

ஆகஸ்ட் 7, 2022 ஞாயிறு அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் சுப்பிரமணி இரமேஷ் எழுதியுள்ள ‘காலம்காலமாகக் காத்திருக்கும் கலைக்களஞ்சியம்’ எனும் கட்டுரையில், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முயற்சியில் வெளியான கலைக்களஞ்சியங்கள் தற்போது கிடைக்காமல் இருப்பது குறித்துக் கூறப்பட்டுள்ளது.
2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்போது பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பதில் அளித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பேசுகையில், “வரலாறு பண்பாட்டு மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிவியல் தமிழ் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில், அறிஞர் பெரியசாமித் தூரன் தொகுத்த கலைக்களஞ்சியங்கள் 10 தொகுதிகள், சிறார் களஞ்சியங்கள் 10 தொகுதிகள் ஆவணப்பதிப்பாக வெளியிடப்படும் (அறிவிப்பு எண்: 32)’’ என்று அறிவித்துள்ளார்.
இப்பணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கலைக்களஞ்சியங்கள் 7,000 பக்கங்களுக்கு அதிகம்; சிறார் களஞ்சியங்கள் சுமார் 1,000 பக்கங்களுக்கு அதிகமாகப் பல வண்ண அச்சில் வெளிவந்துள்ளன. இவற்றில், கலைக்களஞ்சியங்களை ஆவணப்பதிப்பாகக் கொண்டுவரும் பணி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பணி, எனினும் விரைவில் கொண்டுவரப்படும்.
- மூ.அப்பணசாமி, ஆலோசகர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்