Last Updated : 29 May, 2016 11:05 AM

 

Published : 29 May 2016 11:05 AM
Last Updated : 29 May 2016 11:05 AM

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவில் இருப்போம்! - ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் பேட்டி

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன், இந்தியாவை ஒரு சிறந்த முதலீட்டுக் களமாகவும் பார்க்கிறது. நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, பெங்களூருவிலும் ஹைதராபாதிலும் தொழில்நுட்ப மேம்பாட்டுச் சேவை மையங்களைத் தொடங்கியிருப்பது ஒரு தொடக்கம்தான் என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில் வணிகத்தை விரிவுசெய்வதில் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார். அவருடனான பேட்டி:

இந்தியா வந்திருக்கும் நீங்கள், தொழிலதிபர்கள், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களைச் சந்தித்திருக்கிறீர்கள். இந்தச் சந்திப்புகள் எப்படி இருந்தன? என்ன கற்றுக்கொண்டீர்கள்?

இந்தச் சந்திப்புகள் எனக்கு மிகச் சிறந்த கற்றல் அனுபவத்தைத் தந்தன. இந்தியர்களைப் பற்றியும், கலாச்சாரத்தைப் பற்றியும், வணிகம் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினேன். எந்த விஷயங்களில் மாற்றம் ஏற்படுகிறது, அந்த மாற்றத்துக்குத் தூண்டுதலாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்துகொள்ளவும்தான். இந்தியாவில் தொலைத்தொடர்பு வலைப்பின்னல்களைப் பற்றிப் புரிந்துகொள்ள விரும்பினேன். குறிப்பாக, 4ஜியின் வருகை தொடர்பாக. தொலைத்தொடர்பு வலைப்பின்னல் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தேன். 4ஜியின் வருகை மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

படைப்பூக்கச் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் நீண்டகாலம் பணியாற்றியிருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் மீது கவனம் செலுத்தினோம். இந்தியாவில் பல விஷயங்கள் என்னை ஈர்த்திருக்கின்றன. ஆனால், என்னை மிகவும் கவர்ந்தது மக்களின் அன்புதான்.

ஸ்டீவ் ஜாப்ஸ் தனது பதின்ம வயதில் இந்தியாவுக்கு வந்த விதம் பற்றியும், அந்த அனுபவம் கசப்பானதாகவும், தொந்தரவு தரக்கூடியதாகவும் இருந்ததாக அவர் உணர்ந்தது பற்றியும், அதனால் இந்தியா பக்கமே அவர் வராதது பற்றியும் நிறைய கதைகள் உண்டு. இந்தியாவைப் பற்றி ஸ்டீவ் ஜாப்ஸ் கொண்டிருந்த பார்வையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியா தொடர்பாக என்னிடம் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன விஷயங்கள் முற்றிலும் வேறானவை. அந்தக் காலகட்டத்தில் தனது வாழ்க்கையில் உத்வேகத்தையும், நோக்கங்களையும் தேடிக்கொண்டிருந்தார். அவர் இந்தியா வந்தது அதற்காகத்தான். இந்தியாவில் அவர் பெற்ற அனுபவங்கள் பல ஆண்டுகளுக்கு அவரை வழிநடத்தின. அத்தனை விஷயங்களை இங்கு கற்றுக்கொண்டார். இந்தியக் கலாச்சாரத்தையும், இந்திய உணவையும் நேசித்தார்.

ஆனால், கடந்த காலங்களில் இந்தியாவைப் பற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் பார்வையில் பெரிய அக்கறை இல்லை. ஆப்பிள் நிறுவனத்துக்குப் பயன்தராத இடமாகவே இந்தியா பார்க்கப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இந்தியாவுக்கு வருவதற்கு 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியிருக்கிறது…

ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, நீடித்திருப்பதுதான் தொடக்கத்தில் முக்கிய விஷயமாக இருந்தது. ‘மேகின்டோஷ்’கணினி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஐமேக், ஐபுக்ஸ் போன்றவற்றின் தயாரிப்பிலேயே பல ஆண்டுகள் கழிந்தன. ஐபாட் கொண்டுவரப்பட்டது ஆப்பிள் நிறுவனத்துக்கு மற்றொரு பொறுப்பைத் தந்தது. அதன் பிறகு, ஐபோன் கொண்டுவந்தோம். எந்தெந்த நாடுகளில் ஐபோனுக்கான சந்தையை விரிவுபடுத்தலாம் என்று பார்க்க ஆரம்பித்தோம்.

இந்தியாவின் தெரிவுகளும், ஆப்பிளின் தெரிவுகளும் ஒரே நிலையில் இருக்கும் இந்தச் சூழல், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான நல்ல தருணமாகத் தெரிகிறது. நான் சந்தை அடிப்படையில் மட்டும் இதைச் சொல்லவில்லை. எங்கள் தயாரிப்புகளை இந்தியாவில் விற்க விரும்புகிறோம். அதேசமயம், அபாரமான திறமைகளின் மூல ஊற்றாக இந்தியாவைப் பார்க்கிறோம். எங்களுக்கு மட்டுமல்ல; சுற்றுச்சூழலுக்கும் தேவையான திறமைகள் கொண்ட நாடு இந்தியா. ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியக் கிளைகளில் ஆயிரக்கணக்கான மென்பொருள் மேம்பாட்டாளர்கள் பணிபுரிகிறார்கள். அந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இந்தியாவில் பல கோடிப் பேர் ‘ஆப்பிள்’ தயாரிப்புகளைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள். சில லட்சம் பேர்தான் அவற்றைப் பார்த்திருப்பார்கள். மிகக் குறைவான எண்ணிக்கையிலான, சற்று வசதியான மக்கள்தான் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியர்கள் மத்தியில் ஆப்பிள் தயாரிப்புகளின் தாக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எங்களைப் பொறுத்தவரை சிறந்த பொருட்களைத்தான் தயாரிக்கிறோம்; மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தயாரிப்புகளையே உருவாக்குகிறோம். அதைச் செய்யும்போது உலகை ஆக்கபூர்வமான வகையில் மாற்றுகிறோம். ஆப்பிள் நிறுவனத்துக்கான எளிய விளக்கம் இதுதான்.

இந்தியா ஒரு கடினமான சந்தை. நுகர்வோரின் வாங்கும் திறன், சில்லறை விநியோக வலைப்பின்னல், தகவல் தொடர்பு வலைப்பின்னல் ஆகியவற்றைப் பொறுத்தவரை இந்தியா வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்ட நாடு. இந்தியாவில் உங்கள் அணுகுமுறையில் என்ன வித்தியாசம் இருக்கும்?

நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம். முற்றிலும் வித்தியாசமான விஷயங்கள் இங்கு உள்ளன. ஆனால், வித்தியாசமானவற்றைவிட பரிச்சயமான விஷயங்கள் அதிகம். எங்கள் நோக்கம் வித்தியாசமானவற்றில் கவனம் செலுத்துவதுதான். பரிச்சயமானவற்றைத் தேடுவது அல்ல. நாங்கள் பொறுமைசாலிகள். ஏதோ சில வாரங்களுக்கு நாங்கள் இந்தியாவில் இருக்கவில்லை. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நாங்கள் இந்தியாவில் இருக்கப்போகிறோம்.

இந்தியாவில் ஒழுங்குமுறை தொடர்பான அமைப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள், குறிப்பாக, சான்றளிக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட போன்களை நீங்கள் இந்தியாவில் கொண்டுவருவதற்கு அதிகாரிகள் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது பற்றி? அத்துடன், இந்திய எல்லை வரைபடம் தொடர்பான மசோதாவும் உங்கள் சேவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

நான் சந்தித்துப் பேசிய மக்கள் திறந்த மனதுடன் என்னிடம் பேசினார்கள். சரியான விஷயங்களைச் செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். மாற்றுக் கருத்துகளைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள். எங்கள் கருத்துகள் கேட்கப்படும் என்றும் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நாங்கள் சான்றளிக்கப்பட்ட - பயன்படுத்தப்பட்ட போன்களை விற்கிறோம். உத்தரவாதத்துடன், ஒரு புதிய போனைப் போலவே அவை விற்கப்படுகின்றன.

சரியானவை அல்ல என்று கருதும் எந்த ஒரு தயாரிப்பையும் நாங்கள் ஒருபோதும் விற்க மாட்டோம். சான்றளிக்கப்பட்ட - பயன்படுத்தப்பட்ட போன்களின் விஷயத்தில், அதைப் பற்றித் தெளிவாகப் பேசி, ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவோம் என்று நம்புகிறோம். எல்லை வரைபடத்தைப் பொறுத்தவரை அதன் குறிக்கோள் தொடர்பாக எனக்குச் சரியாகத் தெரியவில்லை. எனினும், இந்திய அதிகாரிகள் உதவிகரமானவர்களாகவும் துரிதமாக இயங்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதில் தெளிவாக இருக்கிறார்கள். அப்படியே பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை அவர்களால் சரி செய்ய முடியும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அபிமானத்துக்குரிய திட்டம் ‘மேக் இன் இந்தியா’. அந்த அடிப்படையில், உற்பத்தி தொடர்பாக நீங்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேசிவருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது உண்மைதானா?

சிறிது காலத்துக்குப் பிறகு பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம் அது. எனது இந்தியப் பயணத்தைப் பொறுத்தவரை, நாங்கள் மேப்ஸ் சென்டரில் கவனம் செலுத்துகிறோம். அடுத்த சில ஆண்டுகளில் 4,000 பேர் அதன் மூலம் வேலை பெறுவார்கள். அப்புறம், பெங்களூருவில் ஆப்ஸ் ஆக்ஸலரேட்டர் நிறுவனம். மென்பொருள் மேம்பாட்டாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் இது பலனளிக்கும். குறிப்பிட்ட துறை என்றில்லாமல், அமெரிக்காவுக்கு வெளியே ஒரு கூட்டாளியாகத்தான் இந்தியாவைப் பார்க்கிறோம். உற்பத்தி என்பதைப் பற்றி தர்க்கரீதியாக நாங்கள் பரிசீலிப்போம்.

உங்களை உற்சாகப்படுத்தும் விஷயங்கள், கவலைப்பட வைக்கும் விஷயங்கள் எவை?

மனித குலத்துக்குத் தொழில்நுட்பம் பெருமளவில் உதவுவது எனக்கு உற்சாகம் தரும் விஷயம். தொழில்நுட்பத்தின் ஆரம்ப கட்டத்திலேயே சுகாதாரம், கல்வி போன்ற விஷயங்களில் பெரிய அளவில் பயன்படுவதையும், அவற்றை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதையும் பார்க்கிறோம். மக்கள் நீண்டகாலம் வாழ்வதற்கும், நிறைய சந்தோஷங்களைப் பெறுவதற்கும், படைப்பூக்கத்துடன் இருப்பதற்கும் நம்மால் உதவ முடியும் என்றால், உலகத்தில் பெரும் மாறுதலைச் செய்ய முடியும். தொழில்நுட்பத்தின் காரணமாக, தூக்கத்தை இழக்க நேர்வது கவலை தருகிறது. எனினும், நீண்டகால அடிப்படையில் நான் மிகவும் நம்பிக்கையுடனேயே இருக்கிறேன். இவையெல்லாம் வேகத் தடைகள்தான். நிரந்தரமான பிரச்சினைகள் அல்ல.

4ஜி வலைப்பின்னல் பற்றிச் சொன்னீர்கள். ஆனால், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் வலைப்பின்னலை இன்னும் மேம்படுத்தும் விஷயத்தில் தங்கள் பங்கை ஆற்றிவருகின்றன. ஆப்பிள் நிறுவனமும் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறதா?

நான் சில வலைப்பின்னல் நிறுவனத்தார்களைச் சந்தித்திருக்கிறேன். பெரிய அளவிலான முதலீடுகளும், நுட்பமான பொறியியல் பணிகளும் நடந்துவருவதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. ஆண்டின் கடைசியில் 4ஜியின் பயன்பாடுகளால் நாம் பெரிய மாற்றத்தைச் சந்திக்கப்போகிறோம் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். வலைப்பின்னல் நிறுவனத்தார்களுக்கு ஆதரவு தருவது இந்தியாவின் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இதுவரை ஆப்பிள் நிறுவனத்தால் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையே?

தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக்கொள்வது முக்கியமானது. ஏனெனில், வியக்கத்தக்க சாதனங்களும் வியக்கத்தக்க வலைப்பின்னல்களும் இணைந்த கலவை என்பது நுகர்வோரிடம் நம்ப முடியாத தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ஆனால், ஒழுங்குமுறை எனும் விஷயத்துக்கே நாம் மீண்டும் செல்ல வேண்டியிருக்கிறது. அமெரிக்கா அல்லது ஜப்பான் அல்லது சீனாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போன்களை விற்கவும் செய்கின்றன. இங்கே அப்படி அதிகமாக நடக்கவில்லை. வரி அமைப்பு முறை செயல்படும் விதம் அப்படி. என்னைவிட உங்களுக்கு இது நன்றாகத் தெரியும். எனினும், இதுவரை எனக்குக் கிடைத்த எதிர்வினைகள் மிகவும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் உள்ளன.

இந்தியாவின் எதிர்காலத் திறன் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் நீங்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆப்பிள் விஷயத்தில் சீனாவைப் போல் இந்தியாவும் உருவாகுமா?

நிச்சயம். ஆனால், இந்தியா மற்றவர்களைப் போல் மாற முயற்சிக்கக் கூடாது. ஏனெனில், இந்தியா என்றைக்குமே சிறந்த நாடுதான். பன்முகக் கலாச்சாரமும், மக்களின் அன்பும் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். ஆக்கபூர்வமான பல விஷயங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன. மேலும் நிகழவிருக்கின்றன. ஜிடிபியின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியா புதிய சாதனைகளைப் படைக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அதற்கான எல்லாக் கூறுகளும் இந்தியாவிடம் இருக்கின்றன!

‘தி இந்து’ (ஆங்கிலம்),
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x