Published : 25 May 2016 09:23 AM
Last Updated : 25 May 2016 09:23 AM

குமரியில் மத அரசியல்

மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையுமே திமுக, காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளதைத் தமிழகம் அறியும். அரசியல் அரங்கம் கவனம் அளிக்க வேண்டிய விஷயம், இந்த முறை குமரி எப்படி வாக்களித்தது என்பது. பாஜக இங்கு நான்கு தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் 134 தொகுதிகளை வாரிச் சுருட்டிய அதிமுக, குமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டதோடு வைப்புத்தொகையையும் இழந்தது. இடதுசாரிகள் உருவாக்கிய தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா, 6 தொகுதிகளிலும் வைப்புத்தொகையைப் பறிகொடுத்துள்ளது.

இந்தத் தேர்தலில் குமரியில் மதம் முக்கியப் பங்கு வகித்தது. இன்னும் சொல்லப்போனால், பெரும்பான்மையினரை ஒரு தரப்பாகவும் அனைத்து மதச் சிறுபான்மையினரையும் ஒரு தரப்பாகவும் நிறுத்தும் விதமாகவே பிரச்சார உத்திகள் அமைந்தன. தேர்தல் முடிவுகள், பாஜக தன்னுடைய உத்தியில் பெருமளவில் வெற்றிபெற்றிருப்பதை உணர்த்துகின்றன. ஒரு மாவட்டத்தின் செய்தி அல்ல இது; தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் அடுத்த அரசியல் சுழலின் தொடக்க மையம்!

மையமாக பாஜக

தமிழகத்திலேயே நான்கு திணைகளும் ஒருங்கமைந்த மாவட்டம், படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம், இன்னும் எத்தனையோ சிறப்புகளைக் கொண்ட மாவட்டம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் குமரி மண்ணின், சமகாலச் சங்கடமான அடையாளங்களில் ஒன்று மத அரசியல்.

குமரி மாவட்டத் தேர்தல் களத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்துக்கும் மேற்பட்ட பிரதான கட்சிகள், பதினைந்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இங்கே ஒரே நிலைப்பாடே தேர்தலைத் தீர்மானித்தது. சிறுபான்மையினருக்கு பாஜக வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதும், பாஜகவுக்கு தனது கணக்கைக் குமரியில் உறுதிப்படுத்த வேண்டும் என்பதும்தான் அது.

மண்டைக்காடு கலவரத்துக்குப் பின், சங்கப் பரிவாரங்கள் குமரி மாவட்டத்தில் பெரும் வளர்ச்சி பெற்றன. சிறுபான்மையினர் வாக்குகளைக் குறிவைத்து ஏனைய கட்சிகள் அரசியல் நடத்த ஆரம்பித்தபோது, பெரும்பான்மையினரை மதரீதியாக ஒருங்கிணைத்து, அவர்களின் பிரதிநிதியாக பாஜகவை முன்னிறுத்தத் தொடங்கின சங்கப் பரிவாரங்கள். இதன் விளைவு, பாஜகவை மையமாக வைத்தே குமரியின் தேர்தல் களம் இயங்குகிறது.

மையமாக மதம்

குமரியின் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்களித்தவர்கள், ஆட்சி மீதான விருப்பு - வெறுப்பில் மட்டுமே வாக்களித்தவர்கள் அல்ல. இந்துக்களுக்கான கட்சி என்று தன்னை முன்னிறுத்தியே குமரியில் பிரச்சாரத்தை முன்னெடுத்தது பாஜக. மறுபுறம், சிறுபான்மை இன மக்கள் குழப்பமில்லாமல், சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பகிரங்கமாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இவை இரண்டு தரப்புக்கும் இடையில் அடிபட்டு நொறுங்கிப்போயின ஏனைய கட்சிகள். அவர்களால் கட்சி ஓட்டுக்களைத் தாண்டி, ஒரு அடிகூட நகர முடியவில்லை.

பத்தாண்டுகளாகவே குமரியில் இந்த அணுகுமுறை தொடர்கிறது. 2006 சட்டசபைத் தேர்தலில் குமரி மாவட்டத்தின் அத்தனை தொகுதிகளையும் காங்கிரஸ் - திமுக கூட்டணியே வென்றது. 2009 மக்களவைத் தேர்தலிலும் இக்கூட்டணி வேட்பாளரே வென்றார். 2011 சட்டசபைத் தேர்தலில், தமிழகம் முழுவதும் காங்கிரஸ், திமுக எதிர்ப்பு அலை வீசியபோதும் குமரியின் ஆறில் நான்கு தொகுதிகளை காங்கிரஸ் -திமுக கூட்டணி கைப்பற்றியது. 2014 மக்களவைத் தேர்தலில், இந்த இரு கட்சிகளின் கூட்டணி பிரிந்ததால், சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் சிதறின. இந்தத் தேர்தலில், திமுக வைப்புத்தொகையை இழக்க, காங்கிரஸ் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட… பாஜக வென்று, பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆனார்.

2016 தேர்தலில் மீண்டும் காங்கிரஸ், திமுக கூட்டணி அமைந்த சூழலில், மீண்டும் கூட்டணி எல்லா இடங்களையும் வென்றிருக்கிறது. பிரச்சினை யார் ஜெயிக்கிறார்கள் / தோற்கிறார்கள் என்பதில் அல்ல; மதத்தை மையமாக வைத்தே தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதே.

இந்தத் தேர்தலிலும் அதுவே நடந்துள்ளது. மக்கள் நலக் கூட்டணிக்கும்கூட குமரியில் தொடக்கத்தில் ஆதரவு இருந்ததும் நிதர்சனம். நாகர்கோவில் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ, கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து, ‘‘இங்கே அமர்ந்திருப்பவர்கள் நமது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால், அதே அளவில் இங்கே நின்றுகொண்டிருப்பவர்கள் நடுநிலையாளர்கள். அவர்கள்தான் எஜமானர்கள். அவர்களை நம்பித்தான் களம் காண்கிறோம்” என்றெல்லாம் சிலாகித்துச் சென்றார். நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டதில் மதிமுக வேட்பாளர் கிறிஸ்டியன் ராணி மட்டுமே கிறிஸ்தவ வேட்பாளர். 6 கட்சிக் கூட்டணியோடு சேர்ந்து அவர் எடுத்த வாக்குகள் மொத்தமே 5,803 தான். சிறுபான்மையினர் ஒரு சேர திமுகவை ஆதரித்ததன் வெளிப்பாட்டைத் தேர்தல் முடிவில் நேரடியாகவே உணர்ந்துள்ளனர் மந கூட்டணியினர்.

அடுத்த குறியீடு

ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது இங்குள்ள அரசியல் சூழலைத் தெளிவாக விளக்கும். தேர்தல் களம் பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்த நேரம். பாஜகவின் பிரச்சார வாகனத்தில் பேசிய ஒருவர், “அதிமுகவின் வேட்பாளர்கள் ஜெயலலிதாவிடம் குனிந்துதான் பேச வேண்டும்” என்று விமர்சிக்கிறார். உடனே அங்கிருந்த உள்ளூர் அதிமுகவினர், “ஜெயலலிதாவைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காதீர்கள்” என்கின்றனர். பாஜக தரப்பு இதற்குச் சொன்ன பதில் இது: “நாங்கள் இந்துக்கள். அப்படித்தான் பேசுவோம்.” அதிமுக தரப்பினர் உடனே சொன்னார்கள், “நாங்களும் இந்துக்கள்தான்!” பாஜக தரப்பு பதிலுக்குச் சொன்னது, “நீங்கள் இந்துக்கள் என்றால், பாஜகவை அல்லவா ஆதரிக்க வேண்டும்?” இப்படி உரையாடல் தொடர்கிறது எனில், சிக்கல் எப்படி இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

இடதுசாரிகளுக்கு வலிமையான களங்களில் ஒன்றாக இருந்தது இது. “மாவட்டத்தில் பணபலமும், சாதாரண மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தியதும் எங்கள் அணியின் வெற்றியைப் பெரிதும் பாதித்தது” என்று தோல்வியைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் மார்க்ஸிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டச் செயலர் முருகேசன். விளவங்கோடு தொகுதி கடந்த 9 தேர்தல்களில் 5 முறை மார்க்ஸிஸ்ட் கட்சியும், 4 முறை காங்கிரஸ் கட்சியும் வென்ற தொகுதி. இம்முறை வெற்றிபெற்று காங்கிரஸ் சமன் செய்துள்ளது. மார்க்ஸிஸ்ட் கட்சியோ பாரம்பரியம்மிக்க இத்தொகுதியில் இம்முறை மூன்றாவது இடம்பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் பாஜக!

தமிழகத்தின் புறக்கணிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது குமரி. இங்குள்ள குண்டுகுழி சாலைகளும், உருக்குலைந்த பேருந்துகளுமே மாவட்டத்தின் வளர்ச்சிச் சூழலைச் சொல்லும் எளிமையான குறியீடு. இந்நிலையில், மதத்தை முன்னிறுத்தி நடந்துவரும் அரசியல் ஆபத்தானதாக மாறிவருகிறது. தமிழகம் முழுமைக்கும் இதே சூழல் பரவினால் மிக மோசமான நிலை ஏற்படும்!

- என்.சுவாமிநாதன்,

தொடர்புக்கு: swaminathan.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x