Published : 12 Jun 2014 10:00 AM
Last Updated : 12 Jun 2014 10:00 AM

தமிழ்தான் நம் ஆதாரம்!

உலகெங்கும் தாய்மொழிக் கல்விகுறித்து அக்கறை காட்டி வருகிறார்கள். ஒரு குழந்தை தனது தாய்மொழியில் பெறும் கல்வியே ஆழமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்கும் என்பது திரும்பத் திரும்பக் கல்வியாளர்களாலும் உளவியலாளர்களாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் லாப நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு, கல்வியில் தாய்மொழியின் பங்கை முற்றிலும் ஒழித்துவிடுவதில் முனைப்புக் காட்டியிருக்கின்றன.

தமிழ் கற்கும் சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பிலிருந்து பகுதி-1-ல் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கற்பிப்பது கட்டாயம். இதன் அடிப்படையில் 2013-14-ம் கல்வியாண்டு வரை தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது 8-ம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2015-16-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் பகுதி-1-ல் தமிழை மொழிப் பாடமாகக் கட்டாயம் கற்பிப்பது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கடந்த 10.2.2014 அன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

2015-16-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவர்கள் பகுதி-1ல் தமிழ் மொழிப் பாடத்தில் மட்டுமே தேர்வு எழுத இயலும் என்று அந்தக் கடிதத்தில் இயக்குநர் கூறியிருந்தார். இதனை எதிர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவில் அவர், “தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மொழிப் பாடங்களைத் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகின்றன.

மொழிப் பாடங்களைப் பொறுத்தவரை தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பெரும்பாலான பள்ளிகளின் மாணவர்கள் தமிழ் அல்லாத மொழியைப் பாடமாக எடுத்துப் பயின்றுவருகின்றனர். இந்நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் உத்தரவால் அந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், தமிழை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கல்வி நிறுவனங்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளிவைத்தார். வரவிருக்கும் நாட்களில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இன்னும் கொஞ்ச நாள் போனால், முழுமையாகவே தமிழ் வேண்டாம் என்று துணிச்சலாகக் கேட்கும் சூழலும் வரலாம் என்று தோன்றுகிறது. கல்வியில் தமிழின் பங்கை உறுதிசெய்வதன்மூலம் மட்டுமே தமிழைக் காப்பாற்ற முடியும் என்பதை எல்லோரும், முக்கியமாக அரசு உணர வேண்டிய தருணம் இது.

ஒரு மொழி எவ்வளவுக்கு எவ்வளவு பயன்பாட்டு மொழியாக ஆக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது நீடித்து நிற்கும். எந்த மொழிக்கும் இணையாகத் தமிழாலும் பயன்பாட்டு மொழி யாகச் செயல்பட முடியும். ஆனால், நாம் அப்படிச் செய்யாமல் தமிழைப் பெருமிதத்துக்குரிய ஒன்றாக மட்டுமே வைத்துவிட்டு, பயன்பாட்டுக்கு ஆங்கிலத்தை நோக்கிச் செல்கிறோம். இந்த நிலை அபாயகரமானது. அரசு உடனடியாகக் களமிறங்க வேண்டும்.

தமிழ் கட்டாயப் பாடமாகத் தொடர்வதை உறுதிப்படுத்துவதுடன் தமிழ் மூலமாகத் தரமான கல்வி கிடைப்பதையும் உறுதிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டம் உறுதுணையாக இருந்தால் மட்டுமே தமிழை நாம் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

தமிழ் நமது அடையாளம் மட்டுமல்ல: அதுதான் நம் ஆதாரம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x