Published : 28 Jul 2022 06:38 AM
Last Updated : 28 Jul 2022 06:38 AM

செஸ் ஒலிம்பியாட் 2022 | ஒலிம்பியாட்டில் ரஷ்யா

சுஜாதா, முகமது ஹுசைன்

நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் செஸ் ஒலிம்பியாட்டில் இதுவரை 43 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 18 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்களுடன் சோவியத் ஒன்றியம் முதலிடத்தில் இருக்கிறது.

சோவியத் உடைந்த பின் தனி நாடான ரஷ்யா 1992ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாகப் பங்கேற்றது. தொடர்ச்சியாக 6 ஒலிம்பியாட்களில் அந்நாடு தங்கம் வென்றது. அதற்குப் பிறகு 18 ஆண்டுகள் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை.

2020, 2021ஆம் ஆண்டுகளில் ஆன்லைன் ஒலிம்பியாட்களில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. தற்போது 8 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மொத்தமாக, அதிகப் பதக்கங்களை வென்றுள்ள அமெரிக்கா, தங்கப் பதக்கங்கள் குறைவாகப் பெற்றிருப்பதால் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அந்நாடு 6 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் இருக்கிறது. இந்தியா 1 தங்கம் (இணையவழி), 2 வெண்கலப் பதக்கங்களுடன் 11ஆவது இடத்தில் இருக்கிறது.

இரண்டு நாடுகளுக்குப் பதக்கம் வென்றவர்கள்

கேரி காஸ்பரோவ் அணி 1980, 82, 86, 88 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சோவியத் ஒன்றியத்துக்குத் தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்துள்ளது. 1992, 94, 96, 2002 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் ரஷ்யாவுக்காக விளையாடி, தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்துள்ளது. பால் கேரஸ் 1930 – 60 வரை புகழ்பெற்ற செஸ் வீரராகத் திகழ்ந்தவர்.

இவர் எஸ்டோனியாவுக்காக முதல் 3 ஒலிம்பியாட் போட்டிகளிலும் மீதியை சோவியத் ஒன்றியத்துக்காகவும் விளையாடியவர். செர் ஜிகர்ஜாகின் 12 வயது, 7 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்று, மிக இளம் வயதில் பட்டம் வென்றவர் என்ற சிறப்பை முன்பு பெற்றிருந்தவர். இவர் முதல் 3 ஒலிம்பியாட்களை உக்ரைனுக்காகவும் அதன் பிறகு ரஷ்யாவுக்காகவும் விளையாடிவருகிறார். இவர்கள் அனைவருமே குறைந்தபட்சம் 4 ஒலிம்பியாட்களில் பங்கேற்றவர்கள்.

செஸ் என்றால் சோவியத் ஒன்றியம்

ரஷ்யர்களின் தேசியப் பெருமையின் அடையாளமாக செஸ் விளையாட்டு இன்றைக்கும் திகழ்கிறது. செஸ்ஸில் ரஷ்யர்களின் ஆதிக்கம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவருகிறது. போர்த் தந்திரம், வெற்றியடைவதற்கான செயல்திட்டம், வியூகம் வகுக்கும் முறை ஆகிய திறன்கள் செஸ் விளையாட்டின் முக்கிய அங்கங்கள்.

இதன் காரணமாக, கம்யூனிஸ சித்தாந்தத்துக்கு ஓர் அறிவுசார் தளத்தை செஸ் அமைத்துக் கொடுத்தது என்று சொல்லலாம். குறிப்பாக, 1917இல் நிகழ்ந்த போல்ஷ்விக் புரட்சிக்குப் பின்னர் விளாடிமிர் லெனின், ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் செஸ் விளையாட்டைப் பெருமளவில் ஊக்குவித்தனர்.

இதன் காரணமாக, ரஷ்யர்கள் செஸ்ஸில் வலிமையானவர்களாக மாறினார்கள். மைக்கேல் போட்வின்னிக் போன்ற புகழ்பெற்ற செஸ் கிராண்ட்மாஸ்டர்களும் உருவாகினர். சோவியத் யூனியனில் செஸ் வீரர்களுக்குக் கிடைத்த பெயரும் புகழும் நம் நாட்டில் சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைத்த புகழுக்கும் மேலானது.

செஸ்ஸும் பனிப் போரும்

ராணுவம், பொருளாதாரம் ஆகியவற்றில் அமெரிக்கர்களைவிட ரஷ்யா பின்தங்கியிருந்திருக்கலாம். ஆனால், செஸ் விளையாட்டில் அமெரிக்காவைவிட எப்போதும் ரஷ்யா தலைசிறந்து விளங்கியது. செஸ் உலகில் ரஷ்யர்கள் வீழ்த்த முடியாதவர்களாக உலா வந்தனர். அவர்களை எதிர்த்து நிற்க முடியாத நிலையில் அமெரிக்கர்கள் இருந்தனர்.

செஸ் விளையாட்டில் ரஷ்யர்களிடம் அமெரிக்கர்கள் பெற்ற தோல்வி மோசமானதாக இருந்தது. பனிப்போர் காலத்தில் தங்கள் கலாச்சாரப் பெருமையையும், பாரம்பரியச் சிறப்பையும், நெடிய வரலாற்றின் மேன்மையையும் நிலைநிறுத்த செஸ் விளையாட்டில் அமெரிக்கா அடைந்த அவமானகரமான தோல்விகளை ரஷ்யா முன்னிறுத்தியது.

இதன் மூலம் அமெரிக்கர்களைவிட ரஷ்யர்கள் அறிவாற்றல் மிகுந்தவர்கள் எனும் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. 1920 தொடங்கி 1972 வரையிலான 50 ஆண்டுகளுக்கு ரஷ்யர்களே உலக செஸ் சாம்பியன்களாக வாகை சூடினர்.

இடையில் ஒரே ஒருமுறை, 1935 – 1937க்கு இடையிலான இரண்டு ஆண்டுகள் நெதர்லாந்தின் கணித மேதையும் செஸ் ஆர்வலருமான மாக்ஸ் யூவே உலக சாம்பியனாக இருந்தார்.

செஸ்ஸில் ரஷ்யாவை வீழ்த்துவதற்கான அமெரிக்காவின் 50 ஆண்டு முயற்சி, 1972இல் பாபி பிஷரின் வருகைக்குப் பின்னரே சாத்தியமானது. அந்த வெற்றியும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

செஸ் உலகின் சூப்பர் ஸ்டார்

அமெரிக்கர்கள் ஏங்கித் தவித்த அறிவுசார் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்த பெருமை பாபி பிஷர் எனும் செஸ் மேதையைச் சாரும். செஸ் விளையாட்டில் உலக அளவில் அவர் அளவுக்குக் கொண்டாடப்பட்ட வீரர் வேறு எவரும் இல்லை. செஸ் விளையாட்டில் அவர் விளையாடும் முறையும் நகர்வுகளின் போக்கும் தனித்துவமானவை.

அன்றைய காலகட்ட சிந்தனைப் போக்கை விஞ்சி நின்றவை. ஆறு வயதில் செஸ் விளையாட்டை அவர் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 1956இல் தன்னுடைய 13 வயதில், டொனால்ட் பைரனுக்கு எதிரான அபார வெற்றியின் மூலம் தனது வருகையை உலகுக்கு அவர் அறிவித்தார். ‘நூற்றாண்டின் போட்டி’ என அழைக்கப்படும் அந்தப் போட்டியின் 17ஆவது நகர்வில், பிஷர் தனது ராணியை வேண்டுமென்றே தியாகம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், அதன் பின்னர் கறுப்பு – வெள்ளைக் கட்டங்களில் பிஷர் ஆடிய ருத்ரதாண்டவம் செஸ் உலகம் அதுவரை கண்டிராத ஒன்று. அதன் பின்னர், பிஷரின் வெற்றிப் பயணம் தடையின்றித் தொடர்ந்தது. 1972இல் சோவியத் யூனியனின் போரிஸ் ஸ்பாஸ்கியைத் தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தை பிஷர் வென்றார்.

செஸ்ஸில் ரஷ்யர்களின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 1975இல் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் சோவியத் யூனியனின் அனடோலி கார்போவை எதிர்த்து விளையாட பிஷர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, கார்போவ் உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டார். இதன் பின்னர், செஸ் உலகை பிஷர் முற்றிலும் புறக்கணித்தார்.

- சுஜாதா, முகமது ஹுசைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x