Last Updated : 03 May, 2016 10:57 AM

 

Published : 03 May 2016 10:57 AM
Last Updated : 03 May 2016 10:57 AM

வருமுன் காப்பவருக்கே வாக்கு!

தமிழகத்தின் பெரும்பகுதி தற்போது தண்ணீர்ப் பஞ்சத்தில் தத்தளிக்கிறது. தனிநபருக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் நீரை வைத்துத்தான் ஒரு நாட்டின் தண்ணீர் நிலைமை மதிப்பிடப்படுகிறது. அது தண்ணீர்க் குறைவு (water stress), தண்ணீர்ப் பற்றாக்குறை (Water scarcity), தண்ணீர்ப் பஞ்சம் (absolute water scarcity) எனும் நிலைகளாகப் பிரித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

ஒரு தனிநபருக்கான ஆண்டு நீர்வளம் 1,700 கனமீட்டர். அதற்குக் குறைந்தால் அது தண்ணீர்க் குறைவு. அதுவே 1,000 கனமீட்டருக்கும் கீழே குறைந்தால் தண்ணீர்ப் பற்றாக்குறை. 500 கனமீட்டருக்கும் குறைந்தால் தண்ணீர்ப் பஞ்சம். அதன்படி பார்த்தால் தமிழகம் தண்ணீர்ப் பஞ்சத்தின் பூமிதான்.

எதிர்காலப் பஞ்சம்

தமிழகத்தின் நீர்வளம் 1,643 டி.எம்.சி. அதை தற்போதைய மக்கள்தொகையோடு வகுத்தால் கிடைக்கும் தனிநபர் ஆண்டு நீர்வளம் 607 கனமீட்டர். இது 2050-ல் என்னவாகும்? 444 கனமீட்டர் ஆக மாறும். தமிழ்நாட்டில் தற்போதைய தனிநபர் தண்ணீர்ப் பற்றாக்குறை 64%. அதாவது, 1,093 கனமீட்டர். 2050-ல் பற்றாக்குறை மேலும் 10% அதிகரிக்கும். அப்போது கடும் தண்ணீர்ப் பஞ்சம் வரும். அதனால், வருமுன் காப்பதற்காக, தமிழக நீர்வளத்தைப் பெருக்கவும் சேமிக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நலமுடன் வாழ தனிநபருக்கு ஆண்டு ஒன்றுக்கு 1,700 கனமீட்டர் நீர் தேவை. குறைந்தபட்சம் 1,000 கனமீட்டர் தண்ணீராவது கட்டாயம் தேவை. இந்தக் கணக்கின்படி இன்றுள்ள தமிழக மக்களுக்கு 2,707 டி.எம்.சியும், 2050-ல் 3,699 டி.எம்.சியும் தண்ணீர் தேவை. ஆனால், இருப்பதோ 1,643 டி.எம்.சி.தான். ஆக, தற்போதைய நீர்ப் பற்றாக்குறை 1,064 டி.எம்.சி. 2050-ல் இது 2,056 டி.எம்.சியாக உயரும்.

மேலாண்மை வழிகள்

மழைநீர் சேகரிப்பு, செயற்கை நிலநீர்ச் செறிவு, கழிவு நீரை நன்னீராக்கிப் பயன்படுத்துவது, கோடை உழவு, விவசாயத்தில் நீர்மேலாண்மை, கடல் நீரை நன்னீராக்கிப் பயன்படுத்தல், உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தல், பாசனத் திறனை அதிகப்படுத்தல், நில நீரைக் கடல் நீர் உவராக்குவதைத் தடுத்தல், நீர்நிலைகளைச் செப்பனிடல், தமிழக நதிகளை இணைத்தல் ஆகிய நீர்மேலாண்மை வழிகளைக் கடைப்பிடிக்கலாம். அவற்றாலும் தமிழக நீர்ப் பற்றாக்குறையை ஓரளவுக்கு மட்டுமே சமாளிக்க முடியும். பற்றாக்குறையை முற்றிலும் போக்க வேண்டும் என்றால், இந்திய நதிகளில் ஒன்றைத் தமிழகத்துக்குத் திருப்பிவிடுவது ஒன்றே வழி.

நதியைத் திருப்புதல்

இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 60,155 டி.எம்.சி வெள்ளநீர் கடலில் கலக்கிறது. இது மேட்டூர் அணையின் கொள்ளளவைப் போல 644 மடங்கு. வீணாகும் வெள்ள நீரின் நெல் உற்பத்தி மதிப்பு 30 லட்சம் கோடி ரூபாய். இந்த நீர் தமிழக மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு 476 ஆண்டுகளுக்குப் போதுமானது. தமிழகத்தின் தற்போதைய நீர்ப் பற்றாக்குறையைவிட 57 மடங்கு அதிகமான அளவு வெள்ளநீர் இந்திய நதிகளின் வழியாகக் கடலில் கலக்கிறது.

தமிழகத்துக்கு அருகில் உள்ள தென்னக நதிகளை இணைத்து தமிழகத் தண்ணீர்ப் பற்றாக்குறையை விரைவாகப் போக்கலாம். விவசாயிகள் தங்களின் நிலத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கலாம். ஒவ்வொரு குட்டையிலும் சுமார் 1,500 கனமீட்டர் நீர் தேக்கலாம். பண்ணைக் குட்டைகளால் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன. எனவே, பண்ணைக் குட்டை அமைக்கும் செலவை அரசே ஏற்க வேண்டும்.

இதுவும் பேரிடர்தான்

தண்ணீர்ப் பஞ்சமும் ஒரு பேரிடர்தான். இந்திய அரசின் பேரிடர் நிதியைப் பயன்படுத்தி தமிழகத்தைக் காக்கலாம். தண்ணீர் பிரச்சினையால்தான் விவசாயிகள் பிழைப்புத் தேடி பெருநகரங்களில் தஞ்சம் அடைகின்றனர். பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பெய்யும் மழையைச் சேகரிக்காமல் கடலில் விட்டதே காரணம். காவிரி ஆற்றுப்படுகையில் 1991 முதல் 2005 வரை சுமார் 1,039 டி.எம்.சி. வெள்ள நீர் கடலில் கலந்துள்ளது. இதன் நெல் உற்பத்தி மதிப்பு 51,950 கோடி ரூபாய். 2015-ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 500 டி.எம்.சி. வெள்ள நீரும், சென்னை நகரில் மட்டும் 75 டி.எம்.சி. வெள்ள நீரும் கடலில் விடப்பட்டுள்ளது.

தண்ணீருக்காகப் பக்கத்து மாநிலங்களையும் மத்திய அரசையும் நீதிமன்றத்தையும் எதிர்பார்க்கும் தமிழகம், தனக்குள் உற்பத்தியாகும் மழை நீரை வீணாக்கலாமா? இந்த நிலையை யார் மாற்றுவார்?

தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் கட்சிக்கே எனது வாக்கு!

நீங்களும் அப்படித்தான் என்பது எனக்குத் தெரியும்.

கட்டுரையாளர் முன்னாள் இயக்குநர், பருவகால மாற்ற ஆய்வு மையம், பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x