Published : 19 May 2016 08:01 AM
Last Updated : 19 May 2016 08:01 AM

முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளர்களை என்ன செய்வது?

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அலுவலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் தாங்கள் சந்தித்த சவால்களையும் கசப்பு நிறைந்த அனுபவங்களையும் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பணப் பட்டுவாடாவைத் தடுக்க நியமிக்கப் பட்டிருக்கும் அதிகாரிகளிடம் மக்களே சென்று ‘எங்களுக்கு வரும் பணத்தைத் தடுக்க நீங்கள் யார்?’ என்று சண்டைக்கு நிற்கும் அளவுக்கு, பணத்தின் ஆதிக்கம் ஜனநாயகத்தின் வேர் வரை ஊடுருவியிருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் மற்ற மாநிலங்களுக்கு ஒரு ‘வழிகாட்டி’யாகவே மாறியிருக்கிறது தமிழகம். தேர்தல் முறைகேட்டுக்குப் பேர்போன பஞ்சாப் போன்ற மாநிலங்களின் பத்திரிகைகளில் தமிழகத்தின் நிலையை விமர்சித்துத் தலையங்கம் எழுதப்படும் அளவுக்கு நிலைமை அத்தனை மோசமடைந்திருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற இத்தனை முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்கள், கட்சிகள் வெற்றிபெற்ற பின்னர் எப்படி நேர்மையுடன் பணியாற்றுவார்கள் என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி களிலும் சில கட்சிகள் பண விநியோகத்தில் ஈடுபட்டதாகப் பேசப்படுகிறது. வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் 23-ம் தேதிக்கு வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகூடக் கண்துடைப்பு நடவடிக்கை என்றே சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. விதிமுறைகளை மீறி செயல்பட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் மீது, தேர்தல் முடிந்த பிறகு, நீதிமன்ற வழக்குகள் மூலம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றால், அது போதுமானதா? இதற்கெல்லாம் என்ன தீர்வு?

நன்கொடைகளைத் தடுக்க வேண்டும் - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர். டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,

தேர்தலில் பணப்பட்டுவாடா என்னும் விஷயத்தைத் தவிர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதைத் தடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகிறேன். மேலும், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு என்று செலவு செய்யக் கூடாது. இதற்காக ‘மாநிலத் தேர்தல் நிதியம்’(ஸ்டேட் எலெக்‌ஷன் ஃபண்ட்) என்று ஒரு பொது நிதியம் உருவாக்கப்பட வேண்டும். இப்போதுள்ள முறையில், புகாருக்கு ஆளாகும் வேட்பாளர்களிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்கலாம், அதிகபட்சமாகத் தேர்தலைத் தள்ளிவைக்கலாம். ஆனால், வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்கிற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. அதற்கான அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவர் மீது சட்டம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளார்கள். புகாரின் தன்மையின்படி மூன்று மாதம் வரைகூட தேர்தலைத் தள்ளிவைக்க முடியும். இந்தப் பிரச்சினைக்கெல்லாம் ஒரே தீர்வு, தேர்தல் சீர்திருத்தம்தான். இன்றைக்கு இருக்கிற அத்தனை அரசியல் கட்சிகளும், தற்போதைய மோசமான தேர்தல் முறை பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அப்படிக் கவலைப்பட்டிருந்தால், தேர்தல் சீர்திருத்தம் பற்றித் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருப்பார்கள்.

எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் தேர்தல் முறைகளை மாற்ற திருத்தங்கள் செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அது அவ்வளவு எளிதானதாக இப்போது இல்லை. பணப்பட்டுவாடா உள்ளிட்ட விதிமுறை மீறல்களைத் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு இன்னும் கூடுதல் அதிகாரம் வழங்கும்படியாக அந்தச் சீர்த்திருத்தம் இருக்க வேண்டும்.

தேர்தலையே ரத்து செய்ய வேண்டும்! என்.கோபால்சுவாமி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

தேர்தலில் பணம் கொடுக்கிறார்கள், வாங்குகிறார்கள் என்பது எல்லோருக்கும், தெரிந்த விஷயம். அதில் நடவடிக்கை எடுப்பது என்பது ஆணையத்துக்கு மிகப்பெரிய சவால் என்றுதான் சொல்ல வேண்டும். பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம். சம்பந்தப்பட்ட வேட்பாளர்தான் பணத்தை கொடுத்தார் என்று அவர் மீது வழக்குத் தொடுத்து அவரை தகுதிநீக்கம் செய்ய முடியும். ஆனால், வேட்பாளருக்காக வேறொரு நபர் பணம் கொடுக்கிறபோது அவர் மீது ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது.

தேர்தலில் பணம் கொடுப்பது என்பதை எல்லோரும் வியாதி போலவே பார்க்கிறார்கள். ஆனால், இதற்கான காரணம், ஆட்சியில் இருந்தவர்கள் லஞ்சம் ஊழலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை மீண்டும் தேர்தலில் முதலீடு செய்கிறார்கள். முறைகேடு நடக்கிறது என்று கூறி தேர்தலைத் தள்ளி வைப்பதால் எந்தப் பலனும் இல்லை. கவுன்டர் மேன்டிங் முறைப்படி தேர்தலையே ரத்து செய்யலாம். 2 அல்லது 3 தொகுதிகளில் அப்படிச் செய்யும்போது, பணப்பட்டுவாடா போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு யோசிப்பார்கள்.

சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்! உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா,

பணத்தைக் கொடுத்து வாக்கை விலைக்கு வாங்குவது மிகப்பெரிய குற்றம். இது ஜனநாயகப் படுகொலை என்பதில் சந்தேகமில்லை. கோடிகள் மூலம் வெற்றியைக் குவிக்கும் வேட்பாளர்கள் மீது சட்டத்தால் எதுவுமே செய்ய முடியாது என்பதில்லை. தேர்தல் வழக்குகளுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டும். தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதிக்குச் சமம்.

அதேசமயம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி மட்டு மல்லாமல் எஞ்சிய 232 தொகுதிகளிலும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று பொத்தாம்பொதுவாகக் கூற முடியாது. ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதைத்தான் நீதிமன்றம் பார்க்கும். அனுமானத்துக்கு இடம் கொடுக்க முடியாது. நம்முடைய ஜனநாயக நாட்டில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் சமமான வாய்ப்பு தரப்பட வேண்டும். நீதிமன்றம், வழக்கு, ஆதாரம் எதுவுமே இல்லாமல் உடனே யாரையும் தகுதி நீக்கம் செய்துவிட முடியாது.

நம்முடைய சட்டங்கள்தான் உலக அளவில் முன்னுதாரணமாக இருக்கின்றன. எனவே, எடுத்தோம், கவிழ்த்தோம் என எதிலும் முடிவு எடுத்துவிட முடியாது. பணநாயகத்தை ஜனநாயகம் வெல்லும் வகையிலான சட்டங்கள் நம்மிடம் நிறைய உண்டு. சட்டங்கள் இருக்கின்றன என்பதால்தான் ஓரளவு பயத்துடன், கட்டுப்பாட்டுடன் தேர்தல் நடக்கிறது. இதையும் தாண்டி நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என்றால், மக்களின் எண்ணம் மாற வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் புரட்சி ஏற்பட வேண்டும். அப்துல் கலாம் கண்ட கனவு நிஜமாக இளைஞர்கள் பொங்கி எழ வேண்டும். பணநாயகத்தை வேரோடு பிடுங்கி எறிய அவர்களால்தான் முடியும். அதேசமயம், இருக்கிற சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

சட்டத்தைத் திருத்த வேண்டும்! ஜி.எம். அக்பர் அலி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி

தேர்தலுக்கான வேட்பு மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்போது குறிப்பிடப்பட்ட தகுதிகள் இல்லாவிட்டால், தேர்தலில் போட்டியிட முடியாது. இது, முன் தகுதியிழப்பு (Pre disqualification) என்று அழைக்கப்படுகிறது. அதிலும் குற்ற வழக்கில் தண்டனை பெற்றிருக்கக் கூடாது என்று மட்டுமே விதிமுறை உள்ளது. ஆனால், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோரைத் தேர்தலுக்கு முன்னரே தகுதி இழப்பு செய்வதற்கான விதிமுறைகள் இல்லை. தேர்தல் முடிந்த பிறகு, குறிப்பிட்ட தொகுதியில் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பது போன்ற காரணங்களைக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அத்தகைய வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர் தகுதி இழப்பு செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இதனை, பிந்தைய தகுதி இழப்பு (Post disqualification) என்கின்றனர்.

வேட்பாளர்கள் உரியமுறையில் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டாலும் பிந்தைய தகுதி இழப்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, வேட்பு மனுத் தாக்கலுக்கும், வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆவதற்கும் இடைப்பட்ட காலத்தில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளர்களைத் தேர்தலுக்கு முன்பே தகுதி இழப்பு செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம்.

மக்கள்தான் மாற வேண்டும்! சுதா ராமலிங்கம், வழக்கறிஞர், மனித உரிமைச் செயல்பாட்டாளர்.

தேர்தலை முறையாக நடத்த நம்மிடம் நிறைய சட்டங்கள் உள்ளன. அதை நடைமுறைப்படுத்து வதில்தான் தாமதங்கள், பிரச்சினைகள் உள்ளன. உதாரணமாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகக் காட்சி ஊடகங்களில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அச்சு ஊடகங்களைப் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதுபோன்ற குறைபாடுகளைக் களைய சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது.

மேலும், வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குப் பணம் அளித்தார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லாமல் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது. அதேபோல, புகார் அளித்த உடனேயே வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்துவிடவும் முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தகுதிநீக்கம் செய்ய முடியும். வெறும் சட்டத்தை வைத்து மட்டுமே நாட்டைத் திருத்திவிட முடியாது. சட்டம் ஒரு கருவிதான். எனவே, மக்களின் மன நிலையில் மாற்றம் தேவை.

திரும்பப் பெறும் உரிமை வேண்டும்! ச.பாலமுருகன், மக்கள் சிவில் உரிமைக் கழக தமிழ்நாடு, புதுச்சேரி பொதுச் செயலாளர்.

பண பலத்தால் வேட் பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலும், அவர் கடமையைச் செய்யத் தவறினாலும் அவரைத் திரும்பப் பெறும் உரிமை மக்களுக்குத் தரப் பட்டால் வேட்பாளர்கள் சற்றே சிந்தித்துச் செயல்படுவார்கள். தற்போது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் அதற்கான வழிமுறை இல்லை. எனவே, அதில் திருத்தம் கொண்டுவந்து, உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி, படிப்படியாக இதுபோன்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

இதன் மூலம், வாக்களித்துவிட்டால் ஐந்து ஆண்டுகள் எது வேண்டுமானாலும் செய்யலாம், யாரும் எதுவும் கேட்க முடியாது என்ற நிலையில் மாற்றம் ஏற்படும். தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் தாமதப்படுத்தாமல், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

தேர்தலில் பணம் கொடுப்பது என்பதை எல்லோரும் வியாதி போலவே பார்க்கிறார்கள். ஆனால், இதற்கான காரணம், ஆட்சியில் இருந்தவர்கள் லஞ்சம் ஊழலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை மீண்டும் தேர்தலில் முதலீடு செய்கிறார்கள். முறைகேடு நடக்கிறது என்று கூறி தேர்தலைத் தள்ளி வைப்பதால் எந்தப் பலனும் இல்லை. கவுன்டர் மேன்டிங் முறைப்படி தேர்தலையே ரத்து செய்யலாம். 2 அல்லது 3 தொகுதிகளில் அப்படிச் செய்யும் போது, பணப்பட்டுவாடா போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு யோசிப்பார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x