Last Updated : 17 Oct, 2016 08:52 AM

 

Published : 17 Oct 2016 08:52 AM
Last Updated : 17 Oct 2016 08:52 AM

மறக்கப்பட்ட ஆளுமை: ஆர்.கே.சண்முகம்

டாக்டர் அம்பேத்கர் போல, காந்தி பரிந்துரை செய்த மற்றொரு ஆளுமைதான் ஆர்.கே.சண்முகம்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவியேற்ற ஜவாஹர்லால் நேரு, நிதியமைச்சர் பதவிக்கு யார் யாரையோ மனதில் வைத்திருந்தார். ஆனால், அவருடைய அரசியல் ஆசானான காந்தி தெற்கிலிருந்து ஒருவரை அந்தப் பதவிக்குப் பரிந்துரைத்தார். அவர் காங்கிரஸைச் சாராதவர், சொல்லப்போனால் இங்கிலாந்து அரசுக்கு வேண்டப்பட்டவர் என்று அந்நாட்களில் சொல்லப்பட்டவர். ஆனால், மிகச் சிறந்த நிர்வாகி. நேர்மையாளர். சிறந்த பொருளாதார நிபுணர். தமிழர். ஆர்.கே. சண்முகம்!

முதல் அமைச்சரவையில் சண்முகத்தைப் போலப் பலர் வெவ்வேறு அரசியல், சித்தாந்தப் பின்னணியோடு இடம்பெற்றிருந்தார்கள். ‘‘சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது; காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல’’ என்று சொன்ன காந்தி, நாட்டின் வெவ்வேறு குரல்களைப் பிரதிபலிக்கும் ஆளுமைகளைக் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு முதல் அமைச்சரவைக்குப் பரிந்துரைத்தார். அம்பேத்கர், சியாமா பிரசாத் முகர்ஜி வரிசையில் அப்படி இடம்பெற்றவர்தான் சண்முகம்.

வெலிங்டன் பிரபுவின் செல்லப் பிள்ளை

கோயமுத்தூரில் 1892 அக்டோபர் 17-ல் பிறந்தார் சண்முகம். தந்தை கந்தசாமி தொழிலதிபர். பெரிய தன வணிகர்களான இக்குடும்பத்தவர் ஆலைகளையும் நடத்திவந்தனர். பள்ளிக் கல்வியை கோயமுத்தூரில் முடித்த சண்முகம், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பொருளாதாரப் பட்டம் பெற்றார். பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்தார். பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சண்முகம், நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1917-ல் கோவை நகரமன்ற உறுப்பினரானார். பிறகு, நகர சபைத் துணைத் தலைவரானார். நகர நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்தார்.

1920 முதல் 1922 வரையில் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். பிறகு, நீதிக் கட்சியிலிருந்து விலகி, சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தார்.

மத்திய சட்டப் பேரவை என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட தேசிய நாடாளுமன்றத்துக்கு 1924-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928, 1929, 1932-களில் ஜெனிவாவில் நடந்த சர்வதேசத் தொழிலாளர் மாநாடுகளில் இந்திய முதலாளிகள் தரப்பில் கலந்துகொண்டார். பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கியமையால் 1932-ல் ஆட்டாவா நகரில் நடந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பொருளாதார மாநாட்டிலும் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றார். 1932-ல் மத்திய சட்டப் பேரவையின் துணைத் தலைவராகவும், பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1935 வரையில் அப்பதவியில் இருந்தார். மத்திய சட்டப் பேரவையில் உறுப்பினராக இருந்தபோது லார்ட் வெலிங்டன் பிரபு இவரைத் தனது செல்லப் பிள்ளை என்றே அறிவித்தார்.

இந்தியப் பிரதிநிதி

மத்திய சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை இழந்ததும் கொச்சி சமஸ்தானத்தில் திவானாகப் பதவியேற்றார். 1935 முதல் 1941 வரையில் அப்பதவியில் இருந்தார். கொச்சி துறைமுக அறக்கட்டளை நிர்வாகத்தை மேம்படுத்தினார். 1938-ல் லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற அமைப்பின் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். 1944 உலக பன்னாட்டுச் செலாவணி மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.

இவ்வளவு சிறப்புகளையும் தாண்டி, சண்முகத்தை காந்தி தேர்ந்தெடுக்க விசேஷக் காரணங்கள் இருந்தன. அவர் சாதிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர் அல்ல; எனினும் ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக உழைத்தவர். இந்து மதத்தின் மூடநம்பிக்கைகளுக்கும் பிற்போக்குத்தனங்களுக்கும் எதிராகத் தீவிரமான கருத்துகளைக் கொண்டிருந்தவர். அடித்தட்டு சமூகத்தின்பால் அக்கறை கொண்ட அதேசமயம், முதலாளிகள் வர்க்கத்துடன் உரையாடக் கூடிய ஆளுமை அவரிடம் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் சிறந்த பொருளாதார ஆளுமை அவர்.

நாட்டின் முதல் பட்ஜெட்

முதல் நிதியமைச்சருக்கு மிகப் பெரிய சவால்கள் காத்திருந்தன. அப்போது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 50%-க்கும் மேல் விவசாயத்திலிருந்துதான் கிடைத்தது. ஆனால், அந்த வருமானம் போதவில்லை. பிரிட்டிஷார் விட்டுச் சென்றபோது, ஓரிரு கனரகத் தொழிற் சாலைகளைத் தவிர பெருமளவில் தொழில் கட்டமைப்புகள் இல்லாத நாட்டில் தொழில் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியிருந்தது. எழுத்தறிவின்மை மிகப் பெரிய சமூக நோயாகப் பீடித்திருந்தது.

நாடு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்தது. விவசாயம், தொழில்துறை, ராணுவம், கல்வி, சுகாதாரம், அடித்தளக் கட்டமைப்பு வசதிகள், தகவல் தொடர்பு, போக்குவரத்து என்று எல்லாத் துறைகளும் பகாசுரப் பசியோடு காத்திருந்த வேளையில், மிகக் குறைவான கையிருப்பு நிதி வசதியோடு, வரி விதிப்பு மூலம் வருவாயைத் திரட்ட முடியாத இக்கட்டில் நாட்டின் முதல் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார் சண்முகம். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை அவர் 26 நவம்பர் 1947-ல் தாக்கல் செய்தார். “இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக இந்தியர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட இந்திய அரசின் சார்பில் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறேன்” என்று தனது உரையில் குறிப்பிட்டார் சண்முகம்.

முதல் பட்ஜெட்டில் நாட்டின் மொத்தச் செலவே ரூ.197.39 கோடிதான். அதில் ராணுவத்துக்கு மட்டும் ஒதுக்கியது ரூ.92.74 கோடி (47%). காரணம், தேசப் பிரிவினை நடந்திருந்த நேரம். நாடு முழுவதும் பிரிவினை முழக்கங்கள் எதிரொலித்தன. தேசத்தின் பாதுகாப்புக்குப் பிரதான கவனம் அளிக்க வேண்டியிருந்தது. எஞ்சிய தொகையிலேயே எல்லாத் திட்டங்களுக்கும் சண்முகம் ஒதுக்கீடுசெய்ய வேண்டியிருந்தது. சண்முகம் யாருடைய நலனுக்காக உழைத்தார் என்பதை உணர ஒரு உதாரணம் போதுமானது. சண்முகம் கடுமையாக வரி விதித்தது கார்களுக்கு. அதற்கு அவர் சொன்ன காரணம், ‘‘கார்களுக்கு விதிக்கும் வரியால் சாமானியர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பில்லை, இது அவசியமான செலவல்ல; ஆடம்பரம்.’’ மொரார்ஜி தேசாய் 1962-63-ல் கார்கள் மீதான இறக்குமதித் தீர்வையை 100% முதல் 150% வரை உயர்த்தியது சண்முகத்தின் பாணிதான்.

வரலாறு மறக்காது

மிகக் குறுகிய காலமே நிதியமைச்சராக இருந்தார் சண்முகம். நிதித் துறையில் அவருக்குக் கீழ் இருந்தவர்கள் எடுத்த முடிவு ஒன்று விமர்சனத்துக்கு உள்ளானபோது, அதற்குத் தார்மிகப் பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகினார் சண்முகம். மத்திய அரசிலிருந்து விலகியவர், மாநில அரசியலுக்குத் திரும்பினார். 1952-ல் நடந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக நின்று வென்றார். ஆனால், அடுத்த ஆண்டே - 1953 மே 5 அன்று திடீர் மாரடைப்பால் காலமானார்.

தமிழகத்தைத் தாண்டியும் தமிழுக்கு சண்முகம் செய்த பெரிய தொண்டு தமிழிசைக்கான அவருடைய பங்களிப்புகள். நிறைய எழுதலாம். அவ்வளவு கொண்டாடப் பட வேண்டியவர் சண்முகம். தமிழகம் வழக்கமான தன் சாபக்கேட்டின்படி ஒரு ஆளுமையை மறந்தது. ஆனால், வரலாறு என்றும் அவர் பெயரைத் தக்க வைத்திருக்கும்!

- வ.ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

அக்டோபர் 17 ஆர்.கே.சண்முகத்தின் 125-வது பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x