம் புறந்தள்ள முடியாது.

இவற்றையெல்லாம் தாண்டி வந்தாலும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கோஷமே தவறு. ஏனென்றால், இந்தியா என்பது ஒரே நாடுதான் என்றாலும், 29 மாநிலங்களின் தொகுப்பே அது; மாநிலங்கள் ஒவ்வொன்றும் தேர்தல் மற்றும் அரசு நிர்வாகம் தொடர்பாகத் தங்களுக்கென்று தனி அரசியல் சட்ட அந்தஸ்தைப் பெற்றவை. ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ என்பது மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமே சரி. எல்லா மாநில சட்டப் பேரவைகளையும் - சில வேளைகளில் உள்ளாட்சி மன்றத் தேர்தலையும் இத்துடன் இணைப்பது சாத்தியமற்றது மட்டுமல்ல, நாட்டின் கூட்டாட்சி முறையைக் கைவிட்டு ஒற்றையாட்சி அமைப்புக்கு இட்டுச் செல்வதற்கே வழிவகுக்கும்!

கட்டுரையாளர்கள் பேராசிரியர்கள். சுருக்கமாகத் தமிழில்: சாரி

© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x