Published : 22 Aug 2022 07:20 AM
Last Updated : 22 Aug 2022 07:20 AM

இந்தியா 75: வரலாற்றை மறுகட்டமைக்கும் தொல்லியல்

இ.இனியன்

உலகின் தொன்மையான வரலாற்றுக்கும், நாகரிகச் செழுமைக்கும், பண்பாட்டுப் பெருமைக்கும் தகுதியான ஓர் இடமாக இந்தியா உள்ளது. இந்திய வரலாற்றின் தொன்மையை வெளிப்படுத்துபவை தொல்லியல் சான்றுகள்தான். அத்தகைய தொல்லியல் சான்றுகள் கள ஆய்வுகள், அகழாய்வுகள் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன.

இந்தியாவில் தொல்லியல் அகழாய்வுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கின. உலக நாகரிகங்களுள் தொன்மையானதும் செழுமையானதுமான சிந்துவெளி நாகரிகப் பகுதிகளிலும் மற்றும் பல இடங்களிலும் புகழ்பெற்ற அகழாய்வு அறிஞர்களான அலெக்சாண்டர் கன்னிங்காம், சர் ஜான் மார்ஷல், மார்டிமர் வீலர் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள், இந்திய அறிஞர்களான அமலானந்த கோஷ், ஆர்.டி.பேனர்ஜி, ஹெச்.டி.சங்காலியா, கே.வி.சௌந்தரராசன் போன்றோரும் பல்வேறு இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு, இந்திய வரலாற்றின் தொன்மையை உலகறியச் செய்தனர்.

சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் சிந்துவெளி தொடர்புடைய தலங்களில் பெருமளவு அண்டை நாடான பாகிஸ்தான் பகுதிக்குச் சென்றுவிட்ட பிறகு, இந்திய நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

வெளிப்படும் தொன்மை: சிந்துவெளி நாகரிகக் கூறுகளைக் கொண்டிருக்கக்கூடிய மிக முக்கியத் தலமான குஜராத்தின் லோத்தலில், இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை 1955 முதல் 1960 வரை அகழாய்வை மேற்கொண்டது. அங்கு 2,200 ஆண்டுகள் பழமையான நகரக் கட்டமைப்பு கண்டறியப்பட்டதோடு, உலகின் தொன்மையான கப்பல் கட்டும் பகுதியும் வெளிக்கொணரப்பட்டது.

அப்பகுதி சபர்மதி ஆற்றங்கரையின் வணிகப் பெருவழியோடு இணைக்கப்பட்டிருந்ததும் அறியப்பட்டது. சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நகரங்களுள் ஒன்று, குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள தோலவீரா. 1960-களின்தொடக்கத்தில் தோலவீராவைச் சேர்ந்த சம்புதான் காத்வி என்பவரால் இப்பகுதி கண்டறியப்பட்டு, அரசின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது.

அப்பகுதியில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியவர் ஜே.பி.ஜோஷி எனும் தொல்லியல் ஆய்வாளர். சிந்துவெளி நாகரிகத்தின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்திய பகுதி தோலவீராதான். 1990 முதல் 2005 வரை தொடர்ச்சியாக இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு நகரக் கட்டமைப்பு, உயிரினங்களின் எலும்புகள், தங்கம், வெள்ளியிலான பொருட்கள் வெளிக்கொணரப்பட்டன.

தெற்கு குஜராத், பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப், மேற்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளோடு வணிகத் தொடர்புகளை இப்பகுதி கொண்டிருந்தது என்பதற்குப் பல்வேறு தரவுகள் இப்பகுதியில் கிடைத்தன.

அதேபோன்று சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்களைக்கொண்டிருக்கக்கூடிய ஹரியாணாவின்பனவாலி என்ற இடத்தில், 1974 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை அகழாய்வு மேற்கொண்டது. அகழாய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், இதன் காலம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

முதல் கட்டம், 2500-2300 பொது ஆண்டுக்கு முந்தையது (சூளையில் இட்டுச் சுடப்பட்ட செங்கற்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள்). இரண்டாம் கட்டம், 2300-1700 பொது ஆண்டுக்கு முந்தையது (105 மீட்டர் நீளம், 4.5 மீட்டர் உயரம், 6 மீட்டர் அகலம் நீண்ட சுவரால் பாதுகாக்கப்பட்ட 200x500 மீட்டர் அளவுடைய சதுரங்கப் பலகை வடிவிலான சரியான கோணங்களில் வடிவமைக்கப்பட்ட தெருக்கள், வீடுகள் கொண்ட நகரக் கட்டமைப்பு). மூன்றாம் கட்டம், 1700-1450 பொது ஆண்டுக்கு முந்தையது (சிந்துவெளி நாகரிகத்திற்குப் பிறகான காலம்) என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

திருப்புமுனை அகழாய்வு: இந்தியாவில் சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்களைக் கண்டறியும் பணியின் ஒரு மைல் கல்லாகக் கிடைத்ததுதான் ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள காளிபங்கன் என்கிற இடம். இந்தியப் பண்பாட்டின் தொன்மையைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த இத்தாலியரான லூஜி பியொ டெசிடோரேயால் இப்பகுதி முதலில் கண்டறியப்பட்டாலும், 1960-களில்தான் இந்த இடம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

இப்பகுதியில் இந்தியாவின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களான பி.பி.லால், பி.கே.தாப்பர், எம்.டி.கரே, கே.எம்.ஸ்ரீவாஸ்தவா போன்றோரால் 1960-1969 வரை தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 34 ஆண்டுகளுக்குப் பிறகு 2003 இல் வெளியிடப்பட்ட இந்த அகழாய்வின் அறிக்கை, இப்பகுதி சிந்துவெளி நாகரிகப் பகுதிகளின் தலைநகரமாக இருந்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகின் தொன்மையான ஏர் உழவு நடைபெற்ற விவசாய நிலம் கொண்ட பகுதி காளிபங்கன்தான் என்றும் நிறுவப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான அகழாய்வாகப் பார்க்கப்படுவது, ஹரியாணாவின் ராக்கிகரியில் மேற்கொள்ளப்பட்டதாகும். சிந்துவெளி நாகரிகத்தின் வளர்ச்சியடைந்த காலகட்டத்தைச் சார்ந்தது (2600-1900) என்று கணிக்கப்பட்டுள்ள இப்பகுதியில், முதலில் 1969, 1997-2000, 2011-2016 வரை, அண்மைக் காலத்தில் 2021 என அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நன்கு கட்டமைக்கப்பட்ட சாலைகள், கழிவுநீர் வெளியேற்றும் வசதிகள், மழைநீர் சேகரிப்புத் திட்டம், தாமிரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், மனித எலும்புகள் உள்ளிட்ட தொல்லியல் தரவுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தொல்லியல்: தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 2013 இல் தமிழகத்தில் கண்டறியப்பட்டு, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் அகழாய்வு செய்யப்பட்ட இடம் கீழடி. பின்னர், அப்பகுதியில் தமிழகத் தொல்லியல் துறை தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது.

இதன் மூலம் தமிழர் வரலாற்றுத் தொன்மையையும், செழிப்பான வாழ்க்கை முறைக் கூறுகளையும், கல்வியறிவைப் பறைசாற்றும் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், செங்கல் கட்டுமானங்கள், சாயத் தொட்டிகள், கூரை ஓடுகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், பசு மாடு, எருமை, ஆடு ஆகியவற்றின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

அவை இந்தியாவில் உள்ள பல்வேறு ஆய்வகங்கள், அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு கீழடியின் பண்பாட்டுத் தொன்மை பொ.ஆ.மு. (கி.மு.) 580 முதல் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் 1902-1903, 1903-1904 ஆகிய ஆண்டுகளில் அலெக்சாண்டர் ரீ என்பவரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு முறையே 1,872, 4,000 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் பானை ஓடுகள், இரும்புப் பொருட்கள், தாமிரத்தால் ஆன ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள், அரிய கல் மணிகள், பல தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

பிறகு, 2003-2004 ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை நடத்திய அகழாய்வுகளில் 100-க்கும் மேற்பட்ட தாழிகள், சிறிய அளவில் தாமிரத்தாலான பொருட்கள், வளையல்கள், மோதிரம், 70-க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்கள், பானைகள் செய்வதற்கான சூளை, உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்ட தொல்பொருள் எச்சங்கள் இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இவை சார்ந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இப்பகுதியின் காலம் பொ.ஆ.மு. (கி.மு.) 850-560 வரை என்று கணிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் சிவகளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களின் காலம் அறிவியல் ஆய்வுகளின் வாயிலாக பொ.ஆ. மு. (கி.மு.) 1155 என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகியிருக்கிறது. இவை மட்டுமின்றி தமிழகத்தில் பொருந்தல், மணலூர், மயிலாடும்பாறை, கொடுமணல், பொற்பனைக்கோட்டை, அழகங்குளம், உறையூர், அத்திரம்பாக்கம், பையம்பள்ளி, கேரளத்தில் பட்டினம், கர்நாடகத்தில் பிரம்மகிரி, சந்திரவல்லி, வட கிழக்கு இந்தியாவில் உள்ள பெருங்கடற்படைக் காலத்தைச் சார்ந்த பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் இந்திய வரலாற்றின் தொன்மையையும், பண்பாட்டுச் செழுமையையும் உலகிற்கு வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை!

- இ.இனியன், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொல்லியல் பேராசிரியர்

தொடர்புக்கு: initnou@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x