Last Updated : 31 Oct, 2016 09:05 AM

 

Published : 31 Oct 2016 09:05 AM
Last Updated : 31 Oct 2016 09:05 AM

அறிவோம் நம் மொழியை: இதுவும் அதுவும் மற்றும் முதலான ஆகியவையும்

ஒரு என்னும் சொல்லைப் போலவே மற்றும் என்னும் சொல்லும் தமிழில் பெரும்பாலும் தேவையில்லாமல் ஒட்டிக்கொள்கிறது. ஆங்கிலத்தின் and என்னும் சொல்லின் மொழிபெயர்ப் பாகவே இது மிகுதியும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

அமைச்சரும் அதிகாரிகளும் விரைந்தார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விரைந்தார்கள் என எழுதுவது தமிழின் இயல்புக்கு அன்னியமாக இருப்பதை உணரலாம். Ministers and officers என எழுதுவது ஆங்கில வழக்கு. தமிழில் உம்மைத் தொகை போட்டு எழுதுவதன் மூலம் இதை இயல்பாகச் சொல்லிவிடலாம்.

இரண்டுக்கு மேல் இருந்தால் உம்மைத் தொகை போட்டு எழுதுவது ஆயாசத்தைத் தரக்கூடும். ராமனும் முத்துவும் மங்கையும் சபீதாவும் ராஜாவும் என்று ‘உம்’ போட்டுப் பெரிய பட்டியலை அடுக்குவது சரளமான வாசிப்புக்கு உதவாது. இப்படிப் பட்டியல் போடும்போது கடைசிக் கூறுக்கு முன்னால் and சேர்ப்பது ஆங்கில மரபு. இதைப் பலரும் தமிழில் அப்படியே பயன்படுத்துகிறார்கள். ‘புத்தகம், துணிமணிகள், காய்கறிகள், அரிசி மூட்டை மற்றும் மேசை’ என்று எழுதுவது ஆங்கில மரபை அடியொற்றிய வழக்கம். ‘புத்தகம், துணிமணிகள், காய்கறிகள், அரிசி மூட்டை, மேசை ஆகியவை’ என்று எழுதுவது தமிழ் மரபை அடியொற்றிய வழக்கம்.

ஒரு பட்டியல் முடிந்துவிட்டால் ஆகியவை என்றும் பட்டியல் முடியவில்லை என்றால் போன்றவை அல்லது முதலானவை என்றும் போடலாம். இரண்டு சமயங்களிலும் மற்றும் என்னும் சொல் இல்லாமலேயே சொல்லவரும் பொருளைத் தெளிவாகச் சொல்லிவிடலாம்.

மொழிகளுக்கிடையில் பல விதமான பரிமாற்றங்களும் நடக்கத்தான் வேண்டும். ஆனால், பிற மொழியிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் வரும் சொல்லோ, வழக்கோ, நடைமுறையோ மொழிக்கு ஏதேனும் ஒரு வகையில் வளம் சேர்க்க வேண்டும். அதன் திறனைக் கூட்ட வேண்டும். மற்றும் என்பது எந்த வகையில் தமிழின் வளத்தையோ திறனையோ கூட்டுகிறது?

சிலர் பட்டியலிடும்போது ‘மரம், செடி, கொடி, பூச்சி மற்றும் பறவை ஆகியவை’ என்று மற்றும், ஆகியவை என இரண்டையும் பயன்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் மற்றும் தேவையில்லை. அப்படி அது வரத்தான் வேண்டும் என்று நினைத்தால் ஆகியவை என்பதை நீக்கிவிடலாம். இரண்டில் ஒன்று இருந்தாலே நாம் சொல்லவரும் பொருள் தெளிவாகச் சொல்லப்படுகிறது. அந்த இரண்டில் ஆகியவை என்பதே தமிழ்ப் பண்புக்கு நெருக்கமானது.

தவிர்க்க முடியாத இடங்கள் தவிர மற்ற இடங்களில் ஒரு, மற்றும் போன்ற சொற்களைத் தவிர்ப்பதே இயல்பான தமிழுக்குப் பொருத்தமாக இருக்கும்.

ஆங்கிலத்தோடு ஒப்பிடும்போது தமிழில் சிக்கனமாக விஷயங்களைச் சொல்ல முடியவில்லை என்று பலரும் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். உண்மையில் தமிழில் பல விஷயங்களைச் சிக்கனமாகச் சொல்லிவிட முடியும். தமிழின் அமைப்பு சிக்கனத்துக்கு உதவத்தான் செய்கிறது. இதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(மேலும் அறிவோம்…)

அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x