Last Updated : 29 Sep, 2016 09:25 AM

 

Published : 29 Sep 2016 09:25 AM
Last Updated : 29 Sep 2016 09:25 AM

இளைப்பாறும் இசை!

நுட்பமான உணர்வுகளைக் குரலில் வெளிப்படுத்திய ஜானகியம்மா ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்

சமீபத்தில், சிங்கப்பூரில் நடந்த ‘சைமா’ திரைப்பட விருது நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜானகியம்மாவுக்கு வழங்கப்பட்டது. விருதை வாங்கிக்கொண்ட கையோடு மைக்கைப் பிடித்து, ‘கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலயும்’ என்று இவர் பாடத் தொடங்க, அலட்டல் இல்லாத, முதிர்ந்த இந்தப் பெண்மணியிடமிருந்து துள்ளலுடன் வெளிப்பட்டது ஓர் இளம் குரல். நினைவில் இருக்கும் பல பாடல்களைத் தொடர்ந்து பாடினார். ‘ருசி கண்ட பூனை’ படத்தில் பாடிய ‘கண்ணா நீ எங்கே?’ பாடலைக் குழந்தையின் மாறாத குதூகலத்துடன் இவர் பாடியதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. என்ன வயது ஜானகியம்மாவுக்கு! ஆனால், குரலில் இனிமை வற்றவேயில்லை. முதுமையின் தடுமாற்றம் இருந்தாலும் பழுதில்லாத குரல்.

இந்த ஜானகியம்மாதான் வயோதிகம் காரணமாக ஓய்வுபெறுவதாக அறிவித் திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘வேலையில்லாப் பட்டதாரி’ படத்தில் அனிருத் இசையில் இவர் பாடிய ‘அம்மா அம்மா’ பாடல் பிரபலமானது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘திருநாள்’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தையும் யாரோ’ பாடலுக்குப் பின்னர் தமிழில் வேறு எந்தப் பாடலையும் அவர் பாடவில்லைதான். ஆனால், பாடுவதை நிறுத்திக்கொள்வதாக இவர் அறிவித்த பின்னர், ஒரு பெரும் வெறுமையை ரசிகர்களால் உணர முடிகிறது. “இத்தனை வருஷம் எத்தனையோ நல்ல பாட்டு பாடிட்டேன். நானே பாடிட்டு இருக்கணுமா?” என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார். “என் பாட்டை ரசிகர்கள் என்னைக்கும் கேட்பாங்க” என்று மனநிறைவுடன் கூறுகிறார். அது முற்றிலும் உண்மை!

1957-ல் ‘விதியின் விளையாட்டு’ திரைப்படத்தில் சலபதி ராவின் இசையில் பதிவான ‘பேதை என் வாழ்க்கை பாழானதேனோ’ என்ற பாடல்தான் அவர் பாடிய முதல் தமிழ்ப் பாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று எத்தனையோ மொழிகளில் பாடியிருக்கிறார். ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ (ஆலயமணி), ‘சிங்காரவேலனே’ (கொஞ்சும் சலங்கை), ‘இந்த மன்றத்தில் ஓடி வரும்’(போலீஸ்காரன் மகள்), ‘சித்திரமே நில்லடி’ (வெண்ணிற ஆடை), ‘பூஜைக்கு வந்த மலரே வா’ (பாதகாணிக்கை), ‘கண்ணிலே என்ன உண்டு’ (அவள் ஒரு தொடர்கதை) என்று 1960-கள், 1970-களில் இனிமையான பல பாடல்களைப் பாடினார். எனினும், பி.சுசீலாவுடன் ஒப்பிட்டால், அந்தக் காலகட்டத்தில் இவர் பாடிய பாடல்கள் குறைவுதான்.

இரண்டாவது இன்னிங்ஸ்

1970-களில் பிற மொழிகளில் அதிகம் பாடினாலும், இளையராஜாவின் வருகைக்குப் பிறகு தனக்கு அதிகப் பாடல்கள் கிடைத்தன என்று ஜானகி சொல்லியிருக்கிறார். தமிழில் அதன் பிறகுதான் இவரது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் அவர் பாடிய ‘டூயட்’ பாடல்கள் கணக்கிட முடியாதவை. தனிப் பாடல்கள் தனிக் கணக்கு. ‘எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்’ (குரு), ‘குயிலே கவிக்குயிலே’ (கவிக்குயில்), ‘காற்றில் எந்தன் கீதம்’ (ஜானி), ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம் (நிழல்கள்), ‘எண்ணத் தில் ஏதோ சில்லென்றது’ (கல்லுக்குள் ஈரம்) என்று எத்தனை பாடல்கள்!

ரஹ்மானின் வரவுக்குப் பிறகும் இவரது இசைப் பயணம் தொடர்ந்தது. இளையராஜா வின் இசையில் ‘அவதாரம்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும்போது’, ‘அரண்மனைக் கிளி’ படத்தின் ‘ராசாவே… உன்னை விட மாட்டேன்’, தேவா இசை யமைத்த ‘புள்ளகுட்டிக்காரன்’ படத்தின் ‘மெட்டி மெட்டி வெள்ளி மெட்டி’, கங்கை அமரன் இசையில் ‘அத்தமக ரத்தினமே’ படத்தின் ‘அள்ளி அள்ளி வீசுதம்மா’ என்று பல பாடல்கள் வரவேற்பைப் பெற்றவை. ரஹ்மான் இசையில் ‘மார்கழித் திங்கள் அல்லவா’ (சங்கமம்), ‘நெஞ்சினிலே’ (உயிரே) என்று அது ஒரு தனிப் பட்டியல். நாசர் இயக்கிய ‘தேவதை’ படத்தின் ‘ஒரு நாள் அந்த ஒரு நாள்’ பாடல் இளையராஜா - ஜானகி இணையின் மற்றொரு மகுடம்.

அன்பின் ஊற்று

எனினும், ஏராளமான புதிய குரல்கள் வந்துகொண்டிருந்ததால், 90-களின் தொடக்கம் வரை பல பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த ஜானகிக்குத் தமிழில் வாய்ப்புகள் குறைந்தன. ஆனால், கால மாற்றத்தைப் புரிந்துகொண்ட இவருக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகவே இல்லை. தனது இசைப் பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே, தனக்குப் பிறகு பாட வந்த சித்ரா, ஸ்வர்ணலதா போன்ற பாடகிகளை மிகவும் ஊக்குவித்தவர் இவர். “எப்போதும் பாடல் கேட்டுக்கொண்டு, ஒரு குழந்தையைப் போல் கைபேசியில் ‘டாக்கிங் டாம்’ ஆப்ஸில் பேசிக்கொண்டிருக்கும் அன்பான ஜீவன் இவர்” என்று ஒரு முறை சொன்னார் சித்ரா.

குரலில் அத்தனை பாவம் காட்டும் ஜானகி, பாடும்போது தலையை அசைப்பதுகூடத் தெரியாது. அமைதியாக நின்றுகொண்டு பிரபஞ்சத்தைத் தாண்டும் குரல் வீச்சுடன் பாடுவார். ‘ரெக்கார்டிங்’ சமயத்தில் பயங்கரமாகக் கலாட்டா செய்வாராம் எஸ்.பி.பி. செல்லமாகக் கோபித்துக்கொள்வாராம் ஜானகி. தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில்கூட மனோ போன்ற பாடகர்கள் பணிவு கலந்த உரிமையுடன் இவரிடம் ‘செல்லச் சண்டை’ போடுவதுண்டு. கோபமே இல்லாத பெரியக்கா போல் அதைச் சமாளித்துக்கொண்டு பதிலுக்குக் கிண்டலும் செய்வார் இவர். ஆனால், காலம் தாழ்த்தி தனக்கு வழங்கப்பட்ட ‘பத்மபூஷண்’ விருதை ஏற்க உறுதியுடன் இவர் மறுத்தபோது பலருக்கும் ஆச்சரியம். பாலிவுட்டில் - ஏன், வட இந்தியா முழுவதிலும் லதா மங்கேஷ்கருக்கு இருக்கும் புகழும் மரியாதையும், அவருக்குச் சற்றும் குறைவில்லாத ஜானகிக்கு இங்கே கிடைக்கவில்லை. ‘பத்மபூஷண்’ விருதை 30 வருடங்களுக்கு முன்பே அவருக்கு வழங்கியிருக்க வேண்டும். சுமார் 40,000 பாடல்கள் பாடிய, ஒவ்வொரு பாடலையும் அத்தனை ஆத்மார்த்தமாக உயிர்ப்புடன் பாடிய ஒரு மாபெரும் பாடகிக்கு இந்த தார்மீகக் கோபம்கூட இல்லையென்றால் எப்படி? “பல்வேறு மொழிகளில் நான் பாடிய பாடல்களை ரசிக்கும் ரசிகர்களின் மனதில் நான் இருக்கிறேன். இதற்கு மேல் என்ன விருது வேண்டும்?” என்று சொன்னவர் இவர்.

ஜானகி பாடுவதை நிறுத்தியிருக் கலாம். ஓய்வு என்றே அறிவித்திருக்கலாம். எனினும், இனி இவர் அமர்ந்திருக்கப்போவது சாய்வு நாற்காலியில் அல்ல. ரசிகர்களின் மனதில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட அற்புதமான அரியணையில்!

வெ.சந்திரமோகன்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x