Published : 28 Aug 2022 09:34 AM
Last Updated : 28 Aug 2022 09:34 AM

சுதந்திரச் சுடர்கள் | அறிவியல்: விண் முட்டும் வளர்ச்சி

ஹுசைன்

நாடு சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகள் கழித்தே இந்தியாவின் விண்வெளி கனவு மெல்லமெல்ல நனவுக்கு வரத் தொடங்கியது. 1962இல் அப்போதைய பிரதமர் நேருவின் வழிகாட்டுதலின்படி ‘INCOSPAR’ எனும் விண்வெளி ஆராய்ச்சி குழுவை டாக்டர் விக்ரம் சாராபாய் உருவாக்கினார். அதில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமும் ஓர் உறுப்பினர். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், ‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ)’ என அது பெயர் மாற்றப்பட்டது. அமெரிக்காவும் ரஷ்யாவும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிய காலகட்டத்தில்தான், பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் இஸ்ரோ விண்வெளி அறிவியலில் தளிர்நடை போடத் தொடங்கியது.

அந்த அமைப்பு 1975 ஏப்ரல் 19 அன்று முதன்முதலாக வடிவமைத்த ‘ஆரியப்பட்டா’ செயற்கைக்கோள், சோவியத் ஒன்றியத்தின் இண்டர்காஸ்மோஸ் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் விண்வெளித் துறையில் இஸ்ரோ நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் அளப்பரியவை. 114 விண்கல செலுத்து முயற்சிகள், 84 ஏவுகல செலுத்து முயற்சிகள், 13 மாணவர் செயற்கைக்கோள்கள், 2 மறுநுழைவுப் பணிகள், 34 நாடுகளின் 342 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல் உள்ளிட்ட பல விண்வெளித் திட்டங்களை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது.

புவி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை ஆய்வுகள், விவசாயம் ஆகியவற்றுக்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்டங்கள் பெரிதும் வலுசேர்த்து வருகின்றன. நீர் பாதுகாப்புக்கும் பேரிடர் மேலாண்மைக்கும் இஸ்ரோவின் தரவுகள் பேருதவியாக இருக்கின்றன. குறைந்த செலவில் இஸ்ரோவால் நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயானும், செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யானும் இன்று விண்வெளி அறிவியலில் இந்தியாவை அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக உயர்த்தியுள்ளன. இன்றைய தேதியில், விண்வெளி அறிவியலிலும் விண்வெளித் தொழில்நுட்பத்திலும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x