Published : 26 May 2016 10:19 AM
Last Updated : 26 May 2016 10:19 AM

சமகாலச் சிறுகதை எழுத்தாளர்கள்: இமையம் பேட்டி

புத்தாயிரத்தில் சிறுகதைகள் எப்படி இருக்கின்றன, முக்கியமான சமகாலச் சிறுகதைப் படைப்பாளிகள் யார், முக்கியமான தொகுப்புகள் யாவை என்று எழுத்தாளர் இமையத்திடம் கேட்டோம்.

நிஜமான இலக்கியப் படைப்பின் நோக்கம் பாரபட்சமின்றி சமூக நிகழ்வுகளை ஆவணப் படுத்துவதாகும். கோஷத்தை உருவாக்குவதல்ல. கொள்கைகளை முழங்குவது அல்ல. சமூக அசைவு இயக்கத்தை ஆவணப்படுத்துவது என்பது சமூகவியலாளனின் பார்வையிலிருந்து தொகுக்கப்படும் புள்ளிவிவரத் தகவல் தொகுப்பு அல்ல. அசலான வாழ்வின் நிஜமான பதிவு என்பதுதான் இலக்கியம். இந்தப் பதிவிலிருந்துதான் எதிர்கால தலைமுறைக்கான அறநெறி, சமூக ஒழுக்கம், பண்பாட்டு, கலாச்சாரக் கூறுகளாக, கல்வியாக, அறிவாகப் போதிக்கப்படுவது.

முந்தைய தலைமுறையினரின் வாழ்விலிருந்து பிந்தைய தலைமுறையினர் பெறும் அறிவு, அரிய செல்வம் என்பது இலக்கியப் படைப்புகளின் வழியாகப் பெறப்படுவதுதான். அந்த வகையில் 2000-க்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளில் தமிழ்ச் சமூக வாழ்வு எப்படி பதிவாகியிருக்கிறது என்று ஆராய்வது தமிழ்ச் சமூக வாழ்வையே ஆராய்வதாகும். இந்த ஆய்வு தமிழ் மொழிக்கு, இலக்கியத்துக்கு, சமூகத்திற்கு நல்லது.

2000-க்குப் பிந்தைய எழுத்தாளர் களுக்கும் அதற்கு முன்பு எழுதிய எழுத்தாளர் களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. இந்த வேறுபாடு சமூக வாழ்வை, குடும்ப வாழ்வை, தனி மனித வாழ்வை படைப்பு ரீதியாக எவ்வாறு அணுகினார்கள் என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. கதைக்கான கருவைத் தேர்ந்தெடுத்தது, கதையைக் கட்டமைத்தது, கதையைச் சொல்லத் தேர்ந்தெடுத்த மொழிச் செறிவு போன்றவற்றிலும் இந்த வேறுபாடுகள் இருக்கின்றன. 2000-க்குப் பிந்தைய எழுத்தாளர்களின் சிறுகதைகள் மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், விளிம்பு நிலை, குழந்தைத் தொழிலாளர்கள், பின்நவீனத் துவம், அமைப்பியல், சர்ரியலிசம் போன்ற கொள்கை கோட்பாடுகளை முடிந்தவரை தவிர்த்தவையாக இருக்கின்றன. அடையாளங்களை விரும்பாத, அடையாளங்களைத் தவிர்த்தவர்களாக இருப்பது நல்லதா, கெட்டதா என்பது ஒரு கேள்வி. சமூக நிகழ்வு களை எந்த அளவுக்கு உள்வாங்கிப் படைப்புகளாக மாற்றினார்கள் என்ற கேள்வியும் முக்கியம்.

ஆரோக்கியமான போக்கு

முந்தைய தலைமுறையினர் எழுதத் தயங்கிய பல வாழ்க்கை முறைகளை, விஷயங்களை, பயன்படுத்தத் தயங்கிய பல சொற்பிரயோகங்களை இன்றைய தலைமுறையினர் எவ்விதத் தயக்கமும் இன்றி எழுதுகின்றனர். இப்போக்கு ஆரோக்கியமானது. யார் வேண்டுமானாலும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும், எந்த மொழியில் வேண்டுமானாலும், எப்படிப்பட்ட வாழ்க்கையையும் எழுதலாம் என்ற சுதந்திரத்தைக் காலம் தந்துள்ளது. எழுத்தில் இலக்கியத்தில், ஜனநாயகத் தன்மை ஏற்பட்டதால் ஏற்பட்ட நன்மை இது. சுதந்திரம் இது. இந்த நன்மையை, சுதந்திரத்தை இன்றைய சிறுகதை எழுத்தாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்களா என்பது முக்கியம். ஏனென்றால், தமிழ் சிறுகதையின் வளர்ச்சி என்பது தமிழ் மொழியின் வளர்ச்சி.

முந்தைய தலைமுறையினரின் சிறுகதைகளின் மையமாக சமூக வாழ்வு, குடும்ப வாழ்வு இருந்தது. ஆனால் இன்றைய எழுத்தாளர்களின் சிறுகதைகளில் மையமாக இருப்பது தனி மனித வாழ்வும் அதன் நெருக்கடியும், ரகசியமும், உடலும்தான். பெண் உடல் சார்ந்து, பெண் மொழி சார்ந்து இப்போதுதான் அதிகம் எழுதப்படுகின்றன. ஆண் பெண் உறவு சார்ந்த, ஜாதி, மதம் சார்ந்த கேள்விகள், உள்முரண்கள் இப்போதுதான் சிறுகதைகளில் அதிகம் பேசப்படுகின்றன. புனிதங்களைப் போற்றாத, புனிதங்களை வளர்க்காத, புனிதங்களைக் கேள்விக்குட்படுத்துகிற தன்மையுடன் இன்றைய சிறுகதைகள் இருக்கின்றன. கோட்பாட்டுச் சுமைகளைச் சுமக்காதவர்கள் இன்றைய எழுத்தாளர்கள். தனி மனிதப் பிரச்சினையாக இருந்தாலும் சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் எல்லாவற்றையும் நேரடியாகப் பேசுகிற தன்மை இன்றைய சிறுகதைகளில் இருக்கின்றன.

2000-க்குப் பிறகு எழுத வந்த சிறுகதை எழுத்தாளர்களில் கவனம் பெற வேண்டியவர்கள் யார், கவனம் பெற வேண்டிய சிறுகதைத் தொகுப்புகள் எவை என்று பட்டிலிடுவது எளிய காரியமல்ல. ஆனாலும் நான் படித்தவற்றில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு, சிறந்தவை எனக் கருதியவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். இது இறுதிப் பட்டியல் அல்ல. இது ஒரு மாதிரிதான்.

பட்டியலிடப்பட்ட 10 சிறுகதைத் தொகுப்புகளைப் படிக்கும்போது 2000-க்குப் பிந்தைய தமிழ்ச் சிறுகதைகளின் போக்கு, அதன் அழகியல் தன்மை, வளர்ச்சி, மொழி, கதை, கதை சொல்லப்பட்ட விதம், கதையின் மையம், கதைகள் முன்னிறுத்திய சமூக நிகழ்வுகள் ஆகியவற்றை அறிய முடியும். இன்றைய எழுத்தாளர்கள் முந்தைய தலைமுறையினரின் எழுத்துமுறையை எந்த அளவுக்குப் பின்பற்றினார்கள், எந்த அளவுக்கு நிராகரித்திருக்கிறார்கள் என்பதையும் இந்தத் தொகுப்புகள் காட்கின்றன. இந்தச் சிறுகதைத் தொகுப்புகளின் மூலமாகத் தமிழ்ச் சமூக வாழ்வையும், மனோபாவத்தையும், மாற்றத்தையும் அறிய முடியும். நிகழ்காலச் சமூகத்தின் முகம் இந்தச் சிறுகதைத் தொகுப்புகள்: இந்த எழுத்தாளர்கள்.

1. கண்டி வீரன்

- ஷோபாசக்தி: கருப்புப் பிரதிகள்- தொடர்புக்கு: 9444272500

2 . முத்தி-

புகழ்: க்ரியா பதிப்பகம் தொடர்புக்கு: 9789870307

3. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

மாரிசெல்வராஜ் - வம்சி பதிப்பகம் தொடர்புக்கு: 9444867023

4. நிறைய அறைகள் உள்ள வீடு-

குட்டி ரேவதி: பாதரசம் பதிப்பகம் - தொடர்புக்கு: 7299239786

5. மண்டை ஓடி-

ம.நவீன்: வல்லினம் பதிப்பகம் தொடர்புக்கு: 044-24896979

6. வெளிவாங்கும் காலம்-

என்.ராம்: பாதரசம் பதிப்பகம் - தொடர்புக்கு: 7299239786

7. இரவுக் காட்சி

- கே.என்.செந்தில்: காலச்சுவடு - தொடர்புக்கு: 9677778863

8. வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும்

தமயந்தி: கருப்புப் பிரதிகள் தொடர்புக்கு: 9444272500

9. வெயில் உலர்த்திய வீடு

எஸ்.செந்தில்குமார்: உயிர்மை தொடர்புக்கு: 9444366704

10. கவர்னர் பெத்தா

- மீரான் மைதீன்: திணை வெளியீட்டகம் தொடர்புக்கு: 9894817439

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x