Published : 18 May 2016 10:30 AM
Last Updated : 18 May 2016 10:30 AM

கடலில் இட்ட கலம்

லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராமின் மறைவு மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்குப் பெரும் இழப்பு

ஆங்கிலத்தில் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராமால் மொழி யாக்கம் செய்யப்பட்ட, என்னுடைய ‘காட்டில் ஒரு மான்' எனும் தொகுப்புக்கு முன்னுரை எழுத எனக்கு அனுப்பப்பட்டபோது, மொழியாக்கம் குறித்த என் எண்ணங்களை அதில் இவ்வாறு எழுதியிருந்தேன்:

கதைகளின் மொழியாக்கத்தை எதிர்கொள்வது ஒரு விநோதமான அனுபவம். கதாபாத்திரங்கள் வேறு விதமாகத் தெரிகிறார்கள்; காட்சிகளும் பிம்பங்களும் மாறியிருக்கின்றன; நாம் கற்பனை செய்த வண்ணங்கள் அதில் இல்லை; சொற்களின் தொனி மாறுபட்டிருக்கிறது. மொழியாக்க மொழியினுள் மெல்ல ஒருவாறு நுழைந்த பின்தான், நம் கதைகள் வேறு வகையில் கட்டப்பட்டு, பின்னர் சிறகுகளைப் பூட்டிக்கொண்டு, இரு மொழிகளின் இடையே உள்ள தூரத்தைக் கடப்பது தெரிகிறது. மீன் பிடிக்கும் படகை மெள்ளக் கடலில் தள்ளுவதுபோல, மொழியாக்கம் ஒரு கதையை இன்னொரு மொழியின் பெருங்கடலில் மென்மையாக இடும்போதுதான் ஒரு கதை இன்னொரு மொழியில் உருவாகும் அந்த மாயம் சாத்தியமாகிறது.

என் தோழி லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராமிடம் அந்த மென்மை இருக்கிறது. அவரிடமிருந்து என் கதைகள் எனக்கு வரும்போது, முதலில் அவை பரிச்சயம் இல்லாதவை போல் தோன்றினாலும் பிறகு அவை என்னுடையவைதான் என்று உணரும் மந்திரக் கணமும் நேர்கிறது. இந்த மாயத்தைத் தொடர்ந்து சாத்தியப்படுத்துகிறார் லக்ஷ்மி.

என் ‘மஞ்சள் மீன்’கதையைத்தான் முதலில் லக்ஷ்மி மொழியாக்கம் செய்தார். அதன் பின் 1992-லிருந்து என் கதைகள் மூன்று தொகுப்புகளாக ஆங்கிலத்தில் வெளிவந்தன, அவர் மொழியாக்கத்தில். இதற்கிடையே அவர் செய்த மற்ற மொழியாக்க வேலைகள் மலைப்பைத் தரும். செவ்வியல் ஆக்கங்கள், மௌனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ந.முத்துசாமி ஆகியோரின் எழுத்துகள் எனத் தொடங்கி, இமையத்தின் கோவேறு கழுதைகள், பாமாவின் கருக்கு, சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி, ஷர்மிளா செய்யத் போன்ற இளம் எழுத்தாளர்களின் எழுத்துகள், சேரனின் கவிதைகள் என இடையறாத மொழியாக்க வேலையில் அவர் மூழ்கியிருந்தார்.

மொழி நுணுக்கம்

சங்க காலம் முதல் தற்காலம் வரையான கவிதைகளை சுப கிருஷ்ணசாமியுடனும் கே லதாவுடனும் அவர் கொண்டுவந்தபோது, எவ்வளவு நுணுக்கமாக அவர் மொழியை அணுகுகிறார் என்பது புரிந்தது பலருக்கு. சங்க காலப் பாடல்கள், பாம்பாட்டிச் சித்தரின் பாடல், கம்ப ராமாயணத்தின் ஒரு பகுதி, இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் தற்காலக் கவிதைகள் என ஒரு பெரிய மொழிவெளிக்கான கதவுகளை ஆங்கில மொழி அறிந்தவர்களுக்கு அந்தப் புத்தகம் திறந்துவிட்டது.

பிறகு, கவிதைகளிலிருந்து மீண்டும் புனைகதைகளுக்கு ஒரு பாய்ச்சல். சுந்தர ராமசாமியின் குழந்தைகள், பெண்கள் ஆண்கள் நாவலை மொழியாக்கம் செய்தார். இத்தனை மொழியாக்க வேலைகளிடையே பல கருத்தரங்குகளில் தமிழ்க் கதைகளைப் பற்றிப் பேசியும், தமிழில் எழுதும் எழுத்தாளர்களைக் கருத்தரங்கங்களுக்கு அழைத்து உரையாடல்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டினார். தமிழ் எழுத்துக்கு உலக அங்கீகாரம் சிறப்பாக அமைய வேண்டும், அதற்கான எல்லாத் தகுதிகளும் தற்காலத் தமிழ் எழுத்துக்கு உண்டு என்று தீவிரமாக நம்பினார். கடைசிக் காலம் வரை அதற்காக உழைத்தார். மே மாதம் ஆறாம் தேதி அவர் மறைந்தபோது, இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலின் ஆங்கில மொழியாக்கத்தின் படிகளைத் திருத்திக்கொண்டிருந்தார் இரண்டாம் பதிப்புக்காக. இன்னும் முப்பது பக்கங்கள்தாம் மீதியிருந்தன திருத்த.

மொழிகளின் அதிகாரப் படிநிலை

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் நடைபெறும்போது, குறிப்பிட்டுச் சொன்னால், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்படும்போது எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் இவர்களிடையே அதிகாரப் படிநிலை ஒன்று உருவாகிறதா, எழுத்தாளருக்கு முதுகில் தட்டிக்கொடுத்து ஆதரவளிக்கும் உணர்வு ஏற்படுகிறதா, அதனால் உறவுச் சிக்கல்கள் ஏற்படுகின்றனவா, ஆங்கில மொழி மூலம் உலகம் அறிந்த எழுத்தாளராக மாற, மொழியாக்கத்துக்காகச் சில சமரசங்களைச் செய்ய நேருகிறதா, மொழியாக்கம் நடைபெறும்போது எழுத்தாளர் -மொழிபெயர்ப்பாளர் இடையே இழுபறி ஏற்படுகிறதா என்னும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை.

லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராமைப் பொறுத்தவரை அவர் இந்தப் பிரச்சினைகளை மென்மையாக எதிர்கொண்டார். அந்தப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. காரணம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது ஒரு பதவி உயர்வு போலத்தான் பார்க்கப்பட்டது; பார்க்கப்படுகிறது. ஆங்கில வாசகர்களின் உலகை எட்டும்போதுதான் இந்தியாவில் க்ராஸ்வர்ட் பரிசு, வெளிநாட்டில் புக்கர் பரிசு, நோபல் பரிசு போன்ற கனவுகள் நிறைவேறுவது சாத்தியம். அதைச் சாத்தியப்படுத்துவது மொழிபெயர்ப்பாளர்தான். பலர் மொழிபெயர்ப்பாளரிடம் கதையை ஒப்படைத்துவிட்டு ‘என் எழுத்து, உலகை எட்ட வேண்டும்; உங்கள் விருப்பப்படி இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யுங்கள்’ என்று பூரண அனுமதி கொடுத்துவிடுவார்கள். இது மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுக்கப்படும் அளவற்ற அதிகாரம். இந்த அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்யாத, ‘ஆசிரியர் மரணித்துவிட்டார்’என்ற நோக்கில் பிரதியை அணுகாத மொழிபெயர்ப்பாளர்கள் வெகு குறைவு. லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராம் இந்தத் தீ மிதிக்கும் வேலையை வெகு கவனமாகச் செய்தார். பிரதியின் முழுமையைக் குலைக்கக் கூடாது என்று வெகு கவனமாகச் செயல்பட்டார்.

எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர் உறவு

இருந்தாலும் எனக்கும் அவருக்கும் பல உரசல்கள் நேரத்தான் செய்தன. சில சொற்களைச் சிறிது மாற்றி, ‘இல்லாவிட்டால் ஆங்கில வாசகர்களுக்குப் புரியாது’ என்று அவர் சொல்லும்போது, ‘தமிழ் வாசகர்களுக்குப் புரிகிறதே? ஆங்கில வாசகர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? அவர்களும் கொஞ்சம் யோசிக்கட்டுமே? லட்டு மாதிரி வாயில் ஏன் நாம் போட வேண்டும் ஒரு தமிழ்க் கதையை?’ என்று நான் அவரிடம் விவாதித்ததுண்டு! இவ்வாறு சண்டையும் சச்சரவும் அன்பும் நட்பும் கலந்துதான் என்னைப் பொறுத்தவரையில் மொழியாக்கம் நடைபெற வேண்டும். இல்லாவிட்டால் மூல மொழி தன் அதிகாரத்தையும் ஆளுமையைம் இழந்து ஆங்கில மொழிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிடும். இப்படி நேராமல் தடுப்பதுதான் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பு. இந்தப் பொறுப்பைத் தன்னளவில் முடிந்த வரை செம்மையாகச் செயல்படுத்தியதோடு அல்லாமல் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளரையும் தன் பொறுப்பை எந்தத் தடங்கலும் இல்லாமல் செய்வதற்கான வழியையும் விட்டவர் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராம்.

ஆங்கில மொழிக் கடலில் இட்ட கதை என்னும் கலம் சில சமயம் எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் இருவரிடையே நேரும் மோதல்களில் தடுமாறும். ஆனால் உடனே அதற்கான பாய்மரத்தை ஏற்றி அதை முழுகாமல் காப்பாற்றும் வேலைகளைச் செய்துவிடுவார் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராம். அவர் தொடர்ந்து மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட இவ்வாறு பாய்மரத்தை ஏற்ற அவர் தயங்காததும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

- அம்பை, எழுத்தாளர். தொடர்புக்கு: cslakshmi44@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x