Published : 01 Jun 2022 07:30 AM
Last Updated : 01 Jun 2022 07:30 AM

பசுமை ஆற்றல்: தமிழகம் பின்னுக்குச் சென்றது ஏன்?

பிரியங்கா திருமூர்த்தி

நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த முன்முயற்சிகளில், பசுமை ஆதாரங்களைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதில் தமிழ்நாடு பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்தது. நாட்டின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தியாளராக இருப்பதோடு, இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக் கட்டமைப்பு நிறுவப்பட்டிருந்த வகையிலும் தமிழ்நாடு முதலிடத்தை வகித்துவந்தது. ஆனால் மார்ச் 2022 நிலவரப்படி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனில் அபரிமித வளர்ச்சியடைந்து ராஜஸ்தானும் குஜராத்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தமிழ்நாடு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

இதற்கான காரணத்தை எம்பெர் என்ற உலகளாவிய சிந்தனைக் குழுவின் அறிக்கை வெளிப்படுத்துகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளையும் மாநிலவாரியாக நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் குறித்துப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் வெளியிடும் தரவுகளையும் இந்த அமைப்பு பகுப்பாய்வு செய்கிறது. ஏப்ரல் 28-ல் வெளியான எம்பெர் அறிக்கைப்படி, கடந்த ஆண்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளில் தமிழ்நாடு 75 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளது.

நாடு முழுவதும் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனை 175 ஜிகாவாட் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மார்ச் மாத நிலவரப்படி, அந்த இலக்கில் 110 ஜிகாவாட் உற்பத்தி மட்டுமே எட்டப்பட்டுள்ளது. இந்த உற்பத்திக் குறைபாட்டில் மூன்றில் இரண்டு பங்கு பற்றாக்குறை ஏற்பட்டதற்கு ஐந்து மாநிலங்களே காரணம். அவற்றில் தமிழ்நாடும் ஒன்று.

நீடித்த மின்னாற்றல் உற்பத்திக் கட்டமைப்பை உருவாக்குவதில், மற்ற மாநிலங்களுக்குத் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழும் எனக் காலநிலை ஆர்வலர்களும் ஆற்றல் துறை வல்லுநர்களும் கருதிவந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் தற்போது உற்பத்திப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

பழைய காற்றாலைகளை மீண்டும் இயக்குவது சார்ந்த கொள்கை முடிவு இல்லாதது, மேற்கூரை சூரிய மின் உற்பத்திக்கான கொள்கைகள் - நடைமுறைகளைப் போதுமான அளவுக்குச் செயல்படுத்தாதது ஆகியவையே அவர்கள் சுட்டிக்காட்டும் முதல் பிரச்சினை. புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதற்கான இரண்டாவது காரணம், ஆற்றலுக்கான ஆதாரமாக நிலக்கரியைப் பெருமளவு நம்பியிருப்பது. இறுதிக் காரணம், மின் விநியோக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினை.

மார்ச் 2022 நிலவரப்படி, 320 மெகாவாட் அளவுக்குச் சூரிய மேற்கூரை மின்னுற்பத்தித் திறனுக்கான கட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ளது: 75% தொழில்துறை, 19% வணிகம், 6% பொதுத் துறை. 2019-ல் உருவாக்கப்பட்ட மின்சக்திக் கொள்கையின்படி, 2023-க்குள் 3,600 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி என்கிற எல்லையைத் தொடுவது என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இது வெறும் 10% மட்டுமே. மேற்கூரை சூரிய உற்பத்திக் கட்டமைப்பை நிறுவுவதை ஊக்கப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், அது சார்ந்த வளர்ச்சியின் வேகத்தைக் கணிசமாகக் குறைத்துவிட்டன என்பதைச் சமீபத்திய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நெட் மீட்டரிங் வழங்கப்படாததால், 2017-லேயே தன் முன்னணி இடத்தைத் தமிழ்நாடு இழந்தது. குறைந்த அழுத்த மின்சாரம் கொண்ட நுகர்வோருக்கு (112 கிலோவாட்டுக்கும் குறைவான பயன்பாடு), நெட் பில்லிங் கிடைத்தாலும்கூட அதிகமான தொழில்களை உள்ளடக்கிய உயர் அழுத்த நுகர்வோர் மின் உற்பத்திக் கட்டமைப்புக்கான முன்னேற்பாடு வழங்கப்படவில்லை. புதிய நெட் மீட்டரிங் முறைக்கு மாறுவதற்கான வாய்ப்பு, உள்நாட்டு சூரிய மின்சக்திப் பயனர்களுக்கு 2021-ல் வழங்கப்பட்டது.

ஆனால், இணைப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட அறிமுகக் கட்டணம் (உயர் அழுத்த யூனிட்டுக்கு ரூ.1.27, குறைந்த அழுத்த யூனிட்டுக்கு ரூ.0.83), இந்த முயற்சிக்குத் தடையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 5% கட்டண அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதால், இணைப்புக் கட்டணங்கள் சூரிய மின் உற்பத்திக்கு ஆகும் செலவைவிட அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மீதான விருப்பத்தைப் பயனர்களிடையே குறைக்கும் என்று வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

அத்துடன், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தபோதிலும், உற்பத்தித் திறனைத் தொடர்ந்து அதிகரிக்கும் வகையில் புதிய கொள்கைகள், மாற்றங்களை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. “திறன் குறைவான பழைய காற்றாலைகளை மீண்டும் இயக்காமல், அதிகத் திறனுடைய புதிய காற்றாலைகளை நிறுவுவது குறித்த கொள்கையை அரசு அறிவிக்கவில்லை. இந்த நடவடிக்கையின் மூலம் அதிகளவிலான காற்று வீசக்கூடிய பகுதிகளில், அதிக சக்தி வாய்ந்த காற்றாலைகளை அமைக்க முடியும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இதுகுறித்த எந்தக் கொள்கையும் அறிவிக்கப்படவில்லை” என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜன்.

தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க வளங்கள் நிறைந்த மாநிலமாக இருந்தாலும், ஆற்றல் உற்பத்திக்கான முதன்மையான ஆதாரமாகத் தொடர்ந்து நிலக்கரியை மட்டுமே சார்ந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முதன்மையானதாகக் கருத விரும்பாததற்கு அதிகாரிகள் முன்வைக்கும் சில காரணங்கள்: இடைவிட்டுக் கிடைக்கும் தன்மை, நம்பகத்தன்மை இல்லாதது, ஆற்றல் சேமிப்புக்கான அதிக செலவு.

“நிலக்கரியைத் தவிர்த்தால், மின் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. இந்தச் சிந்தனையைத் துறக்கும் வகையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக சேமிப்புச் செலவுகள் குறைந்துவருவதால், அதற்கேற்பத் திட்டங்களைத் தீட்ட வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்குப் பதிலாக, வெப்ப அலை, மின் தேவை சார்ந்த ஆயத்தமின்மை காரணமாக அதிக நிலக்கரியைச் சேமித்து வைக்கவே தமிழ்நாடு விரும்புகிறது. ஒட்டுமொத்த மின் உற்பத்திக் கட்டமைப்பில் எந்த அளவுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேர்க்கலாம் என்று பார்க்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை” என்கிறார் உலக ஆதார நிறுவனத்தின் இந்திய இணை இயக்குநரான தீபக் ஸ்ரீராம் கிருஷ்ணன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊரடங்குகளின்போது மின் தேவை குறைந்துவிட்டதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான தேவை உருவாகாமல் போனது, தற்போதைய சிக்கலைத் தீவிரப்படுத்தியிருக்கலாம். கூடுதலாக, தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிலக்கரி ஆலைகள் முழு திறனுக்குச் செயல்படுவதில்லை என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

“தமிழ்நாட்டின் மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்ஸ்) நிலக்கரி சார்ந்த அம்சங்களை மேம்படுத்துவதற்காகச் செயல்பட்டுள்ளன. மேலும், புதிதாக வரவுள்ள திட்டங்களில் நிலக்கரி ஆலைகள் உள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த திட்டங்களைக் கொண்டுவருவதற்கான செயல்பாடுகளை இது மட்டுப்படுத்துகிறது. இப்போதுள்ள நிலக்கரி ஆலைகள் அதிக உற்பத்தித் திறன் கொண்டவை என்றாலும், 2020-2021-ல் அவை 43% மட்டுமே மின்னுற்பத்தி செய்துள்ளன” என்கிறார் உலக ஆற்றல் பொருளாதாரம் - நிதிப் பகுப்பாய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் காஷிஷ் ஷா.

தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகம் ஒரு பொதுத் துறை நிறுவனம். இது தமிழ்நாட்டில் நான்கு பெரிய அனல் மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை இயக்குகிறது. மின் பகிர்மானக் கழகம் பல ஆண்டுகளாக நிதி சார்ந்த போராட்டங்களை எதிர்கொண்டுள்ளது. அத்துடன், பல சூழ்நிலைகளில் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையைப் பகிர்மானக் கழகத்தால் செலுத்த முடியவில்லை.

முதலீடு - உற்பத்தியாளர்களின் ஆர்வமின்மைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள், தமிழ்நாட்டின் ஆற்றல் சார்ந்த மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்துவருபவர்கள். “மின் பகிர்மானக் கழகம் சரியான நேரத்தில் பணம் செலுத்தாதபோது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்கள் மாநிலத்தில் முதலீடு செய்வது தடுக்கப்படுகிறது. எனவே, மேற்கொண்டு புதிய திட்டங்கள் - முதலீடுகளுக்காகத் தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகத்தை அணுகுவதில் ஆபத்து உள்ளது” என்கிறார் காஷிஷ் ஷா.

- பிரியங்கா திருமூர்த்தி, சுயாதீன சூழலியல் இதழாளர். தொடர்புக்கு: priyankathirumurthy24@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x