Published : 12 Oct 2016 09:01 AM
Last Updated : 12 Oct 2016 09:01 AM

இளைஞர்களை சீரழிக்கும் போதை மேஜிக் காளான் ஆம்லேட்!

'சுற்றுலா'வில் இருந்து விலகி தனித்தீவாக மாறும் கொடைக்கானல்



*

ரம்மியான பள்ளத்தாக்குகள், மனதை மயக்கும் பனி மூட்டம், குளுகுளு சீதோஷ்ண நிலை. இதுதான் கடவுளின் கொடையான கொடக்கானலின் வசீகர அடையாளங்களாக இருந்தன.

கோடை காலம் வந்தவுடனேயே கொடைக்கானலை நோக்கி பலரையும் ஈர்க்கும் காந்த சக்தியாக திகழ்ந்த இந்த சுற்றுலா தலம், தற்போது வேறொரு விதத்தில் இளைஞர்களை கவரத் தொடங்கியுள்ளது. அது அவர்களின் வாழ்க்கையின் வீழ்ச்சிக்கு வித்திடுவதுதான் பெரும் சோகம்.

இயற்கை அழகைக் கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள், தற்போது போதைப் பொருட்களுக்காக இங்கு வரத் தொடங்கியுள்ளனர். போதைப் பொருள் விற்பனைக்கான சர்வதேச சுற்றுலா தலமாக கொடைக்கானல் அவப்பெயரை பெறத் தொடங்கியுள்ளது.

மனதைக் கொள்ளை கொள்ளும் மலைகளின் இளவரசி | படம்: பி.டி.ரவிச்சந்திரன்



இந்த மோசமான கலாச்சார மாற்றத் தால் குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. சுற்றுலாவை நம்பியிருந்த உள்ளூர் மக்கள், வியாபாரிகள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தின் முக்கிய கோடைவாஸ் தலமான இங்கு, முந்தைய ஆண்டுகளில் சராசரியாக 60 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும், 60 ஆயிரம் வெளிநாட்டுப் பயணிகளும், வந்து சென்றனர்.

2014-ம் ஆண்டில் கொடைக்கான லுக்கு 54,35,469 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 51,376 பேர். 2015-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 42 லட்சம் பேராகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 30 ஆயிரமாகவும் குறைந்தது. 2014-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2015-ம் ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 22 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு ஆண்டிலும் தொடக்கம் முதலே சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே இருக்கிறது.

இளைஞர்கள் வருகை அதிகரிப்பு

இந்நிலையில், சமீபகாலமாக வார விடுமுறை நாட்களில் கர்நாடகா, கேரளா மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஆம்னி பஸ், கார், இருசக்கர வாகனங் களில் இளைஞர்கள், இளம்பெண்களின் வருகை அதிகரித்து வருகிறது. இவர்கள் கொடைக்கானலில் வந்து இறங்கியதும் கொடைக்கானலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் வட்டகானல் பகுதியை தேடிச் செல்கின்றனர். வட்ட கானலில் ரசிக்கும்படியான சுற்றுலா தலம் எதுவும் இல்லை. வழிநெடுக குண்டும் குழியுமாக வளைந்து நெளிந்து செல்லும் மண் சாலை, எதிரே வரும் வாகனங் களுக்கு வழிவிடுவதற்குக்கூட இடமில் லாத குறுகலான பாதையில் அங்கு செல்ல வேண்டும். அப்படியிருந்தும் இளைஞர்களும், வெளிநாட்டினரும் வட்டகானலுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத அங்கு உள்ள ரிசார்ட், லாட்ஜ், காட்டேஜ் அறைகளில் தங்குகின்றனர்.

இதன் பின்னணியை விசாரித்தபோது அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரியவந்தது. இங்கு எளிதாக கிடைக்கும் போதைப் பொருட்களை நாடியே இளைஞர் அதிக அளவில் வருகின்றனர். விடுமுறையை கொண்டாட கொடைக்கானல் வரும் இளைஞர்கள், இங்கு போதைப்பொருட் களுக்கு அடிமையாகி தடம் மாறிச் செல்கின்றனர். இதன் காரணமாக கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தை இழந்து போதை நகரம் என்ற பெயரை பெற்றுவிடுமோ என்று உள்ளூர்வாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.

இதுகுறித்து உள்ளூர்வாசிகள் சிலர் கூறியதாவது: இவர்கள் தங்குவதற்காக இப்பகுதிகளில் காட்டேஜ்கள், மர வீடு கள், சாதாரண வீடுகள் கட்டி சட்டத்துக்கு புறம்பாக சிலர் வாடகைக்கு விட்டுள்ளனர். அங்கேயே உணவுகள் சமைத்து வழங்க ஆட்கள் இருக்கிறார்கள்.

இந்த போதை விவகாரம் பற்றி அறியாமல், சுற்றுலாவுக்கென வரும் இளைஞர்களையும் வசீகர வார்த்தை களைப் பேசி, தங்களது வாடிக்கை யாளர்களாக போதைப்பொருள் விற்பனை கும்பல் மாற்றிவிடுகிறது.

வீட்டுச் சமையல், குறைவான வாடகை என்று சொல்லி இளைஞர்களை அழைத்துச் செல்லும் இந்த கும்பல், போதை மேஜிக் காளான் ஆம்லேட், சூப் ஆகியவற்றை அளிக்கின்றனர். ஒரு முறை வந்தவர்கள், பின் தானாகவே வாரந்தோறும் இங்கு வர ஆரம்பிக்கின்றனர். தற்போது வட்டகானலில் இது குடிசைத் தொழில்போல பெருகிவிட்டது.

மேலும், சில குறிப்பிட்ட இணைய தளங்களில் விடுமுறை கொண்டாட் டங்கள்’ என்ற பெயரில் விளம்பரம் வெளி யிட்டு சர்வதேச அளவில் இளைஞர்களை ஈர்க்கும் அளவுக்கு போதை கலாச்சாரம் கொடைக்கானலில் கொடிகட்டி பறக்கிறது.

கஞ்சாவும்...

பெங்களூருவில் இருந்து வாகனங் களில் மறைத்து வைத்து கொடைக் கானலுக்கு கஞ்சா கொண்டுவரப்படு கிறது. இது தொடர்பாகவும், போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத மாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்தும் போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். ஆனால், அவர்கள் எதுவும் தெரியாததுபோல் காட்டிக்கொள்கின்றனர். போதைப் பொருள் தொழிலில் ஈடுபடுவோரை நாங்கள் பிடித்துக் கொடுத்தாலும், அவர் களை உள்ளூர் போலீஸார் விட்டுவிடு கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்பு இல்லை

சமூக ஆர்வலர் எபெக்ட் வீரா கூறியதாவது: சுற்றுலா வழிகாட்டிகளாக செயல்படுவோருக்கு பணம்தான் முக்கியம். சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து முடிந்த அளவு பணத்தை சுரண்டுகின்றனர். வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆரம்பித்து, கொடைக்கானல் வரை வாடகைக்கு கார் பிடிப்பது முதல் அறை வாடகை, சாப்பாடு என ஒவ்வொரு விஷயத்திலும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றப்படுகின்றனர்.

வட்டகானலுக்குச் செல்லும் சாலை.



வட்டகானலில் குறுகலான சாலையில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்.

இந்நிலையில், வழிகாட்டிகள் என்ற போர்வையில் போதை கும்பல் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளிடம், இங்கு ஹோட்டல் வாடகை அதிகமாக இருக்கும், வட்டகானல், மன்னவனூரில் குறைந்த வாடகைக்கு ரிசார்ட்கள், வீடுகள் கிடைக்கும் என்று கூறி அங்கே அழைத்துச் செல்கின்றனர். அங்கு வரும் ஆண்களுக்கு இருக்கும் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சிலருக்கு போதைப் பொருட்கள், சிலருக்கு வேறுவிதமான பலவீனங்கள் என அவர்களை ஒரு இடத்தில் முடக்கிவிடுகின்றனர். அவர்களுடன் வந்த பெண்களையும், கட்டாயப்படுத்தி தவறான செயலுக்கு உள்ளாக்கி நாசப்படுத்துகின்றனர். அவர்களை வீடியோ எடுத்து வெளியே சொன்னால் இணையத்தில் வெளியிடுவோம் என்று கூறி மிரட்டும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸில் புகார் அளிக்கச் செல்வதில்லை.

இந்த போதை கும்பலுக்கும், பாலியல் தொழில் கும்பலுக்கும் சர்வதேச அளவில் நெட்வொர்க் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.

கொடைக்கானலில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் சிலர், மேற்கொண்டு படிக்காமல் தடம்புரண்டு போதை கும்பலுக்கு ஆள்பிடித்து கொடுக்கும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த இளைஞர்களை அழிவிலிருந்து மீட்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கைவிரிக்கும் போலீஸ், வனத்துறை

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கூறியதாவது: ஆரம்பத்தில் போதை காளான் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களுக்கு 10 ஆண்டு தண்டனை கிடைக்கும் வகையில் முன்மாதிரி வழக்காக எடுத்து நடத்தினோம். ஆனால், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பட்டியலில், இந்த காளான் வரவில்லை என்பதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அது சாதாரண வழக்குகள் என்பதால், சிறையிலிருந்து வெளியே வரும் நபர்கள் மீண்டும் இதே தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் முருகன் கூறும்போது, “போதை காளானை வைத்திருப்பவர்களை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை. அதிலுள்ள போதை தரும் ரசாயனப் பொருளை தனியே எடுத்து விற்பவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும். இருந்தபோதும் இந்த காளானை பறித்து வருபவர்கள் குறித்து தெரியவந்தால், தவறான நடவடிக்கையில ஈடுபடுவதாக அவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

உடல், மன நலனுக்கு ஆபத்து

மனநல மருத்துவர் ஆ.காட்சன் கூறும்போது, “மருத்துவத் துறையில் தீவிரமான போதைப் பொருளாக இந்த காளான் கருதப்படுகிறது. மேஜிக் காளானில் ஹாலுசிநோஜன் (Hallucinojen) வகையை சார்ந்த சீலோசைபின் என்ற போதையூட்டும் வேதியியல் பொருள் உள்ளது. இந்த போதைப் பொருள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இதை பயன்படுத்தும்போது அளவு கடந்த உற்சாகம், தன் உணர்வை மறந்து கிளர்ச்சி நிலைக்கு செல்வார்கள். புலன் உணர்வுகளில் தாறுமாறான மாற்றங்கள் ஏற்படும். ஒருமுறை பயன்படுத்திவிட்டால், மீண்டும் மீண்டும் பயன்படுத்த தூண்டப்படும் அளவுக்கு அடிமையாகிவிடுவார்கள்.

இது, கசப்பான சுவையாக இருப்பதால், காயவைத்து முட்டையில் கலந்து ஆம்லேட்டாகவும், சாக்லெட்டில் கலந்தும் சாப்பிடுகின்றனர். 8 முதல் 10 கிராம் காளானை பயன்படுத்தினால், 8 மணி நேரத்துக்கு உடலில் போதை மயக்கம் இருக்கும். ஆபத்தை ஏற்படுத்தும் இந்த காளானை தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு, மனச்சிதைவு நோய், வெறித்தனமான செயல்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இளைஞர்கள் கையில் பணப் புழக்கம் அதிகமாக இருப்பது, மது, சிகரெட் பழக்கம் உள்ளோருக்கு புதிய போதைப் பொருட்களை பரிசோதித்து பார்ப்பதில் ஏற்படும் ஆர்வம் ஆகியவையே இந்த போதை காளான் பயன்பாடு அதிகரிப்புக்கு காரணம். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்க மேற்கத்திய நாடுகளில் போதிய மறுவாழ்வு மையங்களை அங்கு உள்ள அரசுகளே அமைத்துள்ளன. ஆனால், நம் நாட்டில் அதுபோன்ற வசதிகள் போதுமானதாக இல்லை. அப்படியே சிகிச்சை பெற்றாலும், மீண்டும் பாதை மாறாமல் இருக்க தொடர் கண்காணிப்பு இல்லை.

இந்த பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து மீள்வதற்கு தனிப் பட்ட மருந்து வகைகளோ, சிகிச்சைகளோ கிடையாது. எனவே, போதைப் பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதே சிறந்த வழியாகும்” என்றார்.

போதை காளானின் பின்னணி

1970-களில் ஹிப்பி கலாச்சாரத்தைப் பின்பற்றிய வெளிநாட்டினர் சிலர், கொடைக்கானலில் உள்ள வட்டகானல் பகுதியில் தங்கினர். இவர்கள்தான், இந்த மேஜிக் காளானை கண்டுபிடித்து போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். அதன்பின் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்து, இதை பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் அடையாளமாக இன்றும்கூட வட்டகானல் பகுதியில் உள்ள சில பெட்டிக்கடைகளில் ஹீப்ரு எழுத்துகளில் ‘மெனு’ அறிவிப்பு பலகைகள் காணப்படுகின்றன. இவர்களிடம் ஆரம்பித்த இந்த போதை காளான் பழக்கம், தற்போது உள்ளூர் போதை கும்பல் மூலம், சுற்றுலாவுக்கு வரும் இளைஞர்களிடம் பரவி வருகிறது.

போதை தரும் இந்த மேஜிக் காளான்கள் கொடைக்கானலில் அடர்ந்த வனப்பகுதிக்குள் இயற்கையாக வளர்கின்றன. இதை பறித்து வருமாறு வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க செல்லும் பெண்களிடம் முன்பணம் கொடுத்து போதை கும்பல் அனுப்புகிறது. ஒரு காளானுக்கு ரூ.20 கூலி கொடுக்கின்றனர். இதற்கு வனத்துறையினர் சிலர் உடந்தையாக இருப்பதாக புகார் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x