Published : 30 Sep 2016 09:48 AM
Last Updated : 30 Sep 2016 09:48 AM

எப்படி கையெழுத்தானது சிந்து உடன்படிக்கை?

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நல்லுறவு வளரும் என்ற நம்பிக்கையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை இது

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகள் பலவற்றில் இன்றும் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது சிந்து நதி நீர் உடன்படிக்கை. சிந்து ஆற்றின் வாய்க்கால்கள் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில், பஞ்சாப் மாகாணத்தில் இருந்தன. தேசப் பிரிவினையால் ஏற்பட்ட எல்லைக் கோடு பஞ்சாபை இந்திய பஞ்சாப், பாகிஸ்தானிய பஞ்சாப் என்று இரண்டாகப் பிளந்தது. எல்லா வாய்க்கால்களின் தலைப்பகுதியும் இந்தியாவில் இருந்தன. சிந்து நதியின் ஐந்து துணை நதிகளும் இந்தியாவில் தொடங்கி, இந்திய எல்லை வழியாகப் பாய்ந்து சிந்து நதியில் கலந்தன. பிரிவினைக்கு முன்னாலும்கூட பஞ்சாப், சிந்து மாகாணங்களுக்கு இடையில் சிந்து நதிநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாகப் பூசல்கள் இருந்துவந்தன. பிரிவினையால் ஏற்பட்ட பெருங்கலவரத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமானது. ‘சிந்து நதியை முழுதாகக் கைப்பற்ற ஆயுதமெடுத்துப் போர் செய்ய வேண்டும்’ என்ற குரல் பாகிஸ்தானில் உரக்க ஒலித்தது. அதிருஷ்டவசமாக, உலக வங்கியின் வடிவத்தில் நடுவர் வந்ததால் உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான பாராட்டு அப்போது உலக வங்கியின் தலைவராக இருந்த ஈஜின் பிளாக் என்பவரையே சாரும்.

எல்லைகளை வரையறுத்தல்

சிந்து நதிப் பகிர்வு, எல்லைப் பிரச்சினை தொடர்பாக 1959-ல் இரு குழுக்களை இந்தியா அனுப்பி வைத்தது. நதிநீருக்காக அனுப்பி வைத்த குழுவுக்கும் பாகிஸ்தான் குழுவுக்கும் இடையில் அதுவரை கேள்விப்பட்டிராத வகையில் மிகவும் சுமுகமாகப் பேச்சு நடந்தது. இரு குழுக்களின் தலைவர்களும் பிரிவினைக்கு முன்னதாக லாகூரில் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இந்தியக் குழுவுக்கு சர்தார் ஸ்வரண் சிங் தலைவர், பாகிஸ்தான் குழுவுக்கு சிக்கந்தர் அலி பெய்க் தலைவர். இரு தரப்புக்கும் அதிகபட்ச நன்மைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இருவரும் பேசத் தொடங்கியதால் முறைகேடாக எந்தப் பலனையும் எதிராளியிடமிருந்து பறிக்க இருவருமே முயற்சி செய்யவில்லை. எனவே தீர்வை எட்டுவது எளிதாக இருந்தது.

எனினும் சில பிரச்சினைகள், எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாதவையாகத் தொடர்கின்றன. ஒரு உதாரணம், குஜராத்தை ஒட்டிய கட்ச் பிரதேசம். சதுப்பு நிலமான இது சிந்து மாகாண எல்லையை ஒட்டியது. பாகிஸ்தான் இந்தப் பகுதியைத் தனது ஆயுத பலம் கொண்டு கைப்பற்ற முற்பட்டது. கட்ச் பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படையை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. பிறகு சர்வதேச மத்தியஸ்தத்துக்கு பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டது. இறுதியாக, கட்சின் ஒரு பகுதியை பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்தது.

அயூப் கான் துணிவு

இதற்கிடையில் அயூப் கான் துணிச்சலாக ஒரு செயலைச் செய்தார். அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் பிரதான நகரமான டாக்காவுக்குச் செல்லும் வழியில் டெல்லி பாலம் விமான நிலையத்தில் இறங்கி இந்தியப் பிரதமர் நேருவைச் சந்தித்தார். இரு தலைவர்களும் இறுதியில் விடுத்த கூட்டறிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை திட்டமிட்ட வகையில் வலுப்படுத்த வேண்டும் என்று கோரியது.

இன்னும் பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறப்போகின்றன என்பது விரைவிலேயே புரிந்தது. பாலம் விமான நிலையத்தில் இறங்கிப் பேசிய அதிபர் அயூப் கானின் பெருந்தன்மைக்கு இணையாகப் பிரதமர் நேருவும் பாகிஸ்தானுக்குச் சென்று உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. 1960 செப்டம்பர் 19 முதல் 23 வரையில் நேரு பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. சிந்து நதிநீர்ப் பகிர்வு உடன்படிக்கை அப்போது கையெழுத்தானது. நேரு மேற்கொண்ட கடைசி பாகிஸ்தான் பயணமும் அதுதான்.

சிந்து நதிநீர் உடன்படிக்கை கையெழுத்தானது. இந்தியா சார்பில் நேருவும் பாகிஸ்தான் சார்பில் அயூப் கானும் கையெழுத்திட்டனர். உலக வங்கி சார்பில் அதன் துணைத் தலைவர் வில்லியம் இலிஃப் கையெழுத்திட்டார். முதல் பத்தாண்டுகள், ஒருகட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு மாறுவதற்கான காலமாகக் கருதப்பட்டது; அதற்குப் பிறகு பாகிஸ்தான் கோரினால் மேலும் 13 ஆண்டுகளுக்கு உடன்படிக்கையை நீட்டித்துக்கொள்ள வகை செய்யப்பட்டிருந்தது. ராவி, பியாஸ், சட்லெஜ் என்ற கிழக்கு நதிகள் மூன்றும் இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்டன; மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், சீனாப் மூன்றும் பாகிஸ்தானுக்காக ஒதுக்கப்பட்டன. அதே வேளையில் இம்மூன்று நதிகளின் மேற்பகுதி நீரை இந்தியா பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது. முதல் பத்தாண்டுகளில் பாகிஸ்தான் தனக்குத் தேவைப்படும் பாசன வாய்க்கால் வசதிகளைச் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. கிழக்கு நதிகளின் தண்ணீரைப் பயன்படுத்திக்கொண்டு வந்ததிலிருந்து மாறி, மேற்கு நதிகளின் நீரைப் பயன்படுத்திக்கொள்ள இந்த அவகாசம் தரப்பட்டது. அப்போது இந்தத் திட்டத்துக்கு மொத்தச் செலவு 107 கோடி அமெரிக்க டாலர்கள். இதில் 87 கோடி அமெரிக்க டாலர் பாகிஸ்தானின் பங்கு.

இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இரு தரப்பு வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு பற்றி பேசப்பட்டது. பல யோசனைகள் கூறப்பட்டன. அயூப் கான் உற்சாகமாக இருந்தார். “சிந்து நதியின் நீரை ராஜஸ்தானின் பாலைவனப் பகுதிக்குத் திருப்பிவிடத் தயார், ஆற்றின் கீழ்ப் பகுதியில் அதற்காக அணை கட்டுவோம்; பலுசிஸ்தான் பகுதியில் கிடைக்கும் இயற்கை நில வாயுவை பம்பாய்க்கு அனுப்பத் தயார்” என்றெல்லாம் பேசினார். பதிலுக்கு, “லாகூரிலிருந்து டாக்காவுக்கு இந்திய நிலப் பகுதி வழியாக ரயில்களை இயக்கப் பரிசீலிக்கத் தயார்” என்று இந்தியக் குழுவினர் பேசினர். இரு நாட்டு ராணுவங்களிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தக்கூட விவாதிக்கப்பட்டது. ஆனாலும் அதன் பிறகு எதுவும் நடக்கவில்லை. ஜம்மு-காஷ்மீரை முழுதாகத் தங்களுக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கையில் பாகிஸ்தான் பிடிவாதமாக இருந்ததே முக்கியமான காரணம்.

ஆக, இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு என்ற செயல்திட்டத்தில் சிந்து நதி ஒப்பந்தத்தைத் தாண்டி எதுவும் நடக்காமல் போய்விட்டது!

- கே.வி. பத்மநாபன், (இந்திய வெளியுறவுத் துறையில் பணிபுரிந்தவர். இந்த ஒப்பந்த ஏற்பாட்டுப் பணியில் பங்கேற்றிருந்தவர். 1911-ல் பிறந்த அவர் 1992-ல் காலமானார். சிந்து நதி உடன்படிக்கை தொடர்பாக அவர் முன்னர் எழுதிய குறிப்பு இது.)

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x