

எங்கள் பகுதித் தெருக்களைத் தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாளர் அற்புத மேரிக்கு நான்கு குழந்தைகள். அவர் வசிக்கும் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பிலிருந்து காலை 5.30 - 6 மணிக்கெல்லாம் ‘பறக்கும் ரயிலில்‘ புறப்பட்டு, எங்கள் பகுதியை வந்தடைய வேண்டும்.
குழந்தைகள் அவர்களாகவே புறப்பட்டு பள்ளிக்குச் சென்றாக வேண்டும். அவருடைய சம்பளம், கணவரின் சொற்ப சம்பாத்தியத்தைக் கொண்டே நான்கு குழந்தைகள், நான்கு பெரியவர்களைக் கொண்ட அவர்களுடைய குடும்பம் வாழ்க்கையைக் கடத்துகிறது.
கைக்கும் வாய்க்குமான வாழ்க்கைதான். ஆசையாகக் கறியெடுத்துச் சாப்பிடுவதற்குக்கூடப் பலமுறை யோசிக்க வேண்டும். அற்புதத்துக்கு இந்த வேலையும்கூட 2020 அக்டோபரிலேயே கிடைத்தது. அதற்கு முந்தைய கரோனா மாதங்கள் சிம்ம சொப்பனமாகவே கழிந்தன.
அற்புதத்துக்கு மட்டுமல்ல, புத்தக விற்பனை நிலையம் ஒன்றின் கடைப் பொறுப்பாளராக இருக்கும் ராஜுவுக்கும் இதே நிலைதான். தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கராக இருக்கும் கண்ணன், ஜெராக்ஸ் கடை ஒன்றில் டைப்செட்டிங்-வடிவமைக்கும் பணியிலுள்ள மனோகர் ஆகியோரின் சம்பளமும் இவர்களைவிட மேம்பட்ட நிலையில் இல்லை. இப்படி இந்தியாவின் பெரும்பாலான தொழிலாளர்கள் மாதம் ரூ.25 ஆயிரம்கூடச் சம்பளம் பெறுவதில்லை.
‘இந்திய மக்கள்தொகையில் மேல்தட்டில் உள்ள 10 சதவீதம் பேர் மட்டுமே மாதத்துக்கு ரூ.25,000 வருமானம் பெறுகிறார்கள்’ என்று ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் காம்படிடிவ்னெஸ்’ அளித்த ‘இந்தியாவில் சமத்துவமின்மை’ (State of Inequality) அறிக்கை தெரிவிக்கிறது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, கடந்த மாதம் வெளியானது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அதிகம் நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு. கிட்டத்தட்ட பாதி மக்கள்தொகை நகர்ப்புறங்களிலேயே வாழ்கிறது. நகர்ப்புறத்தில் பெரும்பாலோர் வசிக்கும் வீட்டுக்கான வாடகை, அலுவலகம்-பள்ளி போன்றவற்றுக்குச் சென்றுவருவதற்கான போக்குவரத்து, உணவு போன்றவை கணிசமான அளவு செலவு பிடிக்கக்கூடியவை.
நகர்ப்புற வாழ்க்கை என்பது நடுத்தர வர்க்கத்தினரையும் அதற்கும் கீழ் நிலையில் இருப்பவர்களையும் ஓர் இக்கட்டான நிலையிலேயே வைத்திருக்கிறது. பண வீக்கம், உணவுப்பொருள் விலையேற்றம் - அது சார்ந்த பணவீக்கம் போன்றவை இவர்களைக் கடுமையாகப் பாதிக்கும். இந்தப் பின்னணியில் மாதம் ரூ.25 ஆயிரம்கூடச் சம்பாதிக்காத ஒருவரது குடும்பம் எப்படி அடிப்படை வசதிகளுடன் ஆரோக்கியமாக வாழ முடியும்?
கடும் ஏற்றத்தாழ்வு
உலகின் செல்வ வளம், பரவல் குறித்த அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிட்டுவரும் தன்னார்வ நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் இன்டர்நேஷனல் ‘வலியிலிருந்து லாபம்’ என்னும் தலைப்பிலான ஆண்டு அறிக்கையைக் கடந்த மாதம் வெளியிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் செல்வ வளம் எப்படியிருந்தது என்று இந்த அறிக்கை ஆராய்ந்திருக்கிறது.
உலகம் எந்த நெருக்கடியை எதிர்கொண்டாலும் அதிலிருந்து யாரோ சிலர் பெருமளவு லாபம் பெற்றுவருகிறார்கள். அதே நேரம் ஏற்கெனவே ஏழைகளாக இருப்பவர்களை மேலும் ஏழைகளாக்கி, வறுமையின் பிடியிலிருந்து வெளிவர முடியாத வகையில் கரோனா பெருந்தொற்று தள்ளியுள்ளது.
உலகக் கோடீஸ்வரர்களின் (billionaires) சொத்து முந்தைய 2018, 2019-ம் ஆண்டுகளைவிட 2020, 2021-ல் கூடுதலாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 573 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறார்கள். பெருந்தொற்றுக் காலத்தில் அதிகம் லாபமடைந்த தொழில் நிறுவனப் பிரிவுகள் ஆற்றல், உணவு, மருந்து உற்பத்தி. நகைமுரணாக இந்த மூன்று துறைகளும்தான் பெருந்தொற்றுக் காலத்தில் நெருக்கடியை எதிர்கொண்டன.
ஆனால், இதுவரை இல்லாத வகையில் அதிக லாபத்தை அந்தக் காலத்தில் இந்த நிறுவனங்களே சம்பாதித்துள்ளன. “பெருந்தொற்று காரணமாக உணவு, ஆற்றல் செலவினங்கள் அதிகரித்துள்ளது செல்வந்தர்களுக்கு லாபமாக மாறியுள்ளது” என்கிறார் ஆக்ஸ்ஃபாம் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் கேப்ரியேலா புஷ்ஷர்.
உலகம் பொது முடக்கத்திலும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் இருந்த காலத்தில் உணவு, ஆற்றல் துறை சார்ந்த கோடீஸ்வரர்கள் ஒவ்வொரு இரண்டு நாளைக்கும் 100 கோடி அமெரிக்க டாலர்களை லாபமாகச் சம்பாதித்துவருகிறார்கள்.
பெருந்தொற்றுக்குப் பிறகு 40 புதிய மருந்து உற்பத்தி நிறுவனக் கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறார்கள். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான மாடர்னா, ஃபைசர் ஆகியவை ஒவ்வொரு விநாடியும் 1,000 அமெரிக்க டாலர் லாபமாகப் பெறுகின்றன. ஆனால், இந்தத் துறைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் சம்பளங்களோ எந்த வகையிலும் உயரவில்லை.
எனவே, ஒருபுறம் நிறுவன முதலாளிகள் பெரும் லாபம் பெற்றாலும் பொருளாதார நெருக்கடியின் சுமை என்னவோ ஏழைகள், விளிம்புநிலையில் உள்ளவர்கள் தலையிலேயே விழுந்திருக்கிறது.
இதே காலத்தில் உணவுப் பொருட்களின் விலை, மருத்துவக் கட்டணம், வாழ்வாதார இழப்பு, ஒட்டுமொத்த வருமான இழப்பு காரணமாக 26 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு ஒன்றரை நாளுக்கும் 10 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படுகிறார்கள் என்கிறது ‘டவுன் டு எர்த்’ இதழில் ரிச்சர்ட் மகாபாத்ரா எழுதியுள்ள கட்டுரை.
இந்திய நிலைமை
இந்திய மக்கள்தொகையைப் பொறுத்தவரை மேல்தட்டில் உள்ள 10 சதவீதத்தினரின் மொத்த சம்பாதியத்தையே அடித்தட்டில் வாழும் 64 சதவீதத்தினர் வருமானமாகப் பெறுகிறார்கள். நாட்டின் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு 10 சதவீதத்தினருக்கு மட்டுமே செல்கிறது.
இப்படியாக பணக்காரர்கள்-ஏழைகள் இடையிலான வருமான ஏற்றத்தாழ்வு உலக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவிலும் மிகப் பெரிதாக வளர்ந்துகொண்டே வருகிறது. கரோனா பெருந்தொற்று அதை மேலும் மோசமாக்கியுள்ளது.
இந்தியக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகக் கோடீஸ்வரர்கள் வாழும் நாடு இந்தியா. 2022 நிதியாண்டில் மட்டும் இவர்களுடைய சொத்து 26 சதவீதம் வளர்ந்துள்ளது. இவர்களில் 18 பேர் உலகின் முதன்மை 500 கோடீஸ்வரர்களின் பட்டியலிலும், முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும் உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். ஒரு வளர்ந்துவரும் மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த 18 கோடீஸ்வரர்கள் உலகப் பட்டியலில் இடம்பிடிக்க முடிகிறதென்றால், தவறு எங்கே நிகழ்கிறது? நாட்டின் வளர்ச்சி யாருக்குப் பலனளிக்கிறது என்கிற கேள்வி எழுவது இயல்பு.
பொருளாதார வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்கிறோம். பொருளாதாரம் முந்தைய ஆண்டுகளைவிட வளர்ந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருக்கும் பொருளாதார வசதியற்றவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகி இருக்கின்றனவா? “அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் சென்று சேர்வதைத் தடுத்து, நிலவிவரும் ஏற்றத்தாழ்வை மறைப்பதற்குப் பொருளாதாரம் சார்ந்த வளர்ச்சி பெரும்பாலான நேரம் பயன்படுகிறது” என்கிறார் பாரிஸ் பொருளாதாரப் பள்ளியில் செயல்பட்டுவரும் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் இணை இயக்குநர் லூகாஸ் சான்செல்.
பரம்பரைச் சொத்தாகப் பணமும் நிலமும் கிடைப்பதே பொதுவானதொரு பிம்பமாக இருக்கிறது. ஆனால், ஏழைகள் வறுமையையே தங்கள் வாரிசுகளுக்கு பரம்பரைச் சொத்தாக விட்டுச்செல்கிறார்கள். உலக மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 50 சதவீதம் பேருக்கு பிறக்கும்போது எந்தச் சொத்துமே கிடையாது.
இறக்கும்போதும் அதே நிலையே தொடர்கிறது. இந்தப் பின்னணியில்தான் அரசின் நேரடிப் பண உதவிகள், வருமான உத்தரவாத வாய்ப்புகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பொருளியல் நிபுணர்களும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் வலியுறுத்திவருகின்றனர். இந்திய அரசமைப்பில் ஒருவர் இந்நாட்டில் வாழ்வதற்கான உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதைக் காப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்தாக வேண்டிய தருணமிது.
- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in