Last Updated : 25 Oct, 2016 09:46 AM

 

Published : 25 Oct 2016 09:46 AM
Last Updated : 25 Oct 2016 09:46 AM

வங்கதேசம் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில்லை!- ஷேக் ஹசீனா பேட்டி

எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், பயங்கரவாதிகள் என்று பல தரப்பினரிடமும் கடுமையான முகம் காட்டுகிறார் என்று விமர்சிக்கப்படும் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா பல விஷயங்களைப் பற்றி முதன்முறையாக வெளிப்படையாகவும் விரிவாகவும் பேசினார். அவர் பேட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்.

1980-களில் ‘சார்க்’ அமைப்பை நிறுவியது வங்கதேசம்தான். ஆனால், பாகிஸ்தானில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டைப் புறக்கணித்த முதல் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. ‘சார்க்’ அமைப்பு இதன் மூலம் முடிவுக்கு வருகிறது என்று சொல்லலாமா?

இல்லை. சார்க் மாநாட்டைப் புறக்கணிப்பது தொடர்பாக நாங்கள் வெளியிட்ட நான்கு அதிகாரபூர்வ அறிக்கைகளிலும் குறிப்பிட்டி ருப்பதுபோல், சார்க் பிராந்தியத்தில் நிலவும் தற்காலச் சூழல் சார்க் மாநாட்டை நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என்றே கருதுகிறோம். வங்கதேச விடுதலைப் போர் சமயத்தில் நடத்தப்பட்ட இன அழிப்பு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயத்தை நாங்கள் கவனத்துடன் அணுகுகிறோம். இந்தத் தீர்ப்பாயத்தின் நடைமுறைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்த பாகிஸ்தான், தங்கள் நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாகப் பேசியிருக்கிறது. வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடத் தொடங்கிய பாகிஸ்தான், அது தொடர்பாக ஏற்கத் தகாத விமர்சனங்களையும் முன்வைத்தது. பாகிஸ் தானின் நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டு டனான அனைத்து ராஜீய உறவுகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று ஏகப்பட்ட அழுத்தங்களைச் சந்திக்கிறேன். ஆனால், அந்நாட்டுடனான உறவு தொடரும் என்றும், அந்நாட்டுடனான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் நான் சொல்லியிருக்கிறேன்.

பாகிஸ்தானிலிருந்து வெளிப்படும் பயங்கர வாதம்தானே உங்களுக்கு முக்கியப் பிரச்சினை? உண்மையில், உரி தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்கு ஒன்றிணைந்திருப்பதுபோல், வங்கதேசம், பூட்டான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் சார்க் மாநாட்டை ஒரே சமயத்தில் புறக்கணித்திருக்கின்றன…

பாகிஸ்தானின் சூழல் காரணமாக நாங்கள் அந்த முடிவை எடுத்தோம். அங்கே பயங்கரவாதத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான். அந்தப் பயங்கரவாதம் எங்கும் பரவியிருக்கிறது. நம்மில் பலருக்கு பாகிஸ்தான் மீது கோபம் ஏற்பட்டிருப்பது அதனால்தான். இந்தியா பாகிஸ்தான் இடையேயும் பல பிரச்சினைகள் உள்ளன. அதைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. உரி தாக்குதல் காரணமாக சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. ஆனால், வங்கதேசத்தைப் பொறுத்தவரை அதற்கான காரணம் வேறு!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளைக் கொல்ல, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி தாக்குதல் நடத்த இந்தியா எடுத்த முடிவை ஆதரித்தீர்களா?

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் புனிதத்தன்மையை இரு நாடுகளும் பராமரிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் அமைதியை ஏற்படுத்தலாம் என்றும் கருதுகிறேன்.

ஆனால், அந்தக் கொள்கையை ஆதரிக்கிறீர்களா? கடந்த ஆண்டில்கூட மியான்மரில் பயங்கரவாதிகளைப் பின்தொடர்ந்து தாக்குதல் நடத்த எல்லை தாண்டியதாக இந்திய அரசு அறிவித்தது. அதுபோல் வங்கதேசம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை ஆதரிப்பீர்களா?

இந்தக் கேள்விகளை உங்கள் அரசிடமும், உங்கள் பிரதமரிடமுதான் நீங்கள் கேட்க வேண்டும். நான் எல்லைகளை மதிக்கிறேன். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பின்பற்றப்பட வேண்டும்.

இதை எதற்காகக் கேட்கிறேன் என்றால், 2009-ல் நீங்கள் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து, பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் உங்கள் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைதான், இந்தியா வங்கதேசம் இடையிலான உறவில் முக்கியப் புள்ளியாக உள்ளது. பயங்கரவாதிகளின் முகாம்களை மூடியது, 20-க்கும் மேற்பட்ட தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைத்தது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறீர்கள். பயங்கரவாத விஷயத்தில் ஒத்துழைப்பு என்பதன் இன்றைய அர்த்தம் என்ன?

வங்கதேசத்தில் பயங்கரவாதம் வேரூன்ற அனுமதிக்கக் கூடாது என்றே கருதுகிறேன். அது இந்தியாவாக இருந்தாலும் சரி, மியான்மராக இருந்தாலும் சரி… எங்களுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் யாராக இருந்தாலும், 2008-லிருந்து நாங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்று நீங்கள் பார்க்கலாம். எங்கள் எல்லைப் பகுதிகளில், தினமும் வன்முறைச் சம்பவங்கள், குண்டுவெடிப்புகள், பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்துவந்தன. நாங்கள் அவற்றைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம். எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த எங்கள் மண்ணைப் பயன்படுத்திக்கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வங்கதேசம் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக இப்போது இல்லை. ஒருகாலத்தில் இருந்ததைப் போல், ஆயுதக் கடத்தல்களுக்கான வழித்தடமாகவும் இல்லை.

டாக்காவின் ஹோலி ஆர்ட்டிஸன் பேக்கரியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், பயங்கரவாதத்துக்கு எதிரான வங்கதேசத்தின் போரை எந்த வகையில் மாற்றியமைத்திருக்கிறது?

பயங்கரவாதம் என்பது இன்றைக்கு உலகளாவிய பிரச்சினை. நான் அதற்கு எதிராகச் சில நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்கிறேன். பயங்கரவாதம் தொடர்பான விழிப்புணர்வைப் பரப்ப பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை அணுகுகிறேன். மேலும், குழந்தைகள் எங்கே செல்கின்றனர், யாரைச் சந்திக்கின்றனர் என்று கண்காணிக்கும்படி பெற்றோர்களிடமும் சொல்கிறேன். இஸ்லாம் அமைதியின் மதம் என்று போதிக்குமாறும், யாரும் வன்முறையைப் பற்றி பேசாமல் பார்த்துக்கொள்ளுமாறும் மசூதிகள், மதரஸாக்களில் உள்ள மதகுருக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான சமூக இயக்கமும் விழிப்புணர்வும் இருந்தால், நம் குழந்தைகள் பயங்கரவாதிகள் ஆகாமல் நம்மால் தடுக்க முடியும்.

ஹோலி ஆர்ட்டிஸன் தாக்குதலில் ஈடுபட்ட குழுக்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவைதான்; ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் அல்ல என்று உங்கள் அரசு சொன்னது. ஆனால், அந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. முக்கியக் குற்றவாளி அந்த அமைப்பிடம் பயிற்சி பெற்றவர் என்றும் சொல்லப்பட்ட நிலையில், அதை எப்படி நீங்கள் மறுக்கிறீர்கள்?

ஒருவேளை அவர்களில் சிலர் ஐஎஸ் அமைப்பால் கவரப்பட்டிருக்கலாம். ஆனால், ஐஎஸ் அமைப்புக்கு நிறுவனரீதியாக இங்கு எந்த பலமும் இல்லை.

வங்கதேச விடுதலைப் போரின்போது நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாகக் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயத்தில் மரண தண்டனை வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் வேண்டுகோள்கள் எழுகின்றன…

படுகொலைச் சம்பவங்கள், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, அடுத்தடுத்து கிராமங்கள் எரிக்கப்பட்டது என்று 1971-ல் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து, அவற்றில் தொடர்புடையவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தேசிய அளவில் கோரிக்கை எழுந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள்…

மக்களின் கோரிக்கை என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜமாஅத் தலைவர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். வங்கதேச தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். விசாரணையிலிருந்து தப்பிக்க, வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கிறார்கள். போர்க் குற்ற விசாரணையையும், உங்கள் அரசியல் எதிரிகளையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்கிறீர்கள் அல்லவா?

இல்லை. இது அரசியல் பகை அல்ல. ஒரு சுதந்திர நாட்டில் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்றால், சுதந்திரத்துக்கு எதிரான தலைவர்களை எப்படி உங்களால் ஆதரிக்க முடியும்? வங்கதேச தேசியக் கட்சி போர்க் குற்றவாளிகளை ஆதரித்தது. அதன் தலைவர்கள் மீதான வழக்குகள் வேறு மாதிரியானவை. ஊழல் அல்லது பிற குற்றங்கள் தொடர்பானவை அவை. இந்தத் தலைவர்கள் குற்றமற்றவர்கள் என்று தங்களைக் கருதினால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். நாட்டை விட்டு ஓட முயற்சிக்கக் கூடாது.

2014 தேர்தலை வங்கதேச தேசியக் கட்சி புறக்கணித்ததோடு அல்லாமல், அதைக் குலைக்கவும் முயன்றது. வாக்குச் சாவடி மையங்களாக இருந்த பள்ளிகளுக்கு அக்கட்சியினர் தீவைத்தனர். தேர்தல் அதிகாரிகளைத் தாக்கினர். பஸ்கள், ரயில் களைச் சேதப்படுத்தினர். 2015-லும் தங்கள் பயங்கரவாதச் செயல்கள் மூலம் மூன்று மாதங் களுக்கு நாட்டைச் சூறையாடினர். 250-க்கும் மேற்பட்டோர் அதில் கொல்லப்பட்டனர். எனவே, அவர்கள் சட்ட நடவடிக்கைகளைச் சந்தித்தே ஆக வேண்டும். அவை அரசியல் வழக்குகள் அல்ல. குற்ற வழக்குகள்.

1996-ல் வங்கதேசத்தில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவந்தீர்கள். ஆனால், இன்றைக்கு நீங்கள் தலைமையேற்றிருக்கும் நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சிகள் இல்லையே? அடுத்த தேர்தலில், வங்கதேச தேசியக் கட்சியை ஜனநாயகப் பாதைக்குக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறீர்களா?

வங்கதேச தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவுசெய்துவிட்டனர். அதன் தலைவர் பேகம் கலிதா ஜியாவைத் தொலைபேசியில் அழைத்தேன். ஆனால், அவர் என்னுடன் பேசவே தயாராக இல்லை. எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான்தான் கலிதா ஜியாவின் கணவர் ஜெனரல் ஜியாவை ஆதரித்தார். அந்தக் காலகட்டத்திலிருந்தே எங்கள் இருவருக்கும் நல்ல பழக்கம். ஆனால், அவரோ மிக மோசமான முறையில் பேசுகிறார். அவரது மகன் இறந்த சமயத்தில் எனது இரங்கலைக்கூட ஏற்க மறுத்துவிட்டார். அஞ்சலி செலுத்த வீட்டுக்குச் சென்றபோது கதவைச் சாத்திக்கொண்டார். போராடவும், வன்முறையில் ஈடுபடவும் தனது கட்சித் தொண்டர்களைத் தூண்டிவிட்டார். ஒரு மனிதர் என்ற வகையில் நான் வேறு என்ன செய்ய முடியும்? தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவுசெய்தது அவரது தவறு. அந்தத் தவறை அவர் மீண்டும் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். அதேசமயம், அவரது தவறான செயல்களுக்காக ஜனநாயகம் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன்.

பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் இன்னொரு பகுதி. இருந்தும், முக்கியமான இதழின் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டது, கடுமையான தண்டனைகளைக் கொண்ட புதிய சட்டங்கள் போன்றவை ஊடகங்களை நீங்கள் முடக்குகிறீர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன…

நான் ஆட்சிக்கு வந்தபோது ஒரே ஒரு தொலைக் காட்சி நிறுவனம்தான் இருந்தது. இன்றைக்கு 23 தொலைக்காட்சிகள் செயல்படுகின்றன. நூற்றுக்கணக்கான நாளிதழ்கள் வளர்ச்சியடைந் திருக்கின்றன. இதையெல்லாம் விடுங்கள், ஊடகச் சுதந்திரம் இல்லையென்றால், ‘சுதந்திரமே இல்லை’ என்று சொல்லும் சுதந்திரம் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? நீங்கள் குறிப்பிடும் பத்திரிகையாளர் ஷஃபீக் ரஹ்மான் வேறு குற்றங்களின் அடிப்படையிலேயே தேசத் துரோகக் குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேசத்துக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறார் என்றால் அவர் விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். வங்கதேசத்தில் எத்தனையோ இதழாசிரியர்கள் இருக்கிறார்கள். எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்?

சீன அதிபர் பிரிக்ஸ் பிம்ஸ்டெக் மாநாடுகளில் பங்கேற்க இந்தியா செல்லும் வழியில் வங்கதேசம் வந்தார். சீனாவுடனான வங்கதேசத்தின் உறவு இந்தியாவால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இந்தியாவுடன் உறவு இருந்தும், சீனாவை ஒப்பிட இந்தியாவுடனான வங்கதேசத்தின் வர்த்தகம் ஏன் பின்தங்கிய நிலையில் இருக்கிறது?

உண்மையில், இந்தியாவுடனான வர்த்தகம் பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது - குறிப்பாக, 2008-09-ல் தீர்வையும், வரம்பும் இல்லாத வகையில் இந்தியா எங்களுக்கு வர்த்தக வசதியை ஏற்படுத்தித் தந்த பிறகு! கடந்த காலங்களில் உணவு தானியங்களை இந்தியாவிடமிருந்து வாங்கினோம். ஆனால், இன்றைக்கு நாங்கள் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். இந்தியாவுடனான வர்த்தகம் குறைந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால், ஏராளமான உற்பத்திக்கான மூலதனப் பொருட்கள், இயந்திரங்கள், பருத்தி போன்றவை இந்தியாவிலிருந்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் நன்றாக உள்ளது. தொடர்ந்து அது வளரும்.

ஆனால், சீனாவை ஒப்பிட இந்தியாவுடனான வர்த்தகம் 6-7 பில்லியன் டாலர் குறைவாக இருக்கிறதே..

அது தனியார் துறையைப் பொறுத்திருக்கிறது. அதிலிருந்துதான் அவர்கள் பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். இந்தியாவுடனான வர்த்தகத்தில் சமனின்மையைப் பற்றியும், வர்த்தகத் தடைகளை நீக்குவது பற்றியும் நாங்களும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அதற்கான பணிகள் நடந்துவருகின்றன. மோங்க்ளா, பெரமரா நகரங்களில் இந்திய சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்துவது தொடர்பாக நாங்களும் திட்டமிட்டுவருகிறோம். அது வங்கதேசத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் வரத்தை அதிகரிக்கும். வர்த்தக இடைவெளியையும் குறைக்கும்.

வங்கதேசத்தின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளி சீனா. வங்கதேசத்தின் பாதுகாப்பிலும் பெரிய பங்கை சீனா வகிக்கிறது. சீனாவின் ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு’ எனும் திட்டத்தில் வங்கதேசம் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் ‘முத்துமாலை’யாக வங்கதேசம் மாறும் வாய்ப்பிருக்கிறது என்பது இந்தியாவைப் பொறுத்தவரை கவனிக்கத் தக்க விஷயம்தானே?

எங்கள் கொள்கை தெளிவானது. ஒவ்வொரு நாட்டுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம். அதைத் தொடரவே விரும்புகிறோம். பிபிஐஎன் வலைப்பின்னலை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். அதன் பலனாக பூட்டான், இந்தியா, நேபாளத்துடன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம். அத்துடன், சீனா, இந்தியா, மியான்மருடன் பி.சி.ஐ.எம். பொருளாதார மண்டலத்தைக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் அனைவரும் இணைந்து வர்த்தக மதிப்பை வளர்த்தெடுக்கலாம். அதன் மூலம், நமது மக்களின் பொருளாதார நிலை மேம்படும். மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிக்கலாம். இதன் மூலம் அதிகம் பலனடையப்போவது யார் தெரியுமா? இந்தியாதான். வங்கதேசச் சந்தை மூலம் சிறந்த பலனை இந்தியா பெறவிருக்கிறது. அதை நீங்கள் உணர வேண்டும்.

இந்திய விஜயத்தின் மூலம் என்னென்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?

நமது பிராந்தியத்தில் நம் அனைவருக்கும் இருக்கும் பிரச்சினை கிட்டத்தட்ட ஒன்றுதான். நமது பொது எதிரி வறுமைதான். வறுமையை ஒழிக்க நாம் போராடியே ஆக வேண்டும். அண்டை நாடுகளுடன் வங்கதேசத்துக்குப் பல பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். இந்தியாவும் வங்கதேசமும் இதைச் செய்திருக்கின்றன. கங்கை நதி நீர் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டது ஒரு உதாரணம். நில எல்லை ஒப்பந்தத்தின் மூலம் 45 ஆண்டுகளாக இருந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தது. இதுபோன்ற பெரிய பிரச்சினைகளுக்கே நம்மால் தீர்வு காண முடியும் என்றால், சிறிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். எல்லைப் பகுதியில் நடக்கும் கொலைச் சம்பவங்களைப் பொறுத்தவரை இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையும் (பி.எஸ்.எஃப்.), வங்கதேச எல்லைக் காவல் படையும் (பி.ஜி.பி.) இணைந்து அங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. எல்லைப் பகுதி யில் வங்கதேச கிராமத்தினரை பி.எஸ்.எஃப். வீரர்கள் சுட்டுகொன்ற சம்பவங்கள் நடந்திருக் கின்றன. இதுதொடர்பாக உள்துறை அமைச் சர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். ஒரு சில பிரச்சினைகள் நீடிக்கலாம். ஆனால், இரு நாடுகளும் தங்கள் மக்களையும் நிலத்தை யும் ஒருவருக்கொருவர் எவ்வளவு சுமுகமாக மாற்றிக்கொண்டன என்று ஒரு பெரிய அசாதார ணமான உதாரணத்தை உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறோம் என்பதைப் பாருங்கள்!

இதெல்லாம் தவிர, இன்னொன்றும் சொல்வேன். இந்தியா எங்களது பக்கத்து வீடு. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி மறைந்தபோதுகூட தகவல் அறிந்த உடனே இந்தியாவுக்கு ஓடிவந்தேன். ஏனெனில், 1975-ல் நான் தலைமறைவாக இருந்தபோது எங்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்தவர் சுவ்ரா. வங்கதேச விடுதலைப் போரின்போது இந்தியா எங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்தது. எங்கள் மக்கள் அகதிகளானபோது அவர்களைக் கவனித்துக்கொண்டது. வங்கதேச சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பயிற்சி அளித்தது. இப்படி ஒரு நெருங்கிய பந்தம் எப்போதுமே நமக்குள் இருக்கிறது!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x