Last Updated : 04 Oct, 2016 08:47 AM

 

Published : 04 Oct 2016 08:47 AM
Last Updated : 04 Oct 2016 08:47 AM

வட கிழக்கை குறிவைக்கும் பாஜக

வெவ்வேறு உத்திகளின் மூலம் வட கிழக்கு மாநிலங்களைக் கைப்பற்ற முயல்கிறது பாஜக



நாடு விடுதலை பெற்றதிலிருந்து இன்று வரை வட கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள், மத்திய அரசின் ‘கருணைக் கடாட்சத்தில்’தான் தொடர்ந்து இயங்கிவருகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில், அப்பகுதியில் எப்படியேனும் நிலைபெற வேண்டும் என்று தீவிர முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. நரேந்திர மோடி 2014-ல் பிரதமராகப் பதவியேற்றபோது, வட கிழக்கு மாநிலங்களில் திரிபுராவைத் தவிர, இதர ஆறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி செய்துவந்தது. இப்போது நிலைமை வேறு!

அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக இருந்த பேமா காண்டு, சமீபத்தில் தன்னோடு 43 காங்கிரஸ் உறுப்பினர்களையும் சேர்த்துக்கொண்டு, பாஜக தலைமையிலான ‘அருணாசல் மக்கள் கட்சி’ என்ற கூட்டணிக்குக் கட்சி மாறியதையும், அக்கூட்டணியின் தலைவராக மீண்டும் முதல்வரான காட்சியையும் பார்த்தோம். வரலாறு திரும்பும் என்பதை நிரூபிப்பதாகவே அது இருந்தது.

முதல் முயற்சி

வட கிழக்குப் பகுதிகளில் கால் வைக்கும் முயற்சியை வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாஜக எடுத்தது. 2003 ஜூலையில் அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெகோங் அபாங்கைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்து, புதிதாக உருப்பெற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் அபாங்கை முதல்வராகக் கொண்ட அரசை நிறுவியது பாஜக. எனினும், 2004-ல் மத்தியில் ஐமுகூ அரசு ஆட்சியில் அமர்ந்ததும் அபாங் மீண்டும் காங்கிரஸ்காரராக மாறி, அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வரானார்.

இந்த நேரத்தில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்திய பாஜக, 2004 மக்களவைத் தேர்தலில் 53.85% வாக்குகளைப் பெற்று, அருணாசலப் பிரதேசத்தின் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றியது. எனினும், மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நிலையில், 2009 மக்களவைத் தேர்தலில் அதன் வாக்குவிகிதம் 37.17% சரிந்தது.

2014-ல் மோடி அலையில் 46.62% வாக்குகளுடன் ஒரு தொகுதியை மாநிலத்தில் கைப்பற்றிய பாஜக, கூடவே நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 30.97% வாக்குகளுடன் 11 தொகுதிகளைக் கைப்பற்றியது.

திருப்பங்களின் உச்சம்

மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கும் துணிச்சலில், அருணாசலப் பிரதேசத்தில் மீண்டும் தனது செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளை 2014 டிசம்பரில் இருந்து எடுக்கத் தொடங்கியது பாஜக. அந்த வகையில்தான் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்ட கலிக்கோ புல்லைப் பயன்படுத்தி மீண்டும் அரசியல் நாடகத்தை அரங்கேற்ற முனைந்தது. இதன் விளைவே நபம் துகி பதவியிலிருந்து இறங்க நேர்ந்தது. சட்டசபை செயலற்றுவிட்ட நிலையில் ஆளுநர் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது.

இதை எதிர்த்து நபம் துகி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அருணாசலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது செல்லாது என்றும், காங்கிரஸ் அரசே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது. யாரும் எதிர்பாராத வகையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் நிலையில், நபம் துகியைக் கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டு, முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவின் மகனான பேமா காண்டுவை முதல்வராக்கியது காங்கிரஸ். ஆனால், ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் எடுத்த இந்த முயற்சியும் நீடிக்கவில்லை என்பதையும், பாஜக தன் முயற்சியில் தளராத விக்ரமாதித்தனாக இருந்தது என்பதையும் இப்போது கூண்டோடு கட்சி மாறிய பேமா காண்டுவின் செயல் நிரூபிக்கிறது.

மத்திய அரசின் முக்கியத்துவம்

வட கிழக்குப் பகுதியின் அன்றாடச் செயல்பாடுகள் மத்திய அரசைச் சார்ந்திருக்கும் நிலையில், மத்திய அரசில் ஏற்படும் எந்தவொரு மாற்றத்தையும் தங்கள் பகுதியிலும் ஏற்படுத்தினால் மட்டுமே தங்கள் அன்றாடத் தேவை களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று அப்பகுதி மக்கள் நம்புவதில் வியப்பில்லை. மாபெரும் இயற்கை வளங்களைக் கொண்டிருந்தாலும், இயற்கையின் பெரும் சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழலில் வட கிழக்குப் பகுதி மக்களுக்கும் வேறு வழியில்லை. ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும்’ மனநிலையில்தான் இந்த மாநிலங்கள் உள்ளன என்பதையே இதுபோன்ற அரசியல் சதுரங்க விளையாட்டுகள் தெரிவிக்கின்றன. இப்பகுதி மாநிலங்களின் 90% நிதித் தேவையை மத்திய அரசே நிறைவேற்றுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அப்பகுதியின் வளங்களைப் பயன் படுத்தி, தொழில்களை உருவாக்கி, அவற்றின் மூலம் வேலைவாய்ப்பையும், மாநிலத்தின் சொந்த வருவாயையும் பெருக்கிக்கொள்வதன் மூலம் மட்டுமே இத்தகைய காட்சிகள் அரங்கேறாமல் தடுக்க முடியும். அதுவரை பதவி சுகம் கண்டவர்கள் சட்டையை மாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள். அவ்வகையில், இது பாஜகவுக்குத் தற்காலிகமானதொரு வெற்றியாக மட்டுமே இருக்கும்.

அசாமில் சமீபத்தில் பாஜக பெற்ற வெற்றியும்கூட இதைப் போன்ற ஒன்றுதான். அங்கு ஹிமந்த பிஸ்வா சர்மாவின் கடைசி நேர ‘உதவி’, அசாம் கண பரிஷத்தின் உட்கட்சிப் பூசல்கள், நீண்ட கால காங்கிரஸ் ஆட்சி ஏற்படுத்திய அயற்சி ஆகியவை பாஜகவுக்கு உதவி செய்தன. இந்த வெற்றியை வட கிழக்கின் மற்ற மாநிலங்களிலும் மடைமாற்ற அமித் ஷா, கிரண் ரிஜிஜு ஆகியோர் எடுத்துவரும் முயற்சிகளின் தொடக்கமாக அருணாசலப் பிரதேச நிகழ்வைக் கருதலாம். இன்றுள்ள நிலையில், 2017-ல் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் மணிப்பூர் கூட இத்தகைய ‘நிற மாற்றத்துக்கு’ ஆளானாலும் வியப்பில்லை.

திரிபுராவில் இடது முன்னணியை விரட்டுவேன் என்ற சபதத்துடன் திரிணமூல் களமிறங்கியுள்ள நிலையில், பாஜகவும் தன் பங்குக்கு அங்கு கால் பதிக்க முயற்சித்துவருகிறது. அங்குள்ள மாநில காங்கிரஸை விழுங்கி ஆதிவாசிக் குழுக்களைப் பயன்படுத்திக் காலூன்ற திரிணமூல் ஒரு பக்கத்திலும், பாஜக மறுபுறத்திலும் பிரம்மப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், அம்மாநிலத்தில் இடது முன்னணி உருவாக்கியுள்ள அரசியல் விழிப்புணர்வின் பின்னணியில் இந்தக் கட்சிகள் வெற்றிபெறும் வாய்ப்பு மிக அரிதாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

- வீ.பா.கணேசன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: vbganesan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x