

இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கிய ஆகஸ்ட் 15ஆம் தேதி மதராஸ் நகரமே கோலாகலமாக இருந்தது. நாடே உற்சாகத்தில் திளைத்த அந்தத் தருணத்தில் அன்றைய மதராஸில் என்னென்ன நடந்தன? நாடு சுதந்திரமடைந்தபோது மதராஸ் மாகாண ஆளுநராக இருந்தார் சர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை. 1947 ஆகஸ்ட் 15 அன்று தீவுத்திடல் என்று இப்போது அழைக்கப்படும் தீவு மைதானத்தில் நாட்டின் மூவண்ணக் கொடியை அவரே விரித்துக் காட்டினார்.
அன்று காலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வராக (பிரதம அமைச்சர்) இருந்த ஓமந்தூர் பி. ராமசாமி சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் கட்டிடத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடியை ஏற்றிய தருணத்தில் மகிழ்ச்சியில் அவருக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
இன்னொரு புறம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஃப்ரெட்ரிக் ஜெண்டில், ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நையை சுதந்திர இந்தியாவில் மதராஸ் மாகாணத்தின் ஆளுநராகப் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
சுதந்திரம் அடைந்த நாளில் பளபளப்பான ஆடைகளை அணிந்துவந்த குதிரைப் படை வீரர்கள், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகே கடற்கரையோரமாக அணிவகுத்து நின்றனர். மதராஸ் மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இந்தியாவில் ஆங்கிலேயர் காலடி எடுத்துவைத்த பிறகு, முதன்முதலாகக் கட்டியது செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத்தான்.
அந்தக் கோட்டையின் கொத்தளத்தில் நாட்டின் புதிய மூவண்ணக் கொடி கம்பீரமாகப் பறக்கும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மதராஸ் மக்கள் ஆனந்தக் கூத்தாடினர். நாடு சுதந்திரமடைந்த நாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்ட அந்தக் கொடி கோட்டை அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது.
- மிது