Last Updated : 11 May, 2016 09:39 AM

 

Published : 11 May 2016 09:39 AM
Last Updated : 11 May 2016 09:39 AM

தமிழகத் தேர்தலின் பிணிகள்?

இலவசங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது நடுத்தரவர்க்கத்தின் போலி அறம்

2016 தேர்தல் ஒருவிதத்தில் 2021 தேர்தலுக்கான ஒத்திகை போலவே நடக்கிறது. இந்தத் தேர்தலில் கோலோச்சும் பெரும் தலைவர்கள் பலரும் அடுத்த தேர்தலில் களத்தில் நிற்பார்களா என்பது சந்தேகமே. அடுத்த தலைமுறைத் தலைவர்கள் பலரும் இப்போது தேர்ந்தெடுத்திருக்கும் பாதை 2021 தேர்தலுக்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வதாகவே உள்ளது. தமிழக அரசியல் காண இருக்கும் யுக மாற்றங்களுக்கு இந்தத் தேர்தல் கோடி காட்டியபடி நிகழ்ந்துவருகிறது.

இத்தேர்தலில் மூன்று விஷயங்கள் முக்கியமாக விவாதிக்கப்படுகின்றன. இலவசம், ஓட்டுக்குத் துட்டு, மதுவிலக்கு. இந்த மூன்றைப் பற்றியும் கருத்தைப் பரப்பும் பத்திரிகையாளர்கள், சமூக ஊடகர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் இடையே கிட்டத்தட்ட ஒருமித்தக் கருத்து உள்ளது.

இலவசங்கள் தீமையா?

இலவசங்கள் தீமை என்பது பெரும்பாலானோரின் பார்வை. ஆனால், இலவசங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது நடுத்தரவர்க்கத்தின் போலி அறம். பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசால் கொடுக்கப்படும் பல இலவசங்களை, சலுகைகளை இவர்கள் கண்டிப்பதில்லை. அது தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதாகப் புகழப்படுகிறது. மாறாக, அடித்தள மக்களை மனத்தில்கொண்டு கொடுக்கப்படும் இலவசங்கள் மொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சீலர்களின் தீர்ப்பு. அவை மக்களைச் சோம்பேறிகள் ஆக்கிவிடுமாம்!

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துமே 1982-ல் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தைப் பள்ளிகளில் கொண்டுவந்தபோது முன்வைக்கப்பட்டவைதான். இன்று அது அகில இந்தியாவுக்கும் முன்னோடித் திட்டமாக உள்ளது. ஐ.நா.வின் நிறுவனங்கள் சத்துணவால் குழந்தைகளுக்குப் பல பிணிகள் நீங்கியதை ஆவணப்படுத்தியுள்ளன. இலவசங்கள் இரண்டு வகை. உணவு, கல்வி, மருத்துவம், மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளை எல்லோருக்கும் அளிப்பவை. இன்று தொலைக்காட்சி, கைபேசி போன்றனவும் அடிப்படைத் தேவைகளாக மாறிவிட்டன. மற்றொரு வகை, பொருளாசை காட்டி வாக்கினைக் கூலியாகப் பெற நினைப்பவை. இந்த வேறுபாட்டை வரையறுக்காமல் ‘இலவசம்’ என்று பொதுவாகக் கண்டிப்பது பொருத்தமானதல்ல.

அடிப்படை உரிமை

யோகேந்திர யாதவ் போன்ற சமூகவியலாளர்கள் தமிழகத்தில் அரிசி, பருப்பு எல்லோருக்கும் வழங்கப்படுவதை உணவுக்கான அடிப்படை உரிமை பாதுகாக்கப்படும் முன்மாதிரியாகக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதை நம் அறிவுஜீவிகள் கவனிக்க வேண்டும். வட இந்தியாவில் பஞ்ச சூழலில் இத்தகைய உணவுப் பாதுகாப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கை.

அடுத்ததாக, பெரும் கண்டனத்துக்கு ஆளாவது காசை வாங்கிக்கொண்டு வாக்கைப் போட்டுவிடும் மக்கள் கூட்டம். (இவர்களையெல்லாம் ஒண்ணுமே செய்ய முடியாது சார். தமிழ்நாட்டுக்கு விடிவுகாலமே இல்லை!) பணம் கொடுத்து வாக்கை வாங்குவது தடுக்கப்பட வேண்டியது என்பதில் ஐயம் இல்லை. ஆனால், வாக்கை வாங்க இன்னும் சில வழிமுறைகள் அமலில் உள்ளன. அவை இதே தீவிரத்துடன் கண்டிக்கப்படுவதில்லை. இதில் முக்கியமானவை அரசியல் விளம்பரங்கள். இவற்றின் வழி 90% பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், இந்த அரசியல் மோசடி சட்டவிரோதமானது அல்ல. போலிக் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு (எல்லா கருத்துக் கணிப்புகளும் போலி அல்ல) மக்கள் எண்ணங்களை மடைமாற்றம் செய்ய சில ஊடகங்கள் முயல்கின்றன. இதுவும் குற்றம் அல்ல. அரசியல் கார்ப்பரேட்டுகளிடமிருந்து ஊடகக் கார்ப்பரேட்டுகளுக்கு பாயும் கோடிகள் எதுவுமே குற்றம் அல்ல. கோடிக்கணக்கில் அரசியல் விளம்பரம் பெறும் ஊடகங்கள் பக்கச் சார்புடன் செய்தி வெளியிடும் வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு பக்கச் சார்பான செய்திகள் வெளியிட்டு, சிலவற்றை மறைத்து மக்களை ஏமாற்றுவதும் சட்டவிரோதம் அல்ல. ஆனால், மக்கள் கையில் துட்டாகக் கொடுத்தால் அது குற்றம்!

இலவசங்களால் மக்கள் வாக்கை ஈர்ப்பது நிச்சயம் அல்ல. ஊடக விளம்பரங்களால் வாக்காளர் முடிவை மாற்றுவதும் உறுதி அல்ல. அதேபோல பணத்தால் வாக்கை வாங்குவதும் உறுதி அல்ல. வாக்களிக்கும் இடம் தனிமையானது, பாதுகாப்பானது. அங்கு யாரும் யார் வழிக்கும் வருவது கல்லில் பொறிக்கப்பட்டதல்ல.

மதுவிலக்கு தீர்வா?

மதுவிலக்குக் கோரிக்கை இன்று அறிவுஜீவிகள் முதல் அரசியல் தொண்டர்கள் வரை அனைவரின் பொதுக் கோரிக்கையாகியுள்ளது. மதுவால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டுவரும் சீர்கேடுகள் பயங்கர மானவை. ஆனால், இதற்கு மதுவிலக்கு தீர்வாகுமா?

மும்பையில் மாஃபியாவின் நடவடிக்கைகள் அனைவரும் அறிந்ததே. எத்தனை கொலைகள், கொள்ளைகள், அநீதிகள்! மும்பை குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாதத்திலும் மாஃபியாவின் தாக்கம் உள்ளது. இந்த மாஃபியாவை ஊக்கப்படுத்தியதில் முக்கியப் பங்கு மொரார்ஜி தேசாய் என்ற ஊழலற்ற வறட்டு காந்தியவாதிக்கு உண்டு. நல்லெண்ணத்துடன் அவர் இயற்றிய சட்டங்கள் பெரும் கேடாக முடிந்துபோனது ஒரு நகைமுரண். 1952-ல் மதுவையும் தங்க இறக்குமதியையும் அவர் தடைசெய்ததால் வரதராச முதலியார், ஹாஜி மஸ்தான் ஆகிய இரு தமிழர்கள் பெரும் மாஃபியா தலைவர்களாக மும்பையில் உருவானார்கள். நரகத்தின் பாதை நல்லெண்ணங்களால் சமைக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்குக் கோரிக்கையை எந்த சமூகவியல், வரலாற்று, அரசியல் அறிஞரும் ஏற்க மாட்டார். அது வரலாற்றில் எங்குமே வெற்றிபெற்றதில்லை. மாறாக, பல நிரந்தரச் சீர்கேடுகளைச் சமூகத்தில் ஏற்படுத்தி வந்திருக்கிறது. பின்னர், மதுவிலக்கு நீக்கப்பட்டாலும் இந்தச் சீர்கேடுகள் நீங்குவது இல்லை. மதுவிலக்குக்கு குஜராத் முன்மாதிரியாகக் காட்டப்படுகிறது. 1949-ல் இருந்து மதுவிலக்கின் கீழ் இருந்துவரும் குஜராத்தில் (முன்னர் மும்பை ராஜதானி) இன்று அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், போலீஸார் ஆகியோரின் கூட்டாக நடக்கும் நிழல் மது விற்பனையின் அளவு ரூ. 4,000 கோடியாக மதிப்பிடப்படுகிறது.

வேண்டும் விழிப்புணர்வு

மதுவிலக்கு தமிழகத்தில் கூடுதல் ஆபத்தையும், நச்சுத்தன்மையும் கூடிய கள்ளத் தயாரிப்புகளைப் பரவலாக்கும். மதுவைக் கடத்திவந்து தேவையை நிறைவு செய்யும் மாஃபியாவை உருவாக்கும். அவை நிலைபெற்று இன்னும் பல குற்றச் செயல்களால் பெருகி வளரும். பிற போதை வஸ்துகளின் பயன்பாட்டை மதுவிலக்கு அதிகரிக்கும். குடும்ப வன்முறைக்கும் மதுவுக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்படாதது. மனைவியை அடிக்கும், அடிப்பதை நியாயப்படுத்தும் ஆண்கள் இந்தியாவிலேயே மிக அதிகமாக இருப்பது குஜராத்தில்தான். ஆணாதிக்கம் என்ற நோய்க்கு மதுவிலக்கு தீர்வாகாது! நோயை நீக்க ஆளையே தீர்த்துக்கட்டுவது போன்ற வைத்தியம் மதுவிலக்கு. மாறாக, மிகைமதுவின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு, மது அருந்துவதில் கட்டுப்பாடு, குடிநோயாளிகளுக்கு மருத்துவம் ஆகியனவையே சிறந்த வழி. விழிப்புணர்வுப் பிரச்சாரத்தால் புகைப்பிடிக்கும் பழக்கம் மட்டுப்பட்டிருப்பது கண்கூடு.

நமக்குச் சொல்லப்படும் செய்திகளை விழிப்புணர்வுடன் சிந்தித்து உள்வாங்கி சுயமாகக் கருத்துகளை உருவாக்கிக்கொள்ளத் துணிவதே இக்காலத்தின் அரசியல் தேவை.

கட்டுரையாளர், காலச்சுவடு மாத இதழின் ஆசிரியர்,

தொடர்புக்கு: kannan31@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x