Last Updated : 24 Oct, 2016 10:02 AM

 

Published : 24 Oct 2016 10:02 AM
Last Updated : 24 Oct 2016 10:02 AM

நம்மைச் சுற்றி: பயிர் செய்யலாம் பவளத்தை!

கடலில் வாழ்கிற 25% உயிரினங்களின் வாழ்விடமும், அன்னச்சத்திரமும் பவளப் பாறைகள்தான்.

பவளப்பாறைகளின் அழிவு உலக சுற்றுச் சூழலோடு நேரடித் தொடர்பு கொண்டது. இதனைக் காப்பாற்ற உலகம் முழுவதும் பல அமைப்புகள் பாடுபடுகின்றன. ஆனாலும், பெரிதாகப் பலன் இல்லை. ஏற்கெனவே 25% பவளப்பாறைகள் அழிந்துவிட்டன. மேலும் 25% அழியும் தறுவாயில் இருக்கின்றன. புதிய பவளப்பாறைகள் உருவாவதும் 50% ஆகக் குறைந்துவிட்டது.

இந்தச் சூழலில் ஒரு சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் பவளப்பாறை ஆராய்ச்சி மையம், பவளப் பாறைகளைச் செயற்கையாக வளர்த்துவிட்டது. இந்த மையத்தின் இயக்குநர் டேவிட் வேகன், அங்குள்ள ஆய்வுக்கூடத்தில் திசு வளர்ப்பு முறையில் லட்சக்கணக்கில் பவளப்பாறைகளை வளர்த்துள்ளார். தமிழில் ‘பவளம்’ என்றும் ஆங்கிலத்தில் ‘பொலிப்’ என்றும் அழைக்கப்படும் ஒளி ஊடுருவும் தன்மையுள்ள உயிரினங்களே பவளப்பாறைகளை உருவாக்குகின்றன. வளர்சிதைமாற்றத்தின்போது இவை சுரக்கிற கால்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருள் படிந்து சுண்ணாம்புக்கல் போன்ற கடினமான பொருளாக மாறுகின்றன. அந்தப் படிவுகளின் மீது புதிய பவளங்கள் அமர்ந்துகொள்ள, அடுத்தடுத்து படிவுகள் தோன்றி பவளப்பாறைகளாக உருவெடுக்கின்றன.

இந்த நுண்ணுயிர்களைக் குறிப்பிட்ட வெப்ப நிலையில், திசு வளர்ப்பு முறையில் வளர்ப்பதன் மூலம் லட்சக்கணக்கான குட்டிக்குட்டி பவளப்பாறைகளை உருவாக்கியுள்ளார் வேகன்.

நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் கடலுக்குள் உள்ள பாறைகள் மற்றும் இறந்த பவளப்பாறைகளின் மீது நடவு செய்து வெற்றியும் கண்டுள்ளது இந்த மையம். இதுகுறித்து வேகன் கூறுகையில், “பவளப்பாறை வளர்ப்புக்காக கடைப்பிடிக்கப்படும் மற்ற முறைகளைக் காட்டிலும், இந்தச் சோதனைச்சாலையில் 25 முதல் 40% அளவுக்கு வேகமாக அவை வளருகின்றன.

கடலுக்குள் நடவு செய்யப்படும் பவளப் பாறைகளில் 90% பிழைத்து, வளர்கின்றன. கடல் வெப்ப அதிகரிப்பு, அமிலத்தன்மையையும் ஓரளவுக்குச் சமாளித்து வளர்கின்றன. சோதனைகள் முடிந்து, அடுத்த ஆண்டு (2017) டோமனிக் குடியரசு கடல் பகுதியில் பெருமளவு நடவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். அவற்றைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதன் மூலம், பவளப்பாறைகளின் முக்கியத்துவத்தை மனித சமுதாயத்துக்கு உணர்த்த முடியும்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x