

தேவி பிரசாத் ராய் செளத்ரி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, தேவி பிரசாத் ராய் செளத்ரி வடிவமைத்தது. சுதந்திர இந்தியாவின் சிற்பக் கலை முன்னோடியான இவர் சென்னைக் கவின் கலைக் கல்லூரியில் மாணவர். அதன் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். லலித் கலா அகாடமியின் நிறுவனர்.
எஸ். தனபால்
தேவி பிரசாத் ராய் செளத்ரியின் மாணவரான இவர், தென்னிந்தியச் சிற்பக் கலையின் முன்னோடி. சென்னை நவீன ஓவிய இயக்கத்தின் தொடக்கம் என இவரைச் சொல்லலாம்.
கே.எம்.ஆதிமூலம்
சென்னை ஓவிய இயக்கத்தின் தொடர்ச்சியான இவரது கோட்டோவியங்கள் பொதுவெளியிலும் மிகப் பிரபலம். காந்தியின் நூற்றாண்டை ஒட்டி இவர் வரைந்த காந்தி கோட்டோவியங்கள் இவரது குறிப்பிடத்தக்க ஆக்கம்.
நந்தலால் போஸ்
அஜந்தா குகை ஓவியத்தின் மீது மிகுந்த ஆர்வம் உள்ள இவர் உலக அரங்கில் இந்திய ஓவியக் கலைஞராக அறியப்பட்டவர். இந்தியப் பண்பாட்டு எழுத்தாளரான ஆனந்த குமாரசாமி இவரது ஓவியங்கள் பற்றி எழுதியிருக்கிறார்.
அவனீந்திரநாத் தாகூர்
இந்திய அரங்கில் சுதேசி ஓவியங்கள் என்னும் இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர். முகலாய, ராஜபுத்திர பாணிகளை இணைத்து ஒரு புதிய முறையில் ஓவியங்கள் வரைந்தார் இவர்.
எம்.எஃப்.ஹுசைன்
கியூபிச பாணி ஓவியரான இவர் மும்பையில் முற்போக்குக் கலைஞர் இயக்கம் உருவாகக் காரணமாக இருந்தவர். இந்தியப் புராணக் காட்சிகள், நவீன வாழ்க்கை போன்றவற்றை இவர் கருப்பொருளாகக் கொண்டு ஓவியங்கள் வரைந்துள்ளார்.
அஞ்சலி இலா மேனன்
நவீன சுவர் ஓவியராக அறியப்பட்ட இவரது ஓவியங்கள் சர்வதேச ஓவியக் கண்காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன. பிராந்திய இந்தியாவை அடையாளப்படுத்தும் இவரது ஓவியங்கள் கவனம் பெற்றவை.